அர்த்தநாரீசுவர வர்மா
ராஜரிசி அர்த்தநாரீசுவர வர்மா இந்திய சுதந்திர போராட்ட வீரர்,[1] கவிஞர் மற்றும் பத்திரிகையாளர். இவர் சேலத்தில், சுகவனம் கவுண்டர் - லட்சுமி தம்பதிக்கு மகனாக 1874 ஜீலை 27-ல் பிறந்தார். திருப்பூந்துருத்தி மடத்தில் குருகுல கல்வியை முடித்த இவர், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவர். இவர் அர்தநாரிஸ்வர கவுண்டர், ராஜரிசி என்றும் அழைக்கப்படுவார்.[2]
பாரதியார் மீதான பற்று
1911-ல் சேலத்தில் இயங்கிய சுதேசாபிமானி அச்சுக்கூடத்தில் மேனேஜராக பணிபுரிந்தார் வர்மா. அப்போது பாரதியின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டவர், சுதந்திரப் போராட்டங்களில் தன்னையும் இணைத்துக் கொண்டார். தானும் கவிதைகளையும் கருத்துக் களையும் எழுதி வெளியிட்டார். அடுத்த சில ஆண்டுகளில் பாரதியாரின் மரணம் நிகழ்கிறது. அந்த துக்க நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட வர்மா, பாரதிக்காக பதினாறு வரிகளில் இரங்கற்பா எழுதினார். அதை சுதேசமித்திரன் பத்திரிகை வெளியிட்டது.[2]
பத்திரிகை துறையில்
வர்மாவும் அவரது நண்பர் கோவை பூபதி பழனியப்பாவும் சுதந்திரக் கருத்துக்களை பரப்புவதற்காக சத்திரியன் என்ற பத்திரிகையை தொடங்க இருந்தார்கள். ஆனால், அம்முயற்சி முழுவடிவம் பெறுவதற்குள் பழனியப்பா காலமாகிவிட்டார் . இதையடுத்து நண்பனுக்காக சத்திரியன் பத்திரிகையை 1923-ல், பி.மாணிக்கம்பிள்ளை என்பவரை பதிப்பாளராக வைத்து தொடங்கினார் வர்மா. 1931-ல் வீரபாரதி என்ற பத்திரிகையின் ஆசிரியரானார் வர்மா. இந்தப் பத்திரிகைக்கான நிதி ஆதாரத்தை காங்கிரஸ் கட்சி தந்தது.
இந்திய மொழி பத்திரிகைகளுக்கான தணிக்கைச் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவந்தது அன்றைய ஆங்கிலேய அரசு. அரசுக்கு எதிரான வன்முறைகளை தூண்டிவிடும் பத்திரிகைகள் பட்டியலிடப்பட்டன. அதில், தமிழகத்திலிருந்து வெளிவந்த வீரபாரதி, விஷ்வ கர்நாடகா, காங்கிரஸ் பத்திரிகைகளும் இருந்தன.வீரபாரதியுடன், முன்பு நின்றுபோன சத்திரியன், சத்திரிய சிகாமணி, தமிழ்மன்னன் உள்ளிட்ட பத்திரிகை களையும் நடத்தி வந்த வர்மா, பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதி இருக்கிறார். இலக்கியத் தளத்திலும் தனக்கான இடத்தைத் தக்கவைத்தவர் வர்மா.[2]
திரு.வி.க. பாராட்டு
“சுதந்திரப் போராட்டத்தில் தீவிர போக்கை ஆதரித்தவர் என்றபோதும் காந்தியை கடவுளுக்குச் சமமாக மதித்தவர் வர்மா. 1920-ல் நடந்த வட ஆற்காடு அரசியல் மாநாட்டில் பேசிய திரு.வி.க. ‘சுப்பிரமணிய பாரதியின் பாடல்களும் அர்த்தநாரீச வர்மாவின் பாடல் களும் மக்கட்கு தேசபக்தியை ஊட்டுவது போல் கற்றை கற்றையாக அரசியல் நூல்களை ஓதியவரின் சொற்பெருக்குகளும் ஊட்டா’ என புகழ்ந்திருக்கிறார்.[3]
மறைவு
அர்த்தநாரீச வர்மா தனது இறுதி நாட்களை திருவண்ணாமலையில் தங்கிக் கழித்தார். 1964-ல் தனது 90-வது வயதில் மரணத்தை தழுவிய வர்மாவுக்கு திருவண்ணாமலையிலேயே சமாதியும் எழுப்பப்பட்டது..[2] இவரை நினைவூட்டும் விதத்தில் ஆண்டுதோறும் குடந்தை, சேலம் மற்றும் திருவண்ணாமலையில் கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகிறது.[4]
மேற்கோள்கள்
- ↑ "குடந்தையில் விடுதலை போராட்ட வீரர் குறித்த கருத்தரங்கம்". தினகரன். http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=526172&cat=504.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2.0 2.1 2.2 2.3 "பாரதிக்கு இரங்கற்பா பாடிய அர்த்தநாரீசவர்மாவை தெரியுமா?". தி இந்து. http://tamil.thehindu.com/opinion/reporter-page/article19649446.ece.
- ↑ ஆய்வாளர்கள் பார்வையில் அர்த்தநாரீசவர்மா. மகேந்திரன் பதிப்பகம். http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=346641.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "கருத்தரங்கம்". தினமலர். http://www.dinamalar.com/news_detail.asp?id=155936&Print=1.