வெண்கொற்றன்
வெண்கொற்றன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அது குறுந்தொகை 86 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.
பாடல் சொல்லும் செய்தி
- திணை - குறிஞ்சி
தலைவன் பிரிவைத் தாங்கிக்கொள்ள மாட்டாள் என்று கவலைப்பட்ட தோழியிடம் தலைவி சொல்கிறாள்.
சிறைபனி
தலைவியின் கண்களில் சிறைபட்டுக் கிடந்த பனிநீர் உடைந்து கண்ணீர் மழையாகக் கொட்டுகிறது. அதைப் பார்த்துத்தான் தோழி கவலை கொண்டாள்.
நுளம்பு
மாட்டைக் கடிக்கும் ஈ நுளம்பு எனப்படும். யாமத்தில் நன்றாக உறங்கும் பசுவை அது கடித்ததாம். கடி பொறுக்கமாட்டாமல் பசு கடித்த இடத்தை நக்கத் தலையை உயர்த்தியதாம். அப்போது அதன் கழுத்தில் கட்டியிருந்த மணி ஒலித்ததாம். இப்படி நுளம்பு கடிக்கும்போதெல்லாம் மணி ஒலித்ததாம்.
நல்கூர் குரல்
நான் கேட்கும் இந்த இரங்கல் மணிக்குரலை ஊரில் கேட்பவர்கள் யாராவது உண்டா? - என்கிறாள் தலைவி. பிறர் உறங்குகின்றனர். அவர் நினைவு என்னைக் கடிப்பதால் எனக்கு உறக்கம் வரவில்லை என்று குறிப்பால் உணர்த்துகிறாள் தலைவி.