விளையாட்டுப் பாடல்


நாட்டுப்புற
பாடல் வகைகள்
தமிழ் நாட்டார் பாடல்கள்
தாலாட்டுப் பாடல்
கும்மிப் பாடல்
சோபனப் பாடல்
நழுங்குப் பாடல்
வாழ்த்துப் பாடல்
ஒப்பாரிப் பாடல்
விளையாட்டுப் பாடல்
நையாண்டிப் பாடல்
கதைப்பாடல்
காதல் பாடல்
தொழிற்பாடல்
மீனவர் பாடல்
நெற்குத்திப் பாடல்
ஏற்றப் பாடல்
நடவுப் பாடல்

தொகு

சிறுவர்கள் விளையாடும் பொழுது பாடப்படும் பாடல்கள் விளையாட்டுப் பாடல்கள் எனப்படும். பாட்டும் விளையாட்டும் ஒன்றிணைந்து இருக்கும். இப்பாடல்கள் நாட்டார் பாடல் வகைகளில் அடங்கும். இவை தொழிற்பாடல்கள் போல நாட்டுப்புற மக்களால் விளையாடும் போது உற்சாகத்துக்காவும், மன மகிழ்ச்சிக்காகவும் பாடப்படுவன. விளையாட்டுப் பாடல்களில் ஒவ்வொரு விளையாட்டுக்கும் அவ்விளையாட்டை ஆடும்போது பாடல்கள் பாடப்படுகின்றன.

                 “காக்காய் குஞ்சுக்குக் கல்யாணம்
           காவடி ஆட்டம் தேரோட்டம்
நாலு கரண்டி நல்லெண்ணெய்
                  நாற்பதெட்டுத் தீபாவளி
                  வாரார் போரார் சுப்பையர்
                  வழியை விளக்கடி மீனாட்சி”

                 “நான் தாண்டா வீரன் நல்ல முத்துப் பேரன்
                  வெளிப் பிரம்பெடுத்து விளையாட வாரேண்டா
   தங்கப் பிரம்பெடுத்து தாலி கட்ட வாரேண்டா”

கிட்டிப் புள்ளு

ஆலையிலே சோலையிலே
ஆலங்காடிச் சந்தையிலே
கிட்டிப் புள்ளும் பம்பரமும்
கிறிக்கியடிக்கப்
பாலாறு, பாலாறு, பாலாறு 
ஆத்துக்கட்டு அலம்பக்கட்டு
அவிட்டுக்கட்டு இறுக்கிக்கட்டு
இறுக்கிக்கட்டு இறுக்கிக்கட்டு
கீழாறோலை மேலாறோலை
எண்ணிப் பார்த்தால் - பதினாறோலை
கிட்டிப் புள்ளும் பம்பரமும்
கிறுகியடிக்கப் பாலாறு பாலாறு பாலாறு

கிள்ளுப்பிராண்டி

1)

கிள்ளிக் கிள்ளிப் பிறாண்டி
கீயா மாயாப் பிராண்டி
கொப்பன் தலையில் என்ன பூ....
{முருங்கைப்பூ)
முருங்கைப்பூவைத் திண்டவளே
முன்னடிக் கஞ்சி குடிச்சவளே
பாதி விளாங்காய் திண்டவளே
பாவட்டங் கையை ம-ட-க்-கு.

2)

தக்காளி , தக்காளி ,குண்டு தக்காளி
பம்பரேறி குண்டுபோட
எங்கு சென்றாய் நீ
(ஊர்ப் பெயர்: எ.கா: மட்டக்களப்பு)
ம..ட்..ட..க்..க..ள..ப்..பு.

வினா விடை

என்ன அன்னம் - சோத்தன்னம்
என்ன சோறு - பழஞ்சோறு
என்ன பழம் - வாழைப்பழம்
என்ன வாழை - திரி வாழை
என்ன திரி - விளக்குத்திரி
என்ன விளக்கு - குத்துவிளக்கு
என்ன குத்து - கும்மாம்குத்து

ஊஞ்சல் பாட்டு

உஞ்சிலே மாமாங்கே
ஊரார் வீட்ட போகாதே
கஞ்சிக்கும் சோற்றுக்கும்
வாழைப்பழத்திற்கும்
காணாமே நீ போகாதே
 ஊஞ்சிலே ஊஞ்சிலே

கண்ணாம்பூச்சி

சிறுவரும் சிறுமிகளும் வேறுபாடின்றி விளையாடும் விளையாட்டு கண்ணாமூச்சி ஆட்டமாகும். ஒரு சிறுமியின் கண்ணை ஒருவர் மூட, மற்ற குழந்தைகள் ஓடி மறைந்து கொள்வார்கள். சிறுமியின் கண்ணை மூடுபவர்

             “கண்ணாமூச்சி ரேரே
காட்டு மூச்சி ரேரே
              உனக்கொரு பழமும்
என்னகொரு பழமும் கொண்டு வா”

என்று கூற,கண்ணைத் திறந்ததும் மற்றவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்ததும், அகப்பட்டவன் கண்ணை, மறுபடியும் மூடுவர். ஒளிபவரைக் கண்டுபிடிக்கும் ஆட்டம் என்றும் கூறுவர்.

கண்ணாம்பூச்சி கடற்கரைப்பூச்சி
எவடம்.... எவடம்.....
கண்ணாம்பூச்சி கடற்கரைப்பூச்சி
எவடம்.... எவடம்....

சடுகுடுப் பாடல்கள்

சிறுவர் பாடல்களில் சிறப்பிடம் பெறுவது சடுகுடுப் பாடல்கள். விளையாட விரும்பும் சிறுவர்களை இரு அணியாகப் பிரிக்க, சிறந்த வழியைப் பின்பற்றுகிறனர். மூச்சுப் பிடிப்பதற்காகப் பாடும் பாடல்கள் வீரம் செறிந்ததாக அமைத்திருக்கும்.

                      “கீத்துக் கீத்தடா
                       தென்னங் கீத்தடா
                       எறி உதைச் சண்டா
                       விழுந்து போச்சுடா”

என்று பாடிக் கொண்டே எதிரியைத் தொட முற்சிப்பார்கள்.


விளையாட்டு வினையாக முடிவதும் உண்டு. விளையாட்டில் கையும் காலும் முறிவதும் உண்டு என்பதை

                “பலிச்சப் பல்லாண்டு அடிப்பானேன்
                 கையுங் காலும் முறிவானேன்
      கச்சேரிக்குப் போவானேன் “

பூப்பறிக்கும் விளையாட்டு

சிறுமிகள் இரு அணியாகப் பிரிந்து கொண்டு, ஒரு அணியினர் பூப்பறிக்க வருபவர்களாகவும், மற்றொரு அணியினர் பூவைப் பாதுகாப்பவர்களாகவும் நினைத்து விளையடுவார்கள். ஒரு அணியினர்

                “பூப்பறிக்க வருகிறோம்
           பூப்பறிக்க வருகிறோம் – நந்தவனத்தில்”

                 என்று வருவார்கள்.

                 மற்றொரு அணியினர்
“என்ன பூ வேண்டும்
  என்ன பூ வேண்டும் - நந்தவனத்தில்”

என்று கேள்வி கேட்பார்கள். இரு சிறுவர்கள் கைகளை விரல்களால் கோத்துக் கொண்டு நிற்பார்கள். மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக நின்று ரயில் போல நின்று கொண்டு

 
“ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரே பூ பூத்ததாம்
இரண்டு குடம் தண்ணி ஊத்தி
  ரெண்டே பூ பூத்ததாம்
என்று பத்து வரை பாடி உள்ளே செல்வர்கள்.

         " பத்து குடம் தண்ணி ஊத்தி
          பத்தே பூ பூத்ததாம்"

என்று உள்ளே நுழைந்து வரும் பொழுது கைகோர்த்து நிற்கும் சிறுவர்கள் கடைசியில் வருபவனைக் கைக்குள் அடக்கி விடுவார்கள். கடைசிப் பையன் சிறையில் இருப்பது போல் இருப்பான். மற்றவர்கள் சேர்ந்து,சிறைபிடித்து வைத்த சிறுவர்களிடம்,தலைவன் சென்று

             "இம்புட்டு பணம் தரோம்
              விடுடா துலுக்கா"

என்று காலிலிருந்து தலைவரை கடுவார்கள். சிறைபடுதியவர்கள் "விடமாட்டோம் மலுக்கா" என்று படுவார்கள். பணத்திற்குப் பதில் "இம்புட்டு நகை தரோம் விடுடா துலுக்கா" என்பர். சிறைபடுதியவர்கள் "விடமாட்டோம் மலுகா" என்பார்கள். கடைசியாக "ராஜா மகளைக் கட்டித் தரோம் விடுடா துலுக்கா" என்று பாடியதும் "விட்டுடறோம் மலுக்கா" என்று விடுவித்து விடுவார்கள். இவ்வட்டாம் தொடர்ந்து நடைபெறும்.

அதிகார பலம் கொண்ட முகம்மதியர்கள் வன்முறை மூலம் தாம் விரும்பிய பெண்ணைச் சிறைப்படுத்தி விட்டனர். இதனை விடுவிக்கப் பெரியோர்கள் பணம், நகை கொடுத்ததையும் ஏற்றுக் கொள்ளவில்லை. முகம்மதியர் காலத்தில் நடைபெற்ற போராட்டத்தை விளக்குவதாகவே இப்பாடல்கள் அமைத்துள்ளன.

நண்டூருது நரிஊருது

சின்னான் சின்ன விரல்
சீனத்தம் பன்றிக்குட்டி
வாழை இளங்குருத்து
வந்தாரைக் கைகாட்டி
பேரைப் பெருவிரல்
நண்டூருது நரிஊருது...
நண்டூருது நரிஊருது...
நண்டூருது நரிஊருது...
அக்குளு கிளு கிளு

மேலும் பாடல்கள்

  • தா பூ தாமரைப் பூ
  • கீரைக்குத் தண்ணீர் இறைத்தல்
  • சாலச் சாலச் சப்பாணி
  • கைவீசம்மா கைவீசு
  • பிச்சக்காரன் பிராமணப் பெடியன்
  • ஆணை ஆணை
  • சின்னான் சின்னிவிரல்
  • தத்தக்கப் பித்தக்க நாலுகால்
  • ஊஞ்சாலே ஊஞ்சப்பனே
  • சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
  • சண்டைக்கு வாறியா திறப்புத் தாறியா
  • டிக் டிக் தபால் பெட்டி
  • டாங்குப் பித்தளம் டசுக்குப் பித்தளம்
  • அப்பி அப்பி மாமா
  • நாய்க்கு மூக்கில்லை நரிக்கு மூக்கில்லை

உசாத்துணைகள்

  • அம்மன்கிளி முருகதாஸ் (தொகுத்தது). 2007. இலங்கைத் தமிழிரிடையே வாய்மொழி இலக்கியம். கொழும்பு: குமரன் புத்தக இல்லம்.
  • செவி வழிக்கேள்வி
  • நாடு போற்றும் நாட்டுப்புறப் பாடல்கள்,முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணன், (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்), ஜோதி புக் செண்டர், சென்னை.
"https://tamilar.wiki/index.php?title=விளையாட்டுப்_பாடல்&oldid=16637" இருந்து மீள்விக்கப்பட்டது