விலங்கு உளவியல்

விலங்கு உளவியல் (Animal psychology ; Comparative Psychology) என்பது விலங்குகளின் நடத்தையோடு, மனிதனின் நடத்தையையும் ஒப்பிட்டு புரிந்து கொள்ள உதவும், பல்துறை சார்ந்த உளவியல் துறை ஆகும். இதன் சொற்பிறப்பியல் அடிப்படையில் நோக்குவோமானால், மனிதனின் நடத்தையும், அவனது சமூக கட்டமைப்புகளும், உயிரின வாழ்வியல் கூறுகளோடு ஒப்பிட்டு ஆராயும் விலங்கின நடத்தையியல் என்பதோடும், பரிணாம உயிரியல் என்பதோடும், பொதுவான மனிதனின் உளவியல் இயல்புகளோடு ஒப்பிட்டு அறியவும், இந்த உளவியல் பிரிவு பெரிதும் துணையாகிறது.[2]

மோர்கன், நடத்தை ஆய்வாளர்
(Conwy Lloyd Morgan, FRS[1])
1852 – 1936

தோற்றம்

பண்டைக் காலத்தில் உயிருள்ளன, உயிரில்லன ஆகியவற்றிற்குத் தத்கவாறு, மனித நடத்தைகள் மாறி வந்திருக்கின்றன. முதலில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக விலங்குகளை , மனிதன் எதிர்க்கவேண்டி யவனாயிருந்தான். பின்னர், குதிரை, நாய், பருந்து, பூனை போன்ற பிற விலங்குகளையும், பயன்படுத்திக்கொள்ளக் கற்றுக்கொண்டான்.[3] பசித்தபோது உண்ணல், நீர்வேட்கையுற்றபோது குடித்தல், இனம்பெருக்கல், மற்ற விலங்குகளுடன் ஒன்று சேர்ந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளல், ஆபத்துக்குத் தப்பி ஓடி ஒளிதல் போன்ற செயல்களை விலங்குகளும் தன்னைப்போலவே செய்வதை அறிந்து கொண்டான்.[4] அவைகளைப்பற்றி நம் மூதாதையர் கொண்டிருந்த மனப்பான்மையைப் பொதுமக்களிடை வழங்கும் கதைகளும், புராணக்கதைகளும் நமக்குப் பதிவு செய்து, பாதுகாத்து வைத்துள்ளன. நம் மூதாதையர் தமக்கிருந்தது போலவே, மற்ற உயிர்களுக்கும் ஆன்மாவும், ஆசைகளும் உணர்ச்சிகளும் உண்டென்று எண்ணினர். மேலும், மனிதனுடைய ஆன்மா விலங்கின் உடலில் தங்க முடியும் என்றும் அவர்கள் நம்பியதாக, அவர்களுடைய மறுபிறப்புக் கொள்கை காட்டுகின்றது. மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதைக் கற்பிக்க, விலங்குகளையும் பயன்படுத்தினர் என்பதை உலகப் புகழ்பெற்ற பஞ்சதந்திரக் கதைகள் எடுத்துக் கூறுகின்றன.

மனிதர்கள் மட்டுமே சிந்தனை ஆற்றலை உடையவர் என முந்தைய அறிஞர்கள் கூறினர்.[5] எடுத்துக்காட்டாக, உள்பொருள் என்பது, கருத்தும், பரப்பும் உடையது என்று இடேக்கார்ட் என்னும் பெரிய தத்துவ இயலார் கூறினர். மக்கள் மட்டுமே சிந்திக்கக் கூடியவர் என்று அவர் கூறினார். விலங்குகள் பேச முடியாதிருப்பதால், அவை சிந்திப்பதில்லை என்று முடிவு செய்ய வேண்டியிருக்கிறது என்றும், அதனால் விலங்குகள் என்பவை சிக்கலான பொறிகளுள்ளவை மட்டுமே என்றும், அவை குறிப்பிட்ட நோக்கில் நடக்குமாறு ஆக்கப்பட்டிருப்பதாலேயே, அவை நடக்கின்றன என்றும் அவர் முடிவு செய்தார்.

ஆய்வுகள்

19 ஆம் நூற்றாண்டில் உயிரியல் வளர்ச்சி பெறவே, விலங்குகளின் நடத்தை பற்றிய ஆய்வுகள் நடந்தன.[6]டார்வின் தாம் கவனித்துக் கண்டவற்றை வைத்து, விலங்குகளின் உள்ளக் கிளர்ச்சித் தோற்றத்தைப்பற்றி ஒரு சிறந்த நூல் எழுதினார். மனிதனுக்கும் விலங்குகட்கும் இடையில் பிளவு கிடையாது என்று பரிணாமக் கோட்பாடு கூறிற்று. அது காரணமாக விலங்கு உளவியல் வளர்ச்சி பெறலாயிற்று. ரோமானெசு, இலாயிடு மார்கன் போன்ற கருத்தாளர்கள் மனச்செயல் முறைகள் பரிணாம முறையில் வளர்ச்சி அடைவது பற்றி, ஆராய்ச்சி செய்தனர். இறப்புக்கு பின்னான வாழ்நாள் குறித்து சில உளவியலாளர்கள்(Curt John Ducasse) ஆராய்ந்தனர்.[7]

இபிரேயர், காகில் (Coghil1)[8], கூவோ, கார்மைக்கல் போன்றவர்கள் கருவில் உள்ள விலங்குத் தூண்டல்களுக்கு, எத்தகைய துலங்கல்களைக் காட்டுகின்றது என்பது பற்றி ஆராய்ந்தனர். துலங்கல் மண்டலம் வேலைசெய்யும் முறையை அறிவதற்காக, சாலமாண்டர் முட்டையிலுள்ள குஞ்சு, சீமைப் பெருச்சாளியின் கரு ஆகியவை ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளன.[9][10] உறுப்பு கருவாயிருக்கும்போது, முழுவதுமாக எதிர்வினை வேலை செய்கிறது என்பதை இவர்கள் கண்டறிந்தனர். உறுப்பு வளரும் போது தான், அதன் உறுப்புக்கள் தனித்தனியே வேலை செய்யத் தொடங்குகின்றன. முதலில் உணர்ச்சி மிகுந்த பாகம், தலையே என்றும், கரு வளரும்போதே கீழ்ப் பகுதிகள் உணர்ச்சியுடையனவாகவும், வேறுவேறு தொழில் செய்வனவாகவும் ஆகின்றன என்றும் அவர்கள் விளக்குகிறார்கள். இந்த உண்மை, குழந்தைகளைக் கொண்டு செய்த ஆராய்ச்சிகளாலும் உறுதி அடைகின்றது. குழந்தையும் முதலில் தலையையும் கழுத்தையும், பிறகு கைகளையும் இடுப்பையும், இறுதியில் கால்களையும் அடிகளையும் பயன்படுத்தக் கற்றுக் கொள்கிறது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=விலங்கு_உளவியல்&oldid=18145" இருந்து மீள்விக்கப்பட்டது