அ. சையத் இப்ராஹிம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அ. சையத் இப்ராஹிம் (Dr.A. Syed Ibrahim, பிறப்பு: சனவரி 20 1947) ஹிமானா சையத் எனும் பெயரால் அறியப்பட்ட இவர் தமிழ்நாட்டில் முன்னணி இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், ஆய்வுகள், ஆய்வுக்கட்டுரைகள் என தமிழ் இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் பங்களிப்பு வழங்கி வரும் இவர் ஒரு மருத்துவராவார். இவரொரு புகைப்பட கலைஞரும்கூட.
வரலாற்றுச் சுருக்கம்
இந்தியா, தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் சித்தார் கோட்டை எனுமிடத்தில், மல்லாரி அப்துல் கனி மரைக்காயர், உம்மு ஹபீபா தம்பதியினரின் புதல்வராக சனவரி 20 1947 இல் பிறந்தார். தேவகோட்டை தேபிரித்தோ பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்று பின்பு சென்னை லொயோலா பள்ளியில் உயர்கல்வியைத் தொடர்ந்தார். 1966 ஆம் ஆண்டில் மதுரை மருத்துவக் கல்லூரிக்குத் (மதுரை பல்கலைக்கழகம்) தெரிவான இவர் 1972ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் பட்டத்தைப் பெற்றார். இவரின் மனைவி ஹிமானாபர். இத்தம்பதியினருக்கு அப்துல்கனி (தகவல் தொழில்நுட்பம், சிங்கப்பூர்), சமீம் அஸ்மி (சத்தணவு,மலேசியா) டாக்டர் வாஸிம்கான் (காது, மூக்கு, தொண்டை மருத்துவம், இந்தியா) ஆகிய மூன்று செல்வங்கள் உளர். தற்போது சென்னை அரும்பாக்கம் எனுமிடத்தில் வசித்துவருகின்றார்.
தொழில்
மதுரை மருத்துவக் கல்லூரியில் பட்டம்பெற்று வெளியேறிய இவர் குடும்ப மருத்துவராகவும், பகுதிநேரப் பேராசிரியராகவும், குடும்ப ஆலோசகராகவும் பணிபுரிந்து வருகின்றார்.
இலக்கியப் பங்களிப்பு
பள்ளிக் கல்வியை மேற்கொள்ளும் காலகட்டங்களிலேயே வாசிப்புப் பழக்கமும், கவிதைகள் எழுதும் பழக்கமும் இவரிடம் இயல்பாகவே காணப்பட்டது. கற்கும் காலத்தில் நூற்றுக்கணக்கான கவிதைகளை தனது நோட்டுப் புத்தகங்களில் எழுதிவருவதை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டிருக்கின்றார். இந்நிலையில் இவரின் முதல் கவிதை மறுமலர்ச்சி இதழில் 1964ஆம் ஆண்டில் பிரசுரமானது. முதல் சிறுகதை மலர்வதி (1987 அக்டோபர்) மாத இதழில் பிரசுரமானது. அதைத் தொடர்ந்து இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து வெளிவரும் பல்வேறுபட்ட இதழ்களிலும், பத்திரிகைகளிலும் இவர் எழுதிவருகின்றார். இதுவரை இவரால் 650 சிறுகதைகளும், 10 புதினங்களும், 700 கட்டுரைகளும், 500 கவிதைகளும் எழுதப்பட்டுள்ளன. ஆங்கில மொழியிலும் அவ்வப்போது எழுதிவருகின்றார்.
எழுதியுள்ள நூல்கள்
ஹிமானா சையித் அவர்கள் இதுவரை 39 நூல்களை எழுதிவெளியிட்டுள்ளார்.
- சிறுகதைத் தொகுதிகள் 12
- புதினங்கள் 8
- மருத்துவ நூல்கள் 4
- கட்டுரை நூல்கள் 14
- கவிதை 01
பத்திரிகைத்துறை
தமிழ் நாட்டிலிருந்து நான்கு தசாப்த காலங்களாக வெளிவரும் நர்கீஸ் மாத இதழில் கௌரவ ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.
வெளியீட்டுப் பணி
தமிழகத்தில் மல்லாரி பதிப்பக நிறுவனர் இவரே.
அங்கீகாரங்கள்
- சென்னை, மதுரை காமராசர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் இவரின் இலக்கியங்களை இதுவரை ஐந்து ஆய்வு மாணவர்கள் ஆய்வு செய்து எம்.பில்.பட்டம் பெற்றுள்ளனர்.
- மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் செல்வி சண்முகவனம் எனும் மாணவி இவரின் இலக்கியத்தை ஆராய்ந்து பி.எச்.டி. பட்டம் பெற்றுள்ளார்.
- திருச்சி ஜமால் முகம்மது கல்லூரிப் பேராசிரியர் முகம்மது இக்பால் அவர்களும் இவரின் இலக்கியத்தை ஆராய்ந்து பி.எச்.டி. பட்டம் பெற்றார்.
- இவரது 'ருசி' சிறுகதைத் தொகுதி கேரள பல்கலைக் கழகத்தில் 1992 முதல் 1996 வரை முதுகலை மாணவர்களின் பாடத்திட்டத்தில் வைக்கப் பட்டிருந்தது.
- கேரள மேல்நிலைப்பள்ளி 11 வகுப்புப் பாடத்திட்டத்தில் இவரின் கோடுகள் கோலங்கள் நாவல் 2004 - 2006 சேர்க்கப்பட்டிருந்தது.
- இலங்கையில் எட்டாம் வகுப்புப் பாடநூலில் ஆணிவேர் சிறுகதை சேர்க்கப்பட்டுள்ளது.
- ஹிமானா சையத்தின் சிறுகதைகள் - ஓர் ஆய்வு - 250 பக்க ஆய்வு நூல், ஆய்வு: டாக்டர் ஆலிஸ், பாரதிதாசனார் பல்கலைப் பேராசிரியர் எழுதியுள்ளார்.
விருதுகள்
- தமிழ் மாமணி,
- பாரத் ஜோதி,
- சிறந்த குடிமகன்
பிறதுறை ஈடுபாடுகள்
- இலக்கியம், கல்வி, மருத்துவம், சமயம், தன்முனைப்பு போன்ற துறைகளில் சர்வதேச மேடைப் பேச்சாளர்
- சித்தார்கோட்டை முஹம்மதியா பள்ளிகளின் முன்னாள் தாளாளர் (1974- 1987)
- இந்திய மருத்துவ சங்கத்தின் இராமநாதபுரம் கிளை நிறுவனச் செயலர்
- சர்வதேச அளவில் 4 சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடத்தியவர்
- சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சித் தொடர் வசன எழுத்தாளர்
வெளியிணைப்பு
டாக்டர் ஹிமானா சையத் அவர்களுடன் நேர்காணல்