வி. காராளசிங்கம்

வி. காராளசிங்கம்
முழுப்பெயர் வைத்தியநாதன்
காராளசிங்கம்
பிறப்பு 07-1921
மறைவு 08-09-1983
(அகவை 62)
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது அரசியல்வாதி
மற்ற பெயர்கள் கார்லோ
சோபனா ராய்
பணி வழக்கறிஞர்,
அரசியல்வாதி


வைத்தியநாதன் காராளசிங்கம் (Vaithianathan Karalasingham, சூலை 1921 – 8 செப்டம்பர் 1983) இலங்கைத் தமிழ் இடதுசாரி அரசியல்வாதியும், எழுத்தாளரும், வழக்கறிஞரும் ஆவார். லங்கா சமசமாஜக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்தவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

காராளசிங்கத்தின் தந்தை வைத்தியநாதன் ஓரு அரச ஊழியர் ஆவார். இவர் நாட்டின் பல பாகங்களிலும் பணியாற்றியவர். இதனால், காராளசிங்கம் களுத்துறை, பன்னிப்பிட்டி, ஆகிய இடங்களிலும், பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் கல்வி கற்றார். ஆனந்தா கல்லூரியில் இவர் "கார்லோ" என அழைக்கப்பட்டார். இவருக்கு வி. பாலசிங்கம், வி தனபாலசிங்கம் உட்பட மூன்று சகோதரர்கள்.

காராளசிங்கத்திற்கு நீனா, சக்கரவர்த்தி என இரு பிள்ளைகள் உள்ளனர்.

அரசியலில்

காராளசிங்கம் 1939 இல் லங்கா சமசமாஜக் கட்சியில் சேர்ந்தார். இரண்டாம் உலகப் போர் 1939 செப்டம்பரில் ஆரம்பித்த போது, சமசமாசக் கட்சி அதற்கெதிராகக் குரல் கொடுத்தது.. போகம்பரை சிறையில் இருந்த நான்கு தலைவர்களும் 1942 ஏப்ரல் 7 இல் சிறையில் இருந்து தப்பினர். இவர்களில் கொல்வின் ஆர். டி சில்வா, என். எம். பெரேரா, குணவர்தனா ஆகியோர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர்.

காராளசிங்கம் 1941 இல் மும்பை சென்றார். அங்கு அவர் இந்திய-இலங்கை புரட்சித் தலைமையை ஏற்படுத்தினார். இந்தியாவில், 1942 ஏப்ரலில் சமசமாசக் கட்சி ஐக்கிய மாகாணங்கள் மற்றும் பிகார் போல்செவிக் லெனினியக் கட்சி, போல்செவிக் மஸ்தூர் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து, இந்திய, இலங்கை, பர்மிய போல்செவிக்-லெனினியக் கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினர். காராளசிங்கம் இக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். 1943 இல் கொல்வின் ஆர். டி சில்வா, என். எம். பெரேரா, பிலிப் குணவர்தன ஆகியோர் இந்தியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். ஏனையோர் இந்தியாவில் தங்கியிருந்து போல்செவிக்-லெனினியக் கட்சியை வளர்த்தெடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர். காராளசிங்கம் கொல்கத்தாவைத் தலைமையகமாகக் கொண்டு Permanent Revolution என்ற பத்திரிகையை 1943 முதல் 1945 வரை வெளியிட்டார்.1945 மார்ச் மாதத்தில் காராளசிங்கம் மும்பையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். இலங்கையில் பதுளையில் சிறை வைக்கப்பட்டார்.

காராளசிங்கம் போல்செவிக்-லெனினியக் கட்சியின் இலங்கைக் கிளையின் செயலாளராக 1945 ஆம் ஆண்டிலும், 1947-48 இல் மத்திய குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். New Spark என்ற பத்திரிகையை 1947–48 காலப்பகுதியில் நடத்தினார். 1944, 1947, 1948 ஆம் ஆண்டுகளில் கட்சியின் மாநாடுகளில் பங்குபற்றினார். 1951 இல் நான்காம் அனைத்துலகத்தின் மூன்றாவது உலக காங்கிரசில் பங்குபற்றினார். 1952 முதல் 1958 வரை பிரித்தானியாவில் சட்டம் பயின்று, இலங்கை திரும்பி மீயுயர் நீதிமன்ற வழக்கறிஞரானார்.

தேர்தலில்

காராளசிங்கம் சமசமாசக் கட்சியின் வேட்பாளராக காங்கேசன்துறையில் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர் செல்வநாயகத்திடம் தோற்றார்.


1960 மே மாதத்தில் சமசமாசக் கட்சித் தலைவர்கள் என். எம். பெரேரா, கொல்வின் ஆர். டி சில்வா, பிலிப் குணவர்தன ஆகியோர் இலங்கை சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்து 1960 சூலையில் நடந்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றினர். இக்கூட்டணி ஆட்சியை எதிர்த்த சமசமாசக் கட்சியின் மெரில் பெர்னாண்டோ, காராளசிங்கம், சமரக்கொடி பாலா தம்பு ஆகியோர் கட்சியில் இருந்து விலகி இலங்கை புரட்சிகர சமசமாசக் கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தனர். 1964 டிசம்பரில், இக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பெர்னாண்டோ, சமரக்கொடி மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேறு சிலரும் இணைந்து சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசாசன உரைக்கு எதிராக வாக்களித்து, ஆட்சியைக் கவிழ்த்தனர்.

காராளசிங்கம் 1965 தேர்தலில் காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்டு செல்வநாயகத்திடம் மீண்டும் தோற்றார். காராளசிங்கம் 1966 இல் மீண்டும் சமசமாசக் கட்சியில் இணைந்தார்.


காராளசிங்கம் 1970 தேர்தலில் உடுவில் தொகுதியில் போட்டியிட்டு வி. தர்மலிங்கத்திடம் தோற்றார். 1970 இல் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையிலான கூட்டணி அரசில் சமசமாசக் கட்சி பங்கேற்றது. காராளசிங்கம் 1970களில் அரசு இதழின் ஆசிரியக் குழுவில் இடம்பெற்றிருந்தார். 1970-75 காலப்பகுதியில் எயார் சிலோன் நிறுவனத்தின் பணிப்பாளராகப் பணியாற்றினார்.

படைப்புகள்

தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
  • The War in Korea (1950)
  • தமிழ் பேசும் மக்களின் விமோசனப் பாதை (1963)
  • Politics of Coalition (1964)
  • Senile Leftism: A Reply to Edmund Samarakkody (1966)
  • Czechoslovakia, 1968 (1968)
  • The Way Out for the Tamil Speaking People (1963)
  • Enter History (1970)

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வி._காராளசிங்கம்&oldid=2840" இருந்து மீள்விக்கப்பட்டது