வி. கனகசபை
வி. கனகசபை (வி. கனகசபைப் பிள்ளை, மே 25, 1855 - பிப்ரவரி 21, 1906) ஒரு தமிழறிஞர். ஆங்கில மொழியிலும் சிறப்பான அறிவு பெற்றிருந்த அவர் தமிழ், தமிழ் இலக்கியம், தமிழர் வரலாறு ஆகியவற்றை ஆராய்ந்து அவை தொடர்பில் ஆங்கிலத்தில் பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். கனகசபைப் பிள்ளை அறிமுகப்படுத்திய கஜபாகு காலம்காட்டி முறைமை வரலாற்றாய்வாளரால் சங்ககால தமிழக வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை வரிசைப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுமுறை ஆகும். இவர் ஆங்கிலத்தில் எழுதிய ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் (The Tamils 1800 Years Ago) என்னும் நூல் புகழ் பெற்றது.
இளமைக்காலம்
இவரது தந்தையார் இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில், மல்லாகம் என்னும் ஊரைச் சேர்ந்த விசுவநாதபிள்ளை என்ற தமிழ் தொண்டர் ஆவார். தந்தை விசுவநாதபிள்ளை அக்காலத்தில் சென்னை கோமளேசுவரன்பேட்டையில் தங்கியிருந்து வின்சுலோ தொகுத்த ஆங்கிலத் தமிழ் அகராதிப் பணிக்கு உதவி புரிந்தவர்.[1] கனகசபை கோமளேசுவரன்பேட்டையில் பிறந்து வளர்ந்தார். மிகவும் இளம் வயதிலேயே சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இதனால் இவர் boy graduate என செல்லமாக அழைக்கப்பட்டார்.[1] அப்பல்கலைக் கழகத்திலேயே, சிறிது காலம் தமிழ் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தார். பிறகு, அஞ்சல்துறையில் கண்காணிப்பாளராக சேர்ந்து பணிபுரிந்து, உயர் அதிகாரி ஆனார்.[2]. சட்டப் படிப்பும் முடித்து மதுரையில் வழக்கறிஞராகத் தொழில் பார்த்தார்[3].
தமிழாராய்ச்சி
அஞ்சலகத் துறையில் பணியாற்றிய போது, பல்வேறு ஊர்களுக்கு மாற்றல் பெற்றார். எந்த ஊருக்குச் சென்றாலும், அப்பகுதிகளில் காணப்படும், பழந்தமிழ் ஓலைச் சுவடிகளைச் சேகரித்து வைத்திருந்ததுடன், அவற்றைப் படித்து ஆய்வுகளும் செய்து வந்தார். தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை கொண்ட கனகசபைப் பிள்ளை முதலில் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றை காப்பியங்களை ஆராயந்தார். அவ்வாய்வுகளைக் கட்டுரைகளாக 1895 முதல் 1901 வரைஆங்கில, தமிழ்ப் பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதினார். இதனால் தமிழர் வரலாறு, தமிழ் இலக்கியம் போன்ற துறைகளில், அவருக்கு ஆழ்ந்த அறிவு மேலோங்கி இருந்தது. ஓலைச்சுவடிகளைத் தொகுக்கவும், ஏட்டுச்சுவடியைத் தாளில் எடுத்தெழுதவும், தன்னுடன் உதவியாளர் ஒருவரை வைத்துக் கொண்டார். ஆனால், அவர் எழுதிய நூல்கள் எதையும் பதிப்பிக்க விரும்பவில்லை. அவர் 20 ஆண்டுகள் தொகுத்து வைத்திருந்த பத்துப்பாட்டு, புறநானூறு, இன்னும் பிற ஏராளமான தமிழ் நூல்கள் அனைத்தையும், தமிழ்தாத்தா உ. வே. சாமிநாத அய்யருக்கு, அவ்வப்போது வழங்கினார்.
தமிழின் பெருமையைப் பிற மொழியினரும் அறிந்து கொள்ளும்படி தனது ஆய்வுகளைக் கட்டுரைகளாகவும் நூல்களாகவும் ஆங்கிலத்தில் எழுதினார். அவ்வாறு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்களில் களவழி நாற்பது, கலிங்கத்துப் பரணி, விக்கிரம சோழன் உலா குறிப்பிடதக்கனவாகும். சென்னையில் இருந்து வெளிவந்த "மதராஸ் ரிவியூ" என்னும் ஆங்கில இதழொன்றில் தமிழர் வரலாறு பற்றி தொடர்ச்சியாக இவர் எழுதிய கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் (The Tamils 1800 Years Ago) என்னும் தலைப்பில் ஆங்கில நூலாக வெளிவந்தது. இதன் மூலம், தமிழ் வரலாறு குறித்து, முதன் முதலில் முறையான காலவரலாற்று ஆய்வை நிகழ்த்தியவர் என்ற பெருமையைக் கனகசபைப்பிள்ளை பெறுகிறார்[4]. கா. அப்பாத்துரையார் இந்நூலை ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என்னும் பெயரில் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்தார். பிற்காலத்தில், உ. வே. சாமிநாதையரின் பதிப்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காகத் தன்னிடம் இருந்த பழம் தமிழ் நூல் ஏடுகளைச் சாமிநாதையருக்குக் கொடுத்து உதவினார்[5]
மறைவு
கனகசபைப் பிள்ளை 1906 சிவராத்திரி நாளில் தனது 50வது அகவையில் காஞ்சிபுரத்தில் காலமானார்.[1]
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "மல்லாகம் விசுவநாதபிள்ளை கனகசபை". மில்க்வைற் செய்தி. பெப்ரவரி 1985.
- ↑ சம்பந்தன், மா. சு. 1997. பக். 260, 261
- ↑ 'ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' நூலின் பிறப்பு, சி. ஜெயபாரதி
- ↑ சுவெலபில், கமில். 1997. பக். 104
- ↑ சம்பந்தன், மா. சு. 1997. பக். 261
உசாத்துணைகள்
- சம்பந்தன், மா. சு., அச்சும் பதிப்பும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 1997.
- கனகசபை, வி., அப்பாத்துரையார், கா. (தமிழாக்கம்), ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், வசந்தா பதிப்பகம். 2001.
- சுவெலபில், கமில்., Companion studies to the history of Tamil literature, Brill Academic Publishers, நெதர்லாந்து. 1997
வெளி இணைப்புகள்
- முனைவர் பா. இறையரசன். "வி.கனகசபைப் பிள்ளை". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 26-05-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)