செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில்
வேதபுரீசுவரர் கோயில், திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். பாடல் பெற்ற தலங்களில், தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1]
தேவாரம் பாடல் பெற்ற திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவோத்தூர், அத்தியான கேரளாந்தகநல்லூர் |
பெயர்: | திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | செய்யாறு |
மாவட்டம்: | திருவண்ணாமலை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வேதபுரீசுவரர், வேதநாதர் |
தாயார்: | இளமுலையம்பிகை, பாலஜகுஜாம்பிகை |
தல விருட்சம்: | பனைமரம் |
தீர்த்தம்: | மானச தீர்த்தம், கல்யாண கோடி |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
இறைவன், இறைவி
இத்தலத்தின் மூலவர் வேதபுரீசுவரர், தாயார் இளமுலையம்பிகை. இத்தலத்தின் தலவிருட்சம் பனைமரமாகும். இந்த இறைவன் வேதபுரீசுவரர் என்று பெயர்பெற்ற கதை பின்வருமாறு வேதங்களை ஓதியுணர்ந்து பிறருக்கு உரைக்கும் முனிவர்களே வேதம் ஓதுதலை மறந்து விடுகிறார்கள். அவர்கள் எல்லோருமாக வேண்ட, இறைவனே வேதியர் உருவில் வந்து தேவர் முனிவர்களுக்கெல்லாம் வேதத்தை விரித்து ஓதுகிறார். வேதம் ஓதுவித்த ஊர் ஓத்துர் எனப் பெயர் பெறுகிறது. இதை இறைவனே சொல்லுவதாகக் காஞ்சிப் புராணம் கூறுகிறது.
வரலாறு
தொன்மம்
தக்கனுக்கு, மருமகனாகிய சிவனைவிடத் தான் உயர்ந்தவன் என்ற செருக்கு ஏற்படுகிறது. அதனால் இருவருக்கும் பிணக்கு. தக்கன் இயற்றும் வேள்வியில், மருமகனுக்கு அக்ரஸ்தானம் இல்லை, அழைப்பும் இல்லை. மாமனுக்கும் மருமகனுக்கும் இடையே வளர்ந்துள்ள கசப்பைத் தீர்த்து வைக்க மகளான தாட்சாயனி தக்கன் வேள்வி நடத்தும் இடத்துக்கு புறப்படுகிறாள். அங்கு அவளுமே அவமதிக்கப்படுகிறாள் தந்தையால். அதனால் தன்னுடலையே தீக்கிரையாக்குகிறாள், தாட்சாயணி.
பின்னர் இறைவன் அருளால் இமவான் மகளாகப் பிறந்து வளர்ந்து பேதைப் பருவம் எய்துகிறாள். பரமனை அடையக் கருதித் தவக்கோலம் கொள்கிறாள். தவத்திற்கு இரங்கிய இறைவன், 'இளமுலையே! நீ எனது வார்த்தையைக் கேட்காமல் தக்கன் வேள்விக்குச் சென்றாய். கொண்ட கணவனின் சொல்லைத் தட்டிய பாவம் நீங்கினால்தான் உன்னை மனப்பேன்!' என்கிறான். அம்மையும், 'நானோ பேதைச் சிறுமி, பாவம் தீரும் வழியை அருள் வேண்டும்!' என்று வேண்டுகிறாள். அவனும், 'திருவோத்தூர் என்னும் தலத்துக்குச் சென்று என்னை நோக்கித்தவம் செய்!” என்கிறான்.
அப்படியே செய்து இளமுலைநாயகி இறைவனை மணந்து கொள்கிறாள். அம்மையின் திரு உரு அழகான ஒன்று. பேதைப் பருவத்திலே தவம் புரிந்து, பெதும்பைப் பருவத்திலே இறைவனை மணந்து கொண்டவள் அவள். மங்கைப் பருவத்தில் மணாளனை மணந்து கொண்ட நங்கையாக மற்றைய கோயில்களில் காட்சிதருபவளே, இந்தத் தலத்தில் இளவயதில் இறைவனை மணந்த பேதையாக நிற்கிறாள்.
கோயிலுக்கு திருஞானசம்பந்தர் வருகை குறித்த கதை
ஒரு சமயம் திருஞானசம்பந்தர் தொண்டை நாட்டிலே உள்ள திருவோத்தூர் என்னும் இந்தத் தலத்துக்கு வருகிறார். இங்கே சமணர்கள் ஆதிக்கம் மிகுந்திருப்பதையே காண்கின்றார். தென்திசையிலிருந்து வந்த ஞானசம்பந்தர், சேயாற்றின் தென்கரையில் இருந்தே, திருவோத்தூர் வேதபுரி நாயகன் கோபுரத்தையும் மதிலையும் தரிசித்து, அந்தக் கரையிலுள்ள திருமடத்தில் தங்குகிறார்.
மதுரையில் ஞானசம்பந்தர் நிகழ்த்தியவைகளைக் கேட்டிருந்த சேயாற்றுச் சமணர்கள், ஒரு வேள்வி செய்து, அதிலிருந்து எழுந்த கொடிய பாம்பொன்றை அவர் மீது ஏவுகின்றார்கள். அவரோ பாம்பைச் சமணர்களது 'வேந்தன் வாழ் இஞ்சி சூழ் திருமனைக்கே ஏகென்று உத்தரவு இடுகிறார். அதனால் துயருற்ற அரசன் வந்து, அடிவணங்க, ஞானசம்பந்தர் வேண்டுகோளை ஏற்று இறைவனும் மகுடி ஏந்திப் பாம்பாட்டியாக வந்து, அதைப் பிடித்துக் கொண்டே கோயிலுக்குள் சென்று மறைகிறார்.
அனக்காவூர் செய்யாற்றை வென்றான் பெயர் காரணம்
இதனால் சமணர் பகை வளர, அரசன் விரும்பியபடி புனல் வாதத்திற்கே ஒத்துக் கொள்கிறார். சமணர்கள் எழுதியிட்ட ஓலையைச் சேயாற்று வெள்ளம் அடித்துக்கொண்டு போய் விடுகிறது. ஆனால் ஞானசம்பந்தர் பாடிய பதிகத்தில் ஒரு பாட்டை ஏட்டில் எழுதி, ஆற்றில் இட, அது புது நீரைக் கிழித்துக் கொண்டு முன்னேறி ஒரு பழம்பதியை அடைகிறது. இவ்வாறு ஏடு எதிர் சென்று நின்று தங்கின இடமே அன்று முதல் சேயாற்றில் வென்றான் என்ற பெயரால் வழங்கப்படுகிறது. தற்போது இது செய்யாற்றைவென்றான் என அழைக்கப்படுகிறது. மேலும் அந்த எடுகல் அனுகாமல் சென்றதால் அனுகாவூர் எனவும் தற்போது அனக்காவூர் என அழைக்கப்படுகிறது.
ஆண் பனைகள் குலையீன்றன
இப்படியெல்லாம் தோற்றாலும் சமணர்கள் மாத்திரம் தங்கள் வாதத்தை விடுபவர்களாக இல்லை. 'இவ்வூர்க் கோயிலிலும் ஆற்றங்கரையிலும் காயாது நிற்கும் ஆண் பனைகள் நிற்கின்றன. அவைகளைக் காய்க்கும் பெண் பனைகளாக ஆக்க முடியுமா?' என்று சம்பந்தரிடமே மறுபடியும் சவால் விடுகிறார்கள். அந்தச் சவாலை ஏற்றுக்
'குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர் அரும்பு கொன்றை யடிகளைப்
பெரும்பு கலியுண் ஞானசம்பந் தன்சொல் விரும்பு வார்வினை வீடே’ 11 - 054 திருவோத்தூர், முதல் திருமுறை
என்ற பாடலைப் பாட, எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம், கோயிலுக்குள் நின்ற ஆண்பனை குலைதள்ளிப் பெண்பனையாக மாறுகிறது. இன்றைக்கும் அந்தப் பனைகளின் வாரிசாகக் கோயில் பிராகாரத்திலேயே குலை ஈனும் ஐந்து பனைகள் நின்று கொண்டிருக்கின்றன.
மேற்கோள்கள்
- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009