வேலா அரசமாணிக்கம்

வேலா அரசமாணிக்கம் (20 திசம்பர் 1937 - 26 ஏப்ரல் 1991) ஈரோட்டில் பிறந்தவர். குறளாயம் என்னும் அமைப்பை நிறுவியவர். 'திருக்குறள் நம் மறை' என்பது அவருடைய கொள்கை முழக்கம். திருக்குறள் வழி இல்வாழ்க்கை, திருக்குறள் வழிக் குமுகாயம். திருக்குறள் வழி அரசு என்று பரப்புரை செய்தார். குறளியம் என்னும் ஒரு மாத இதழை நடத்திவந்தார்.

கல்வி, தொழில்

கல்லூரி இடைநிலைக் கல்விவரைப் படித்தவர். குறிப்பேடு புத்தகம் உருவாக்கியும் விற்பனை செய்தும் தொழில் புரிந்தார்.

திருக்குறள் தொண்டு

1984 ஏப்ரல் 15 இல் 'குறளாயம்' ஈரோட்டில் தொடங்கப்பட்டது. அறிஞர்கள் கி. ஆ. பெ. விசுவநாதம், குன்றக்குடி அடிகளார், மீ. தங்கவேலன், வ. சுப. மாணிக்கம் முதலியோர் இவ்வியக்கத்திற்கு ஆதரவாகவும் துணையாகவும் இருந்தனர். புலவர் இளங்குமரன், கு. ச. ஆனந்தன் ஆகியோர் வேலாவின் திருக்குறள் பரப்புரையில் இணைந்து இயங்கினர்.

இவர் குறளாயத் திருமண நிகழ்முறையை அறிமுகப் படுத்திப் பல திருமணங்களை நடத்தி வைத்தார்.

குறளியம், இதழ்ப் பணி

திருக்குறள் கருத்துகளைப் பரப்புவது மட்டுமல்லாமல் தமிழ்மொழி எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப் படவேண்டும் என்று குறளியம் இதழில் எழுதினார். தமிழ் வழிக் கல்வி நீதிமன்றத்தில் தமிழ், தனி ஈழம் குறித்து பல கட்டுரைகள் எழுதினார். ஈழத்திற்கும் சென்றுவந்தார். மதுவிலக்கு வேண்டும் என்றும் சாதி ஒழிய வேண்டும் என்றும் மண்டல் குழுப் பரிந்துரை நடைமுறைக்கு வரவேண்டும் என்றும் தொழிலாளர் நலம் குறித்தும் கட்டுரைகள் எழுதினார்.

விருதுகள்

  • குறள்நெறிக் காவலர்--இளைஞர் நற்பணி மன்றம்,கருங்கல் பாளையம் ஈரோடு
  • திருக்குறள் செம்மல் --புதுவைக் குறளாயம்
  • குறள்நெறிச் செம்மல் --உலகத் திருக்குறள் உயராய்வு மையம்
  • நம்மறை கண்ட நம்பி --தமிழ்க் 'காசு' நினைவு இலக்கியக் குழு குழித்தலை

மேற்கோள் நூல்கள்

  • ஈரோடு வேலா (வரலாறு) --புலவர் இளங்குமரனார் (1990)
  • வேலா கருத்துக் களஞ்சியம் --புலவர் இளங்குமரனார் (1991)
"https://tamilar.wiki/index.php?title=வேலா_அரசமாணிக்கம்&oldid=16019" இருந்து மீள்விக்கப்பட்டது