திருவேகம்பர் அந்தாதி

திருவேகம்பர் அந்தாதி ஒர் அந்தாதி நூல் ஆகும். இது சிவஞானமுனிவரால் இயற்றப்பட்டது. இவர் இயற்றிய அந்தாதி நூல்கள் மொத்தம் நான்கு ஆகும்.

நூலாசிரியர் வரலாறு

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் ஆனந்தக்கூத்தர், மயிலம்மையார்க்கு மகனாகப் பிறந்தவர் சிவஞானமுனிவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் முக்களாலிங்கர். இளம்வயது முதலாகவே துறவறத்தில் நாட்டம் கொண்டு திருவாவடுதுறை ஆதீனத்திலேயே தங்கினார். இவரது பக்குவநிலைக் கண்டு வேலப்பதேசிக சுவாமிகள் இவருக்குத் தீட்சை செய்து சிவஞானயோகிகள் என்ற பெயரையும் சூட்டினார். அதுமுதலாக திருத்தல வழிபாடுகள் பல மேற்கொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் அருளிச்செய்தார்கள்.[1]

நூல் பெயர்க்காரணம்

திருவேகம்பர் அந்தாதி' கம்பர் அந்தாதி' என்றும் அழைக்கப்படுகிறது. திருவாவடுதுறை ஆதீனப் பழைய பதிப்புகளில் கம்பரந்தாதி என்ற பெயரே உள்ளது. மதுரை இராமசாமி பதவுரை எழுதி வெளியிட்ட பதிப்பிலும் அவ்வாறே உள்ளது. பின்னர் இறையருள் நூல்களுக்குத் திரு என்ற அடைமொழி கொடுப்பது என்ற மரபுப்படி திரு சேர்க்கும்போது கம்பர் என்ற பெயர் ஏகம்பர் என்றாகி திரு இணைந்து திருவேகம்பர் என அமைந்துள்ளது.

நூல் அமைப்பு

இந்த அந்தாதி நூல் காஞ்சிபுரத்து திருவேகம்பர் எனும் திருக்கோயிலில் உள்ள இறைவன் மீது பாடப்பெற்றதாகும். இந்நூல் கட்டளைக் கலித்துறைப் பா வகையால் அமைந்துள்ளது. தற்பொழுது இவ்வந்தாதியில் 94 பாடல்களே கிடைத்துள்ளன. பாடல்கள் பெரும்பாலும் யமக அமைப்பைப் பெற்றுள்ளன. அடிதோறும் முதற்சீரில் முதல் எழுத்து மாறிவரும் அமைப்பாகிய திரிபு அமைப்பில் இருப்பது 2, 30, 39, 55, 56 ஆகிய எண்கள் கொண்ட ஐந்து பாடல்களே. நூலின் தொடக்கத்தில் காப்புப் பாடல் இல்லை.

உரைகள்

இந்நூலிற்கு மதுரை இராமசாமிப்பிள்ளையின் பதவுரை வெளிவந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தின் 226 ஆவது வெளியீடாக வெளிவந்துள்ள பதிப்பில் நூலிற்குச் சிறப்புப் பாயிரம் ஒன்று உள்ளது. இதில் பாடியவர் பெயர் இடம்பெறவில்லை.

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

  • பூசை சுப்பிரமணியத்தம்பிரான் இயற்றிய, திருவாவடுதுறை ஆதீனக் குருபரம்பரை விளக்கம் - பக்கம்,117
  • முனைவர் பழ.முத்தப்பன் சிவஞான முனிவரின் அந்தாதி இலக்கியங்கள்- பக்கம் 81.
  • சிவஞானமுனிவர் திருவேகம்பர் அந்தாதி திருவாவடுதுறை ஆதீனம்.
"https://tamilar.wiki/index.php?title=திருவேகம்பர்_அந்தாதி&oldid=16759" இருந்து மீள்விக்கப்பட்டது