அஃக் (இதழ்)
அஃக் என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், சேலத்தில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இவ்விதழ் எழுத்தாயுத மாத ஏடு என்ற பிரகடனத்துடன் 1972 சூனில் இருந்து 1978 வரை பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்தும் அவ்வப்போதுமாக 20 இதழ்கள்வரை வெளிவந்தது.
இந்த இதழானது நவீன இலக்கியத்தின் பதிவை, நுட்பமாகப் படைப்பு வாளெடுத்து புதுமை காட்டி வந்த கலை நுணுக்க படைப்புக்களை வெளியிட்டது. பிரமிளின் 38 கவிதைகளை கண்ணாடியுள்ளிருந்து என்ற தலைப்பிட்டு ஒரே இதழில் கொண்டுவந்தார் பரந்தாமன், இதுவே பிரமிளின் முதல் கவிதைத் தொகுப்பாக் கருதலாம்.[1]
வரலாறு
அஃக் இதழ் தமிழ்நாட்டின், சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் 1972 சூன் மாதம் முதல் வெளியானது. இதழின் ஆசிரியரான பரந்தாமனால் அரவது வீட்டில் தொடங்கப்பட்டபிருந்தாவனம் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்தது. இதன் முதல் இதழின் அட்டையும் உள் அமைப்பும் அச்சும் அழகாய், புதுமையானதாய் விளங்கின. இலக்கியவாதிகளுக்கு நிறைந்த திருப்தியும் நம்பிக்கையும் தரத்தக்க விதத்தில் உள்ளடக்கம் அமைந்திருந்தது. அட்டை முழுவதும் ஃ என்ற எழுத்தையே மூன்று கண்களாகச் சித்திரிக்கும் வடிவங்களும், A Q என்ற எழுத்துக்களும் விரவிக் கிடந்தன. ஒவ்வொரு இதழும் தரமாகவும் தனித் தன்மையோடும் திகழ வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். பரந்தாமன் அச்சுக் கலையில் தேர்ந்தவர்; நல்ல பயிற்சி பெற்றவர். இந்த இதழ் அக்காலகட்டத்தில் நல்லத் தரத்தோடும், வடிவமைப்போடும் வெளிவந்தது.[2] இதனால் அஃக், பதிப்புக்கும் அச்சுக்கும் தேசியப் பரிசு-1976-ல் நற் சான்று பெற்றது.[3] 1972 சூனில் தொடங்கி 1980 சூனில் அஃக் நின்று விட்டது. எட்டாண்டுகளில் 22 இதழ்கள் வெளியாகி பின்னர் நின்றுவிட்டது.
படைப்புகள்
இதன் முதல் இதழில் முதலாவதாக கி. ராஜநாராயணன் எழுதிய 'ஜீவன்' என்ற கதையும், அடுத்து, வெ. சாமிநாதன் சிந்தனைகள். ‘சில கேள்விகள், சில பதில்கள், சில தெரியாது'கள்.' வல்லிக்கண்ணன் குறிப்பு ஒன்று. அம்பையின் நாடகம் 'பயங்கள்,' கடைசிப் பக்கத்தில் க. நா. சு. சிந்தனை- 'இலக்கியத்தில் சோதனை.' போன்றவை இடம்பெற்றன. தலையங்கம், கொள்கை விளக்கம், லட்சிய முழக்கம் போன்ற சம்பிரதாயமான ஒலிபரப்புகள் எதுவும் இல்லாமலே தோன்றியது இந்தப் பத்திரிகை. 4-வது இதழ் கவிதைச் சிறப்பிதழாகத் தயாரானது. அப்போது (புதுக்) கவிதை எழுதிக்கொண்டிருந்த பலரும் அதில் கவிதைகள் எழுதியுள்ளனர். கலாப்பிரியாவின் 'சக்தி' ஒன்பது பக்கங்களில் இடம் பெற்றது. அரூப் சிவராமின் பிரசித்தி பெற்ற கவிதை E-MC2 இந்த இதழில் வந்தது.[4]
இதன் 8-வது இதழ் கண்ணாடியுள்ளிலிருந்து என்ற தலைப்புடன், சாமிநாதன் முன்னுரையோடு, தருமு சிவராம் கவிதைச் சிறப்பிதழ் என்று வெளியாயிற்று. வண்ணதாசன், நகுலன், சார்வாகன், நா ஜெயராமன், ஆர். ராஜேந்திர சோழன் கதைகள் முதல் வருட இதழ்களில் பிரசுரம் பெற்றுள்ளன. கன்னட நாடகம் கிரீஷ்கர்னாடின் ஹயவதனா, ஜே. கிருஷ்ணமூர்த்தியின் தத்துவம், ஸெர்கி ஐஸன்ஸ்டீனின் திரைப்படக் குறிப்புகள் பற்றியும் கட்டுரைகள் வந்தன.[4]
அஃக்கின் 13வது இதழ் (இரண்டாவது ஆண்டுத் துவக்க இதழ்) 1974 திசம்பர் மாதம்தான் வந்தது. முன்னரே அறிவித்தபடி, அது வடிவம் மாறியிருந்தது. 13-வது இதழ் முடிய பெரிய அளவில் வந்த ஏடு இப்போது, விகடன் அளவுக்கு மாற்றம் பெற்றது. இதழ்தோறும் விசேஷமான லினோகட் அட்டையில் வர்ணத்தில் அச்சிடப் பெற்றது. இந்த இதழ் சிறப்பாக அமைந்துள்ளது. அரூப் சிவராம் மூன்று கவிதைகள், நாடகக் கட்டுரை பற்றிய கோபாலி எழுதிய விளக்கம் சில பக்கங்கள், ந. முத்துசாமி கதை வண்டி, ராபர்ட் ஃபிராஸ்டின் சில கவிதைகள், சுந்தர ராமசாமியின் புதிய கதைகள் பற்றிய நா. ஜெயராமன் சிந்தனைகள், வே. மாலி கவிதை ஒன்று, மோகன் ராகேஷின் நாடகங்கள் பற்றிய எஸ். என். கணேசன் கட்டுரை, கலாப்பிரியா கவிதை ஒன்று. உள் பக்கங்களிலும் நவீன சித்திரங்கள் கலர்களில் அச்சாகியிருந்தன.[4]
14-வது இதழ் (சனவரி-மே 1975 ) இந்திரா பார்த்தசாரதியின் போர்வை போர்த்திய உடல்கள் நாடகம் மட்டுமே கொண்டிருந்தது.[4]
15-வது இதழ் (சூன்-டிசம்பர் 1975) ந. முத்துசாமி கட்டுரை, அரூப் சிவராம் கட்டுரை ஆகிய இரண்டு மட்டுமே கொண்டிருந்தன. அதன் பிறகு பத்திரிகை தொடர்ச்சியாக, ஒழுங்காக வரவில்லை. திடீரென்று எப்பவாவது ஒரு இதழ் வரும். இதைக் குறித்து 1978 ஜனவரியில் கி. ராஜநாராயணன் எழுதிய கடிதம் ரசமாக இருந்தது.[4]
'பரந்தாமனுக்கு தலைவணங்குகிறேன். தேன் கூட்டை எத்தனை தரம் அழித்தாலும் திரும்பவும் திரும்பவும் அது கூடு கட்டித் தேன் நிரப்பும். அயராத உங்கள் செய்கை உணர்ச்சி வயப்படச் செய்கிறது என்னை. போராடுவதே வாழ்க்கை.'
நிறுத்தம்
அஃக் 22-வது ஏடு என்று 1980இல் (சூன்-செப்டம்பர்) வந்தது. அதுதான் இதன் கடைசி இதழாக ஆனது.[4] இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
உசாத்துணைகள்
- ↑ கலாப்பிரியா (சூலை 2017). "அஃக் பரந்தாமன்: சலிக்காத இலக்கியத் தேனீ". தி இந்து. doi:24.
- ↑ http://www.thamizham.net/ithazh/oldmag/om1/om153-u8.htm
- ↑ பரந்தாமன் (27 செப்டம்பர் 2006). "அஃக்". கட்டுரை (koodal.com). http://tamil.koodal.com/article/tamil/ilakkiyam.asp?id=542&title=aq-book. பார்த்த நாள்: 27 சூலை 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல் (மணிவாசகர் பதிப்பகம்): pp. 83-88. https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%83(_%E0%AE%85%E0%AE%83%E0%AE%95%E0%AF%8D_). பார்த்த நாள்: 13 நவம்பர் 2021.