வீ. செந்தில்வேலு முதலியார்

வீ. செந்தில்வேலு முதலியார் சித்தாந்தம், திருமுறை நூல்கள் பலவற்றைப் பதிப்பித்து வெளியிட்டார். சைவ சித்தாந்த அட்டாவதானியாக விளங்கிய இவர், திருமுறைப் பதிப்பாளர், திருப்பணி அறச்செல்வர் என்றெல்லாம் பாராட்டப் பெற்றார்.[1]

பிறப்பும் இளமையும்

சென்னை மயிலாப்பூரில், சர்க்கரை எனும் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள் வாழ்ந்துள்ளனர். அம்மரபில் வாழ்ந்த வீராச்சாமி- காமாட்சி அம்மையாருக்குப் புதல்வராய் 1842 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். இளம்பருவத்தில் பள்ளிக் கல்வியை முடித்த அவர், கண்ணியல் தேர்வு எழுதி, சென்னைக் கோட்டையில் இராணுவக் கணக்கராகப் பணியாற்றினார். பணியாற்றிக் கொண்டே, காஞ்சிபுரம் ஏகாம்பர சிவயோகிகள்என்பாரிடம் சைவசித்தாந்தமும், திருமுறைகளும் கற்றுக்கொண்டார்.

திருக்கோயில் பணிகள்

திருக்கோயில் திருப்பணிகள் செய்வதில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். பல்வேறு புதிய திருக்கோயில்களையும் பலரின் உதவியுடன் தோற்றுவித்தார். திருவொற்றியூரில் சண்முக விநாயகர் திருக்கோயில், ஈஞ்சம்பாக்கத்தில் கணபதி திருக்கோயில், திருப்போரூரில் செல்வ விநாயகர் கோயில், பாக்கம் கிராமத்ததில் ஆனந்த கணேசர் திருக்கோயில் ஆகியவை இவரின் அரிய முயற்சியால் உருவானவை. பல்வேறு திருக்கோயில் திருவிழாக்களை இவரே முன்னின்று நடத்தி, அங்குத் தெய்வத்தமிழ்ச் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தினார். சென்னை தங்கச்சாலைத்தெரு சிவசுப்பிரமணியர் திருக்கோவில் கார்த்திகை விழா, திருவொற்றியூர்த் திருக்கோயில் சங்கிலி நாச்சியார்- சுந்தரமூர்த்தி நாயனார் விழா முதலிய பல விழாக்களைத் தொடர்ந்து நடத்தியுள்ளார்.

இயற்றிய நூல்கள்

  1. இராமாயணச் சுருக்கம்
  2. பாரதச் சுருக்கம்
  3. திருப்போரூர் சந்நிதிமுறை விரிவுரை ஆகிய நூல்களையும்,
  4. திருக்கோவையார்
  5. திருமுருகாற்றுப்படை ஆகிய நூல்களுக்குப் பதவுரையையும்,
  6. தழுவக் குழைந்தீசர் இரட்டைமணிமாலை
  7. பாலாம்பிகை தோத்திரம் ஆகிய செய்யுள் நூல்களையும் படைத்துள்ளார்.

பாராட்டுகள்

திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் காசிமடம் ஆகிய மடாலயங்களில் பாராட்டும், பரிசும் பெற்றுள்ளார். திருமுறைப் பணிகள் பல ஆற்றியுள்ளதால் தமிழறிஞர்கள் இவரைத் திருமுறைச் செல்வர் என்று போற்றியுள்ளார்கள்.

இறப்பு

தமிழ் மொழிக்கும் சைவ சமயத்திற்கும் புத்துயிர் தந்த அறிஞர் செந்தில்வேலு முதலியார், தமது 69 ஆவது வயதில் 1911 ஆம் ஆண்டு காலமானார்.

மேற்கோள்கள்

  1. சிலம்பொலியார் அணிந்துரைகள், பழனியப்பா பிரதர்ஸ், 2006, ISBN 978-81-8379-365-0, retrieved 2024-06-29