விழிகள் (இதழ்)

விழிகள் என்பது 1970 களில் வெளியான சிற்றிதழ் ஆகும். இது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், மதுரையில் இருந்து மாதாந்தோறும் வெளிவந்தது.

வரலாறு

மதுரையில் செயல்பட்டுவந்த, விழிகள் இலக்கிய வட்டம் சார்பில் சிற்றிதழாக 'விழிகள்' 1976இல் தோன்றியது. இந்த இதழுக்கு சுந்தரபாண்டியன் என்பவர் ஆசிரியராகவும் வெளியிட்டாளராகவும் செயல்பட்டார். இப்பத்திரிகையில் ராமசாமி ( ஆராமுதம்) நிறையவும் தீவிரமாகவும் எழுதினார். நாட்டுப்புறக் கலைகள், கிராமியப் பாடல்கள், மக்கள் கலாச்சாரம், நிஜநாடக இயக்கம் முதலியவற்றில் ஈடுபாடு உடையவராக இருந்தார் அவர். விழிகள் இதழானது சிறுகதை, கவிதை, கட்டுரை போன்ற இலக்கிய விஷயங்களோடு மட்டுமே அல்லாமல் நாடகம், தெருக் கூத்து, கலைத் திரைப்படங்கள்; கலாசாரம், கல்வித் தரம் போன்ற பல விஷயங்களிலும் ஈடுபாடு காட்டியது.

சோதனை ரீதியிலான சிறுகதைகளையும், புதுக் கவிதைகளையும் வெளியிட்டது. பாரதி நூற்றாண்டு விழா சமயத்தில் 1982 சனவரி இதழை 'பாரதி மலர்' ஆகத் தயாரித்தது.

விழிகள் குறிப்பிட்ட காலத்தில் தவறாது வெளிவர வேண்டும் என்று நிர்வாகம் ஆசைப்பட்டது. 'வரும்' என அடிக்கடி உறுதி கூறியது. எனினும், காலம் தாழ்த்தி, நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகேதான் ஒவ்வொரு இதழும் வருவது சாத்தியமாக இருந்தது.[1]

1983இல் 'விழிகள்' ஒரு இதழ்கூட வந்ததாகத் தெரியவில்லை.

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=விழிகள்_(இதழ்)&oldid=17691" இருந்து மீள்விக்கப்பட்டது