வள்ளிமலை முருகன் கோயில்
வள்ளிமலை முருகன் கோயில், வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே அமைந்த குன்றின் மீதுள்ளது. வேலூர் - பொன்னை செல்லும் பேருந்துகள் வள்ளிமலை அடிவாரம் வழியே செல்கிறது. இக்கோயில் வேலூரிலிருந்து 25 கி மீ தொலைவில் உள்ளது. [1][2]
புராண வரலாறு
சமண சமயத்தில் 23-வது தீர்த்தங்கரராகத் திகழ்ந்தவர் பார்சுவநாதர். இவர், முக்குடையின் கீழ் அமர்ந்த நிலையிலும் நின்ற நிலையிலும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளார். முக்குடைக்குக் கீழ் ஏழு தலைகளைக் கொண்ட நாகம் இவருக்கு அரணாகக் காட்டப்படுகிறது. எனவே, இவரை பார்சுவநாதர் என்று கூறுவர். இவரது பாதுகாவலர்களாகவும், அவர்களின் சாசனா தெய்வமாகவும் விளங்கியவர்கள் பத்மாவதி இயக்கியம்மனும், இயக்கன் தர்னேந்திரனும் ஆவர். சிற்பங்களில் பத்மாவதி இயக்கியம்மன் சற்று ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் தனது வலது காலை சற்று தூக்கி அமர்ந்துள்ள நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. தனது வலது கையை அபய முத்திரையுடன், தூக்கிய தனது இடது காலின் மேல் வைத்த நிலையில் காணப்படுகிறது.
இச்சிற்பம், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அமைந்துள்ள வள்ளிமலையில் காணப்பட்ட சமண பெண் தெய்வமாகிய பத்மாவதி இயக்கியம்மன் ஆகும். வள்ளிமலை ஒரு சமணத் தலமாக விளங்கிய ஒன்று. இங்கு குடவரைச் சிற்பங்களும் உள்ளன. இதன் காலம் பொ.ஆ. 9-ம் நூற்றாண்டு என்பர். கழுகு மலையிலும் பத்மாவதி சிற்பம் ஒன்று காணப்படுகிறது. அமர்ந்த நிலையில், நான்கு கரங்களுடன் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. பத்மாவதி வழிபாடு பொ.ஆ.18-ம் நூற்றாண்டு வரை காணப்படுகின்றது.
மேலும் தற்போது இது இந்து தலமாக மாற்றப்பட்டு பல புனைவுகளை உள்ளடக்கியுள்ளது. அதன்படி இத்தலத்தில் வளர்ந்த வள்ளி, முருகனை கணவனாக அடைய விரும்பி, திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். கன்னிப்பருவத்தில் அவள் தினைப்புனம் காக்கும் பணி செய்தாள். அங்கு வந்த முருகன், வள்ளியைத் திருமணம் செய்ய விரும்பினார். இதையறிந்த வள்ளியின் வளர்ப்பு தந்தை நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார். நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார்.
கோயில் அமைப்பு
வள்ளிமலைக் கோயிலிலின் கருவறையில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி குறவர் வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது.
அடிவாரம் மற்றும் மலைக்கோயிலில்; குமரி வள்ளிக்கு தனி சன்னதி இருக்கிறது. வள்ளி கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில், கவண் கல் வைத்திருக்கிறாள். முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது.
அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம் இது. மலைக்கோயிலில் கொடி மரத்திற்கு எதிரே விநாயகர் இருக்கிறார். முன் மண்டபத்தில் நவவீரர்கள், நம்பிராஜன் இருக்கின்றனர். இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள வனத்திற்குள் வள்ளி பறவைகள் விரட்டிய மண்டபம், நீராடிய சுனை, மஞ்சள் தேய்த்த மண்டபம், முருகன் நீர் பருகிய குமரி தீர்த்தம் என்னும் சூரிய ஒளி படாத தீர்த்தம் ஆகியவை உள்ளன. யானையாக வந்து வள்ளியை பயமுறுத்திய விநாயகர், மலை வடிவில் இருக்கிறார். இதை யானைக்குன்று என்றழைக்கிறார்கள்.