யோர்க் பல்கலைக் கழக பல்கலாச்சார வாரம் 2008
கனடா யோர்க் பல்கலைக் கழகத்தில் ஆண்டுதோறும் கனடாவில் உள்ள பல்லின மக்கள் அவர்கள்தம் கலாச்சாரங்களைக் கௌரவிக்கும் வகையில் எடுக்கப்படும் விழாவே பல்கலாச்சார வாரம் ஆகும்.
யோர்க் பல்கலைக் கழக தமிழ் மாணவர் அமைப்பு
2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் 60 இனங்களைச் சேர்ந்த மாணவர் அமைப்புகளில் அங்கம் வகிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். யோர்க் பல்கலைக் கழக தமிழ் மாணவர் அமைப்பினரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் யோர்க் லேன் வளாகத்தில் அனைத்து நாடுகளின் கொடிகளுடன் தமிழீழத் தேசியக் கொடியான புலிக் கொடியும் பறக்க விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் கலாச்சாரம்
தமிழர்களின் கலாச்சாரத்தினை எடுத்துக் காட்டும் விதமாக தமிழ்த் திருமணம் மேள தாளங்களுடன் நடித்துக் காட்டப்பட்டது. தமிழ் மக்களின் பாரம்பரிய உடையலங்காரக் காட்சிகளும் இடம்பெற்று இரண்டாவது நாளில் தமிழர்களின் உணவுகள் பார்வைக்கு வைக்கப்பெற்று பின்னர் பரிமாறவும் பட்டது. இவ்வுணவுப் பதார்த்தங்களை ரொறன்ரோ நகரைச் சேர்ந்த தமிழ் உணவகமான பாபு கேற்றரிங் நிறுவனத்தினர் பரிமாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சகல இனத்தவரும் பங்குபற்றிய கலாச்சாரக் கருத்தரங்கம்
இதனைத்தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களும் சகல இனத்தவரும் பங்குபற்றிய கலாச்சாரக் கருத்தரங்கம் மற்றும் பட்டறை ஆகியன இடம்பெற்றன.
பரத நாட்டியம்
பட்டறையின் போது பரத நாட்டியம் மேடையேற்றப்பட்டதும் பார்வையாளர்களுக்கு கற்றும் கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
விருதுகளைப் பெற்றனர்
இவ்விழாவில் யோர்க் பலகலைக் கழக தமிழ் மாணவர் அமைப்பினரும் பின்வரும் விருதுகளைப் பெற்றனர்:
- அதி சிறந்த ஊர்வலத்திற்கான முதற் பரிசு - இவ்விருதை இலங்கை மாணவர் அமைப்புடன் பகிர்ந்து கொண்டனர்.
- அதி சிறந்த உணவு வகைகளுக்கான முதற்பரிசு.
- அதி சிறந்த உடையலங்காரத்திற்கான இரண்டாம் பரிசு.
- அதி சிறந்த அமைப்பிற்கான - முதலாம் பரிசு.