வல்வெட்டித்துறை சிவன் கோவில்

வல்வெட்டித்துறை சிவன் கோவில் என அழைக்கப்படும் வல்வை ஶ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி கோயில் இலங்கையின் வடக்கே வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இத்தலத்தின் மூலவர் வைத்தீசுவரப் பெருமானும் தாயார் ஶ்ரீவாலாம்பிகா தேவியும் ஆவார். இக்கோயிலை அமைத்தவர் வெங்கடாசலம்பிள்ளை ஆவார்.

வல்வெட்டித்துறை சிவன் கோவில்

அமைவிடம்

இக்கோயில் வல்வெட்டித்துறை-காங்கேசன்துறை சாலையில் வல்வைச் சந்தியிலிருந்து 300 யார் தொலைவில் மேற்குத் திசையில் முத்துமாரி அம்மன் கோயிலுக்குத் தென் திசையில் 'இராசிந்தான் கலட்டி’ என்று சொல்லப்படும் காணியில் அமைந்துள்ளது.

தல வரலாறு

இக்கோவிலின் நிறுவனர் வெங்கடாசலம்பிள்ளையின் தந்தை திருமேனியாரின் தந்தை ஐயம்பெருமாள் வேலாயுதர் என்பவர் அரசாட்சியினரால் “அடப்பன்” என்ற பதவி வழங்கப்பெற்றவர். இது நெய்தல் நிலத் தலைவனைக் குறிப்பதாகும். யாழ்ப்பாணப் பகுதியில் அக்காலம் வாழ்ந்த முன்னணிப் பிரமுகர் வரிசையில் வல்வெட்டித்துறையை சார்ந்த மேற்குறிக்கப்பட்ட ஐயம்பெருமாள் வேலாயுதர் என்பவரைப் பற்றியும் அவரது புத்திரர்கள் பற்றிய விபரமும் வசாவிளான் கல்லடி வேலுப்பிள்ளையால் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவ கௌமுதி என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலாயுதரின் புத்திரர்களில் ஒருவரான புண்ணியமூர்த்தி என்பவர் வல்வை முத்துமாரி அம்மன் கோயிலைக் கட்டியவர். இன்னொரு புத்திரரான திருமேனியாரின் புத்திரர்களில் ஒருவரான குழந்தைவேற்பிள்ளை என்பவர் கொழும்பிலுள்ள யாழ்ப்பாணத்தார் கதிர்வேலாயுதசுவாமி கோயிலையும், பர்மாவில் ஒரு முருகன் கோயிலையும் நிறுவினார். இன்னொரு புதல்வரான பெரியதம்பியார் அல்லது பெரியவர் என அழைக்கப்படும் வெங்கடாசலம்பிள்ளை என்பவரே வைத்தீசுவரசுவாமி கோயிலைக் கட்டினார். கடலில் மூழ்கிய அத்திலாந்திக் கிங் (Erig Atlantic king) என்னும் கப்பலை மூழ்கிய நிலையிலேயே விலை கொடுத்து வாங்கி அதனை மீட்டெடுத்து வேண்டிய திருத்தங்கள் செய்து அதன் மூலம் கடல் வணிகம் செய்து கிடைத்த செல்வத்தில் ஒருபகுதியைக் கொண்டே இக்கோயிலைக் கட்டினார்.

வெங்கடாசலம் பிள்ளையவர்கள் முத்துமாரி அம்மன் கோயிலுக்குத் தர்மகர்த்தாவாக இருக்கும் காலத்தில் கம்பர்மலையை சார்ந்த அன்பர் ஒருவருடன் மாலை வேளைகளில் காலாற உலாவி வருவது வழக்கம். இப்படி நடந்துவரும் நாளில் ஒரு நாள் அம்மன் கோவில் பக்கமிருந்து தெற்கு நோக்கி வரும் சமயம் பற்றைக்காடாக மஞ்சல் பஞ்செடிகள் நிறைந்த பகுதியில் நெருப்பு எரிவது போன்ற ஒரு ஒளி தென்பட்டதாகவும் இருவரும் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அவ்விடத்தில் மாட்டுச்சாணம் தெரிந்ததாயும் மறுநாள் இவரின் தந்தையாரான திருமேனியார் கனவில் தோன்றி அவ்விடத்தில் சிவனுக்கு ஆலயம் எடுக்கும்படி பணித்தார் என்றும் தெரியவருகிறது. தமக்கு பரம்பரையாக வந்த தோட்டங்கள் வயல்கள் ஆகியவற்றை திருத்திப் பயிரிட்டும், பல புதிய காணிகளை விலைக்கு வாங்கியும் செல்வத்தை குவித்து அத்தோடு கப்பல்களுக்கு அதிபதியாகி கடல் வணிகஞ் செய்தும் செல்வத்தை குவித்தார். அம்மன் கோயிலுக்கு தெற்குப் பகுதியிலிருந்த மடத்திலுருந்து கொண்டே அம்மடத்திற்குத் தென்பக்கமாக இருந்த 60 பரப்பு காணியை விலைகொடுத்து வாங்கினார். இராசிந்தன் கலட்டி என அழைக்கப்படும் இக்காணியை துப்பரவு செய்து 1867ம் வருடம் அத்திவாரம் இடுதலாகிய சங்குத்தானம் செய்வித்தார். இக்கோயிலை கட்டுவதற்காக இவரின் தம்பிமார்களாகிய குழந்தைவேற் பிள்ளையும், இராமசாமியும் தங்கள் செல்வமெல்லாவற்றையும் வழங்கியிருந்தார்கள்.

இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறந்த சிற்பிகள் பலவகைக் கம்மியர்கள் கோயில் கட்டுமான வேலைகளைத் திறம்படச் செய்தனர். கோயில் கட்டத்தொடங்கிய 1867ம் வருடம் தொடக்கம் சிவபதமெய்திய 1900 வருடம் வரை கோயில் எசமானர்களுக்கு கோயில் கட்டுவதற்கும், பூசைக் கிரமங்களுக்கு வேண்டிய அறிவுரைகளையும், சரீர உதவிகளையும் வல்வை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச.வைத்தியலிங்கம் பிள்ளையவர்கள் வழங்கி வந்துள்ளார்கள். இக்கோயிலுக்கான இலிங்கத்தையும் ஆவுடையாரையும் காசிவரை சென்று அக்காலத்தில் பிரபுவாயிருந்த ஆ.விஸ்வநாதபிள்ளை என்பவர் கொண்டு வந்தார். கொழும்பிலுள்ள சிவஶ்ரீ நா.குமாரசாமிக்குருக்களுடன் திரு.குழந்தைவேற்பிள்ளையவர்கள் தொடர்பு கொண்டு அவரை வரவழைத்து சுபானு வருடம் 08.06.1883ல் நூ தனப்பிரதிட்டா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடந்தேறியது. இவ்வாலயத்து லிங்கம் ‘பாணலிங்கம்’ என்று சொல்லப்படுகிறது. விஸ்வநாதப்பிள்ளையவர்கள் லிங்கத்துடன் உற்சவமூத்திகளாகிய நடேசர், சந்திரசேகர் ஆகியவற்றைக் கொண்டு வந்து கொடுக்க இவரது மகன் சரவணமுத்துபிள்ளையவர்கள் சுவாமி கோயிலுக்குத் தங்கத் தகடு மருவிய தூபி முடியை இயற்றுவித்துக் கொடுத்துள்ளார். நடந்து முடிந்த கும்பாபிஷேகத்திற்கு பருத்தித்துறை, வண்ணார்பண்ணை, நல்லுர், வல்வெட்டி, உடுப்பிட்டி, கம்பாமலை, சரசாலை, மீசாலை, மந்துவில், கற்கோவளம், தொண்டைமானாறு, மயிலிட்டி, காங்கோசன்துறை, தெல்லிப்பழை, வட்டுக்கோட்டை, காரைதீவு, திருகோணமலை, கொழும்பு ஆகிய பகுதிகளிலுள்ளஅடியவர்களும் நாட்டுக்கோட்டை செட்டிமார்களும் கும்பாபிஷேகக் கிரியைகளுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் நிதியுதவி என்பனவற்றை வழங்கியிருந்தார்கள். கும்பாபிஷேகத்தையடுத்து முறையாக ஆறுகாப் பூசைகள் நடைபெறலாயின. முதல்முதலாகப் புலோலியைச் சோர்ந்த பிரம்மஶ்ரீ சண்முகநாதக்குருக்கள் பிரதம பூசகராயிருந்து பூசைகளை நடாத்தி வந்தார். ஆறுகாலப் பூசையுடன் நித்தியோற்சவம், நித்தியாக்கினி என்பனவும் நடைபெறத் தொடங்கின.

கும்பாபிஷேகத்துக்கான பொருளுதவி போன்றவற்றை வல்வையைச் சாராத பிறஊர்களைச் சேர்ந்த அடியார்கள் செய்தது போல மஹோற்சவங்களையும் வல்வையின் அயற் கிராமங்களான வல்வெட்டி, கம்பர்மலை, உடுப்பிட்டி, தொண்டைமானாறு, மயிலிட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த அடியார்கள் ஏற்று நடாத்தி வருவது ஒரு சிறப்பான அம்சமாகும். கும்பாபிஷேக தினத்தன்று மயிலிட்டியைச் சேர்ந்த அடியார் ஒருவர்அதில் கலந்து கொள்ளும் நோக்கோடு வல்வை வந்து கோயில் வாசலிலுள்ள கிணற்றில் கால் அலம்பிவிட்டு உள்ளே செல்ல முற்பட்ட சமயம் கோயில் வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்த ஒருவர் இந்த அடியாரை நோக்கி உமது காலின் பிற்பக்கம் அலம்பப்படவில்லையென்று கூறியிருக்கின்றார். அச்சமயம் வாசலைத் துப்பரவு பண்ணி க் கொண்டிருந்தவர் இடுப்பில் ஒரு சிறிய துண்டை மட்டும் கட்டிக் கொண்டிருந்தமையால் வந்தவர் அவருக்கு அலட்சியமான வார்த்தைகளைக் கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். கும்பாபிஷேகக் கிரியைகள் ஆரம்பமாகி எசமானுக்கு சங்கற்பம் செய்யும் போதுதான் தான் அலட்சியமான வார்த்தைகளைக் கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். கும்பாபிஷேகக் கிரியைகள் ஆரம்பமாகி எசமானுக்கு சங்கற்பம் செய்யும் போதுதான் தான் அலட்சியமான வார்த்தைகளை கூறியவர் தான் இக் கோயிலின் எசமான் என்பதை அறிந்து கொண்டதோடு கிரியைகள் யாவும் நிறைவுற்றதன் பின் எசமானரான வெங்கடாசலம்பிள்ளையவர்களிடம் வந்து மன்னிப்புக் கோரியதோடு இதற்குண்டான தண்டனை எதுவோ அதைத்தான் ஏற்றுக்கொள்வதாயும் கூறினார். இச் சந்தர்ப்பத்தில் எசமான் அந்த அன்பரிடம் சிவனின் கொடியேற்றத்திருவிழாவை ஏற்று நடாத்தும்படி கேட்க அந்த அன்பரும் அதனை ஏற்று நடாத்துவதற்குச் சம்மதத்தை தெரிவித்தார். இச் சம்பவமே மயிலிட்டி அன்பர்கள், கொடியற்ற விழாவினை ஏற்று நடாத்துவதற்காக அமைந்ததென எமது முன்னோர்கள் மூலம் அறிந்து கொண்டதாகும்.

இக்கோயிலின் நித்திய நைமித்திய பூசைச் செலவுக்காக வல்வையிலுள்ள வியாபாரிகள் முதலானோர் பல வகையான ஏற்பாடுகளைச் செய்து மகமைப் பொடுட்களை வழங்கி வந்துள்ளார்கள். வே.வைரமுத்துப்பிள்ளையென்னும் பிரபல வர்த்தகரொருவர் தான் கொடுக்கும் மகமைப் பொருட்களை செவ்வனே கொடுத்து வந்ததோடு மட்டக்களப்பில் நெல்லுக்கிள்ளலாகிய ஒரு ஏற்பாட்டைத் தாமே உண்டு பண்ணி அதில் கிடைக்கும் வருவாயைக் கோயிலுக்கு வழங்கி வந்துள்ளார். இந்தப் பிடிநெல்லுக்கிள்ளும் ஏற்பாட்டைத் தவிர இவ்வூரவர்கள் பிடி அரிசி கிள்ளுதல், உண்டிகைப் பெட்டி மகமை, வியாபார மகமை, கூலி மகமை, சம்பள மகமை ஆகியவற்றையும் ஏற்பாடு பண்ணி வந்துள்ளார்கள்.

திரு.வெங்கடாசலம்பிள்ளையவர்கள் 24.10.1892 சிவபதமடைய இவரின் சகோதரர்கள் ஒருவரான திருமேனியார் குழந்தைவேற்பிள்ளையவர்கள் எசமான் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இவரது காலத்தில் வட்டுகோட்டை கிழக்கு சித்தங்கேணியைச் சேர்ந்த யாழ்குடாநாட்டின் கண் உள்ள பிரபுக்களில் ஒருவரான காசிநாதர் வயித்திலிங்கம் என்பவர் 1901ம் வருடம் வசந்தமண்டபத்தினைக் கருங்கல்லினால் கட்டிக்கொடுத்துள்ளார். இவர் யாழ் குடா நாட்டிலுள்ள அனேக கோயில்கள், பாடசாலை என்பவற்றிக்குப் பல தர்மாகாரியங்கள் செய்தவர். திரு.குழந்தைவேற்பிள்ளையவர்கள் 1905 வரை கோயில் எசமானாக இருந்து சிறப்புற நடாத்தி வந்துள்ளார். இவருக்குப் பின் திரு.வெங்கடாசலம்பிள்ளையவர்களின் இளைய சகோதரர் இராமசாமி அவர்கள் எசமான் பொறுப்பை ஏற்று 1912 ம் வருடம் வரை பணியாற்றினார். இராமசாமி அவர்களுக்குப்பின் கோயில் ஸ்தாபகர் வெங்கடாசலம்பிள்ளையவர்களின் இரண்டாவது புத்திரரான சின்னத்துரை என அழைக்கப்படும் திருமேனிப்பிள்ளையவர்கள் கோயில் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார் . இவரது காலத்தில் பலதிருப்பணி வேலைகள் இடம்பெற்றன. இந்தியாவைச் சேர்ந்த தெலுங்கு தேச வர்த்தகரான காரஞ்சேடு ஏர்லக்கட்டர் அரங்கநாயுடுகாரு என்னும் பிரபு முன்வாயில் மண்டபத்தையும் கோபுர அடிப்பாகத்தையும் அமைத்து கொடுத்துள்ளார். இந்த வர்த்தகர் பல கப்பல்களுக்கு அதிபதியாக இருந்ததுடன் தனது கப்பல்களுக்கெல்லாம் வல்வை வாசிகளையே தண்டயல்களாகவும் இதர மாலுமிகளாகலும் பணிக்கமர்த்தியவர். வல்வைப்பிரபுவாகிய விஸ்வநாதர் சரவண முத்துப்பிள்ளை என்பவர் நடராஜர் மண்டபத்தை அமைத்துக்கொடுத்ததோடு கோயில் வாயில் பெருவீதிக்கும் தனது நிலத்தின் ஒரு பகுதியைக் கொடுத்து உதவினார். கம்பர்மலையைச் சேர்ந்த வல்லியப்பர் வேலுப்பிள்ளையும் பெண் பாறுவதிப் பிள்ளையும் வேறு சில திருப்பணி வேலைகளைச் செய்து கொடுத்துள்ளார்கள்.

1908ம் வருடமளவில் காசியிலிருந்து வந்த காசிய கோத்திரத்தைச் சேர்ந்த பிரம்மஶ்ரீ குமாரசாமிக்குருக்களின் மகனும் நீர்வேலியில் ஜனனமும், கோப்பாயில் வாசம் செய்தவரும், ஆரிய திராவிட மொழிகளில் திறமை உடையவரும், கிரியாவிற்பன்னரும், குருலட்சணமும் நிறைந்தவருமான பிரம்மஶ்ரீ கார்த்திகேயக்குருக்கள் பிரதம பூசகரானார்.

திருமேனிப்பிள்ளையவர்கள் எசமானராக இருந்த காலத்தில் நொத்தாரிசு சபாரெத்தினம் முகதாவில் 08.03.1921ல் 4889 இலக்கம் கொண்ட கோயிலின் பொறுப்பாளி நியமிப்புச் சாதனத்தில் சுவாமியின் பெயர் வைத்தீஸ்வரர் என்றும் அம்பிகையின் பெயர் தையல்நாயகி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1883ம் வருடம் இயற்றமிழ் போதகாசிரியர் வல்வை வைத்திலிங்கம்பிள்ளையவர்கள் பாடிய ஊஞ்சல் பதிகத்திலும் அம்பிகையின் பெயர் தையல்நாயகி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 4889 இலக்க சாதனத்தில் கோயிலுக்கான அசைவுள்ள சொத்துக்கள், அசைவற்ற ஆதனங்கள் யாவற்றையும் தன்னுடன் சேர்த்துப் பராமரிப்பதற்காக அறங்காவலர்களாக தனது மூத்த சகோதரன் வேலுப்பிள்ளையின் மகன் திருவேங்கடத்தையும், இளை சகோதரரின் மகன்களான அருணாசலம் வேங்கடாசலம், அருணாசலம் சபாரத்தினம் ஆகிய மூவரையும் நியமிப்பதோடு மூத்தவரான வேலுப்பிள்ளை திரு.வேங்கடமே மற்றைய இருவரையும் ஒருப்படுத்தி முதன்மையுடையவராக இருந்து சகல செய்கைகளையும் செய்து வரவேண்டுமெனவும் குறித்த மூவரும் சீவிய காலத்தின் பின் அவர் அல்லது அவர்களின் ஆண் சந்ததியாரே கேயிலைப் பராமரிக்க வேண்டுமென்றும் குறித்த மூவருக்கும் அல்லது அவர்களின் வழித்தோன்றல்களில் ஆண் சந்ததி இல்லாமற்போனால் தனதும் தனது சகோதரர்களினதும் பெண்சந்ததியாரில் வரும் ஆண்சந்ததியாருமே கோயிலையும் இதர ஆதனங்களையும் பராமரித்து வரவேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறங் காவலர்கள் கோயிலைப் பராமரிப்பதிலும், கணக்குக் காட்டுவதிலும் ஒழுங்கீனங்கள் ஏற்பட்டால் அதனை விசாரிப்பதற்காக ஒன்பது பேர் கொண்ட விசாரணை கர்த்தாக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமேனிப்பிள்ளையவர்கள் காலத்தில் 1919ம் வருடம் அமிர்தானந்தசுவாமிகள் என்னும் அந்தணப் பெரியார் இவ்விடம் வந்து ஊரவர்கள், அயலூரவர்கள் ஆகியோருடைய பொருளுதவியோடு புனராவர்த்தனப் பிரதிஷ்டா கும்பாபிஷேகம் ஒன்றினை நடாத்தி வைத்தார். பிரம்மஶ்ரீ கார்த்திகேயக் குருக்கள் காலத்தில் அவரது விருப்பப்படி சிறியதந்தையாரான மாப்பிள்ளை குருக்கள் என அழைக்கப்படும் இராமலிங்கக் குருக்கள் பிரதான ஆசாரியாக இருந்து இக்கும்பாபிஷேகம் சிறப்புற நடாத்தி வைக்கப்பட்டது. இக்கும்பாபிஷேகம் நிகழ்வதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் வல்வை ச.செல்வவிநாயகம், திரு.ஆ.வேலுப்பிள்ளை ஆகியோராவார்கள்.

1921ம் வருடம் திருமேனிப்பிள்ளையவர்கள் சிவபதமடைய இவரது இளைய சகோதரனான அருணாச்சலத்தின் மூத்தமகன் வெங்கடாசலம் அவர்கள் எசமானாகப் பொறுப்பேற்று நடாத்தி வந்து சிறிதுகாலத்தின் பின் தனது தம்பியாரான சபாரெத்தினம் அவர்களிடம் கோயில் பொறுப்புக்களை ஒப்படைத்தார். சபாரெத்தினம் அவர்கள் 1923 தொடக்கம்1956 வரை கோயிலை நிர்வகித்து வருங்காலத்தில் இராஜகோபுரத்தை 1939ம் வருடம் வல்வைப் பெரியார் சி.செல்லத்துரை பிள்ளையவர்களும், தேவி வாசல் மண்டபத்தை ஆசிரியர் வே.வ.சிவப்பிரகாசம் அவர்களும் மணிக்கோபுரத்தை திரு.ச.துரைராஜா அவர்களும் வசந்த மண்டபப் பூச்சு வேலையை திரு.சி.குமாரசாமி அவர்களும் அமைத்துக் கொடுத்துள்ளார்கள். மணிக்கோபுரத்தில் அமைப்பதற்கான மணியினை திரு.ம.இராமசாமி என்பவர் வழங்கியுள்ளார்.

பிரம்மஶ்ரீ கார்த்திகேயக் குருக்கள் பிரதம குருக்களாக இருந்துவரும் காலத்திலே மகன் சின்னப்பா குருக்கள் என அழைக்கப்படும் நீலகண்டக் குருக்கள், தகப்பனுடன் கூட இருந்து பூசனைகளை நடத்தி வர உதவினார். பிரம்மஶ்ரீ கார்த்திகேயக் குருக்கள் 1930 இல் இறைவனடி சேர்ந்ததைத் தொடர்ந்து உதவியாளராக இருந்த நீலகண்டக்குருக்கள் பிரதம பூசகரானார் . இக் காலத்தில் ஆலய மேற்குவாசல் கோபுரம் அமைப்பதற்கான வேலைகள் திரு.சி.நாகரெத்தினம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டு ஓரளவு பணிகள் நிறைவேற்றப்பட்ட சமயம் இடையில் ஏற்பட்ட தடங்கலினால் கோபுர வேலைமுற்றுப் பெறாமல் போய்விட்டது. பிரம்மஶ்ரீ நீலகண்டக்குருக்கள் பிரதம பூசகராக இருக்கும் காலத்தில் 1942ல் அவரது மகன் பரமேஸ்வரக் குருக்கள் பூசைகளை நடாத்ததுவதற்கு உதவி செய்து வந்தார். இச் சந்தர்ப்பத்தில் 1954ம் வருடம் நீலகண்டக் குருக்கள் இறைவனடி சேர்ந்ததைத் தொடர்ந்து பிரம்மஶ்ரீ பரமேஸ்வரக் குருக்கள் பிரதம பூசகரானார். இக்காலகட்டத்தில் 1956ம் வருடம் கோயில் எசமான் சபாரத்தினம் அவர்கள் சிவபதமடைய இவரது தமையன் வெங்கடாசலம் அவர்களின் மேற்பார்வையில் சபாரத்தினம் அவர்களது மூன்றாவது மகன் சின்னத்துரை அவர்கள் கோயில் ஸ்தாபகர் திரு.வெங்டாசலம்பிள்ளை அவர்களின் ஆண்வாரிசுகள் எண்மரின் சார்பாக 1956ல் கோயில் எசமானர் ஆனார். கோயில் கும்பாபிஷேகம் நடத்தக் காலம் தாழ்த்தியதால் வல்வையிலுள்ள சிவநேயப் பிரபுக்களான திருவாளர்கள் சி.விஷ்ணுசுந்தரம், அ.துரைராசா, ச.ஞானமூர்த்தி க. சோமசு- -ந்தரம் ஆகியோர் ஒன்று கூடித் திருப்பணிக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டு 25.04.1966இல் பாலஸ்தானம் செய்யப்பெற்றது.கோயில்ப பூச்சு வேலைகளுக்கான பூச்சு மைகள் யாவும் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு திருப்பணிகள் யாவும் நிறைவெய்திய பின் புனராவர்த்தன மகாகும்பாபிஷேகம் பிலவங்க வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி திருதியை திதியும் புனர்பூச நட்சத்திரமும் கூடிய சுபவேளையில் (11.06.1967) பிரம்மஶ்ரீ பரமேஸ்வரக்குருக்களினால் நிறைவேற்றி வைக்கப்பட்டது. இக்கும்பாபிஷேகத்தைமுன்னிட்டு குடமுழுக்கு விழா மலர் ஒன்று வெளியிட்டு வைக்கப்படடதோடு கோயில் வாசலையும், பருத்தித்துறை உடுப்பிட்டி வீதியையும் இணைக்கும் புதிய வீதி திறக்கப்பட்டு அதற்கு சிவபுர வீதி எனவும் நாமம் சூட்டப்பட்டது.

இரண்டாம் பிரகாரத்தின் வசந்த மண்டபத்தின் தென்பகுதி 1970ல் பெருப்பித்துக் கட்டப்பட்டு ஓடுகள் வேயப்பட்டன. இப்பணிக்கு வல்வைப் பெரிய வி.சுப்பிரமணியம் அவர் மைத்துனர் எஸ்.சண்முகம் ஆகியோர் வேண்டிய பொருளுதவிகளைச் செய்தார்கள். 1977ம் வருடம் திரு.மா.குமாரசாமி அவர்களால் உற்சவமூர்த்தி செய்விக்கப்பட்டு தைப்பூசத்தன்று பிரதிட்டை செய்யப்பட்டது. தேர் உற்சவத்தினை நடத்திவரும் வல்வெட்டி அடியார்களினால் சித்திரத்தேர் ஒன்றும் செய்து முடிக்கப்பட்டது. வல்வைப் பெரியார் எஸ்.வைரமுத்து அவர்களினால் வெள்ளி இடபவாகனம் செய்து கொடுக்கப்பட்டது. திரு.வடிவேல்(கார்வண்ணசாமி) அவர்களால் 1978ல் பஞ்சலோகத்திலான ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு உற்சவமூர்த்தி செய்து கொடுக்கப்பட்டு பிரதிட்டை செய்யப்பட்டது. 26.06.1985 இல் பரமேஸ்வரக்குருக்கள் சிவபதமெய்தவே அவருக்கு உதவியாக இருந்த அவரது மகன் பிரம்மஶ்ரீ மனோகரக் குருக்கள் பிரதம பூசகரானார்.

1987ம் வருடம் மே மாதம் இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட லிபரேசன் ஒப்பரேசனின் போது கோயில் எசமானாக இருந்த திரு.சின்னத்துரை அவர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுக் காணமல் போனதையடுத்து இவரது தமையனார் இராமசாமி அவர்கள் கோயில் எசமான் ஆனார். திரு.கு.இரத்தினசிங்கம் அவர்களினால் மூலம் மூர்த்திகளான சரஸ்வதி, அபிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி ஆகியவை பிரதிஸ்டை செய்விக்கப்பட்டன. உற்சவமூர்த்தியான பிட்சாடன மூர்த்தியில் சில குறைபாடுகள் ஏற்பட்டமையால் புதிய உற்சவமூர்த்தி ஒன்று பஞ்சலோகத்தினால் ஆக்கப்பெற்று 09.02.1998 இல் பிரதிஸ்டா கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.

1985, 1946, 1987ம்வருடங்களில் ஊரிக்காடு இராணுமுகாமிலிருந்தும் பலாலி இராணுவ முகாமிலிருந்தும் ஏவப்பட்ட ஆட்லறி ஏவுகணைகளினாலும் விமானக்குண்டுவீச்சுக்களினாலும் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டன. 1991ம் வருடம் தை மாதம் கோயிலையும் கோயில் சுற்றாடலையும் நோக்கி வீசப்பட்ட விமானக்குண்டுகளிளால் கோயிலுக்கும் அதனை அண்டியிருந்த மடங்களுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டன. கோயில் தூபிகள், கலசங்கள், மண்டபங்கள், கூரைகள் என்பவற்றிற்கும் திருக்குளம் நந்தவனம் என்பவற்றிற்கும் ஏற்பட்ட சேதங்கள் அளவிலடங்கா. கோபுரத்துக்கு தென் கிழக்குப் பகுதியில் புட்டணி கோயிலுக்கு அருகாமையிலிருந்த மடம், புல்டோசர் கொண்டு சிதைக்கப்பட்டது. இம்மடம் 1893ம் வருடமளவில் சி.சந்திரசேகரம் அவர்களால் கட்டப்பட்டதாகும் கோபுரத்துக்குக் கிழக்குப் பக்கமாகத் திரு.பொ.தங்கவேலாயுதம் அவர்களால் கட்டப்பட்ட இன்னொரு மடம் 1991 தை மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆகாயவிமானத் தாக்குதலால் முற்றாக சேதமாக்கப்பட்டது. கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் தென் மேற்குப் பகுதியில் தெட்சணாமூர்த்திச் செட்டியார் என்பவரால் கட்டப்பட்ட இன்னொரு மடம் இயற்கையினால் ஒரளவு சிதைவுற்றிருந்தது. இந்த மடமும் விமாக்குண்டுவீச்சினால் தரைமட்டமாக்கப்பட்டது. திரு.நா. வேலுப்பிள்ளை எனப்படும் கெச்சுத் தண்டலினால் கோயிலுக்கு மேற்குப்புறமாக 1898ம் வருடம் ஒரு மடம் கட்டப்பட்டது . இந்த மடத்தில் தான் திருக்கல்யாண உற்சவதினத்தன்று பகல்அம்பாள் எழுந்தருளி வந்து தவக்கோலத்தில் இருக்கும் உற்சவம் இடம்பொறுவது வழக்கம். இந்தமடம் வைரக்கற்களால் ஆக்கப் பெற்றமையால் சிறிதளவு சேதங்கள் மட்டுமே ஏற்பட்டன.

1989ம் வருடம் ஆடிமாதம் தேவி மஹோற்சவம் ஆரம்பமாகி ஒன்பதாம் நாள் தேர் உற்சவ தினத்தன்று இந்திய இராணுவத்தினரால் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் இறுதி நாள் உற்சவங்கள் பூரணமாக நடாத்த முடியாத நிலை ஏற்பட்டது 28.09.2001 அன்று இரவு 9.45 மணியளவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் கோயில் இரண்டாம் பிரகாரத்தின் அக்கினிமூலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அப்பகுதிக் கூரை முழுவதும் பெறுதிமிக்க இரண்டு மின்பிறப்பாக்கிகள் திருவாடுதண்டுகள் மற்றும் பல தரப்பட் ட கம்புகள் என்பன தீயில் முற்றாக எரிந்து சேதமாகின பொது மக்கள் திரண்டு வந்து தீயை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையால் இதர பகுதிகளுக்குப் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

ஆலயத்தில் 1967ம் வருடம் கடைசியாக நடாத்தப்பட்ட கும்பாபிஷேகத்தின் பின்னர் அடுத்த கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கு பலதரப்பட்டஇடைஞ்சல்கள் ஏற்பட்டன. இவற்றுள் நாட்டில் ஏற்பட்ட இனப்பிரச்சினையினால் அத்தியாவசியமான கட்டடப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. சுமூகநிலை ஏற்பட்டு பொருட்கள் ஒரளவு தட்டுப்பாடின்றிக் கிடைக்கப் பெற்றதும் திருப்பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகத்தை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 04.02.2004 அன்று கும்பாபிஷேகத்தை வைத்து கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டு 07.05.2003 அன்று பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. அடியார்கள் பலரின் உதவியுடன் திருப்பணி வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டு தைமாதம் 21ம் நாள் 04.02.2004 அன்று புதன் கிழமை பூர்வபட்சமும், திரயோதசித் திதியும், புனர்பூச நட்சத்தததிரமும், சித்த யோகமும் கூடிய சுபவேளையில் வைத்தீஸ்வரப்பொருமானுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் சிவஶ்ரீ.ப.மனோகரக்குருக்கள் அவர்களினால் மஹாகும்பாபிஷேகம் நடாத்தி வைக்கப்பட்டது. இக்கும்பாபிஷேக நிகழ்வில் தென் இந்தியா, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில் வேதவாத்தியார் ஜீ.ஶ்ரீநிவாச சாஸ்திரிகள் சர்வசாதகாசிரியராகப் பங்கேற்றுக் கொண்டது சிறப்பான அம்சமாகும்.

இக்கும்பாபிஷேகத்துடன் குண்டு வீச்சுக்களில் சேதமாக்கப்பட்ட இண்டாம் பிரகாரத்திலமைந்த வசந்த மண்டபத்தின் நிலப்பகுதி பளிங்குக் கல்லினால் மாற்றியமைக்கப்பட்டதோடு கோயிலின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்து சேதமாக்கப்பட்ட மடங்கள் இரண்டும் உரிமையாளர்களினால் புதுப்பித்துக் கட்டப்பட்டன. அத்தோடு மூன்றாம் பிரகாரத்தின் தெற்கு, மேற்கு, வடக்குத் திசைகளில் உட்பக்கச் சுவர்கள் புதிதாக அமைக்கப்பட்டதுடன், ஆலய வட திசையில் அமைந்திருந்த திருக்குளமும் புனரமைக்கப்பட்டது. இரண்டாம் பிரகாரத்தில் வல்வை நடராஜா பெண் வள்ளியம்மாள் அவர்களினால் 1989 பங்குனி மாதம் கட்டப்பட்ட திருக்கல்யாண மண்டபம் மேலும் 20 அடிகள் நீட்டிக் கட்டப்பட்டது. கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை ஆலய பிரதம குருவின் வதிவிடமும் புதிதாகக் கட்டப்பட்டது . மகா கும்பாபிஷேகத்தையொட்டி ஆதீனகர்த்தர்களினால் மகா கும்பாபிஷேக சிறப்பு மலரொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

ஆலயத்தில் வருங்காலத்தில் முக்கியாமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுள் மேற்குப் பகுதிக் கோபுரம் அமைக்கப்படுதல், தேவிவாசல் கோபுரம் புதிதாக அமைக்கப்படுதல் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள திருக்குளம் ஆழமாக்கபடுதலோடு சேதமாக்கப்பட்ட பகுதி புனரமைக்கப்படுதலுமாகும்.

தனித்துவமான சிறப்புக்கள்

வல்வெட்டித்துறை சிவன் கோவிலின் சிறப்பம்சங்களை கீழ்வரும் இரண்டு அடிப்படைகளிலும் நோக்குவோம் :

ஆலயமும் வழிபாடும்

ஆலயத்தை ஸ்தாபித்த பெரியவர் போட்டிக்காகவோ, புகழுக்காகவோ அன்றி தமது மூதாதையர் மூலம் கிடைத்த ஒரு தெய்வ வாக்கிற்கு இணங்கவோ ஆலயத்தை அமைத்ததாக ஆலய வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. இந்த வகையில் ஒரு சிவன் ஆலயம் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்க வேண்டுமோ அவை அனைத்தும் முழுமையாகவும், சிறப்பாகவும் இடம் பெறும் வகையிலும் அதே நேரம் ஐந்து வாசல்கள் கொண்டு ஆகம விதிக்குட்பட்டதாகவும், இவ்வாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.

இராஜகோபுரம், மூன்று வீதிகள் என்பவற்றை உள்ளடக்கி எதிர்காலத்திலும் ஆலயத்தின் திருப்பணி தொடர்பான விஸ்தரிப்பு வேலைகளுக்கும், அதே நேரம் பெருமளவில் கூடுகின்ற அடியார் கூட்டத்திற்கும் ஈடு கொடுக்கக்கூடிய விஸ்தீரணத்துடனும், திட்டமிட்ட அடிப்படையில் இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்தின் எல்லைக்குள்ளேயே ஆலயத்தின் வடக்குத் திசையிலும், தெற்கு திசையிலும் பெரிய குளங்கள் உருவாக்கப்பட்டு அவை திருத்தடாகங்களாக விளங்கிக்கொண்டிருக்கின்றன. அதாவது தென் இந்தியாவில் அரசர்களால் உருவாக்கப்பட்டதற்கு ஈடான அமைப்புடைய ஒரு பிரமாண்டமான ஆலயத்தை எமது மூதாதையர்கள் வல்வை நகரில் அமைத்துள்ளனர். அதே நேரம் வரலாற்றுப்புகழ் மிக்க வல்வை அம்பாள் ஆலயம் இடது பக்கமாகவும், மிகவும் நெருக்கமாகவும் அமைந்துள்ளது. அதாவது அம்பாள் ஆலயத்தின் தெற்கு வீதி வைத்தீஸ்வர ஆலயத்தின் வடக்கு வீதியாக இருக்கும் வகையில் இந்த ஆலயங்கள் அமைந்திருக்கும் சிறப்பே ஒரு தனிச்சிறப்பாகும்.

ஆலயத்தின் பூசையை மேற்கொள்கின்ற பிராமணர்களின் பக்குவம் ஈஸ்வரனின் மேல் கொண்டுள்ள பக்தியின் ஆழம் என்பவை ஆலயத்தின் சிறப்பு தொடர்ந்து பேணப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றது. தற்பொழுது பூசையை மேற்கொள்கின்ற பிராமணர் பரம்பரை நா.குமரசாமி குருக்களுடன் ஆரம்பமாகியது. தற்பொழுது ஆறாவது பரம்பரையினராக பூசையை மேற்கொள்ளும் இந்தப் பிராமண பரம்பரையினர் ஈசனுக்குப் பூசை செய்வதை தமக்குக் கிடைத்த ஒரு பேறாகவே எண்ணிச் செயற்படுவதை காணமுடிகின்றது. அத்துடன் தமது வாழ்க்கையாலும் நடத்தையாலும் வேதாகம அறிவினாலும் சமூக சிந்தனை உள்ள பாங்கினாலும் தலைமைத்துவப் பண்பாலும், இவர்கள் சிறந்தவர்களாக விளங்கி வருகின்றனர். இத்தகைய இயல்புகள் உள்ள பிராமணர் பரம்பரை இவ்வாலயத்திற்கு அமைந்திருப்பது ஆலயத்திற்கு சிறப்பைக் கொடுத்து ஆலயத்தின் பக்தி நிலையை மேலும் மேம்படுத்தும் முக்கிய அம்சமாக விளங்குகின்றது.

ஆலயம் ஸ்தாபிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை வைத்தீஸ்வரர் ஆலயம் அறம் தவறாது ஆகம விதிப்படி சரியான நியமங்களுக்கு இணங்க சீராகவும், சிறப்பாகவும் செயற்பட்டுக்கொண்டிருப்பதற்கு ஆலயத்தினை நிர்வகிப்பவர்களின் பங்களிப்பே மிக முக்கிய காரணியாக இருந்து வருவதையும் எம்மால் உணர முடிகின்றது. ஆலயத்தை ஸ்தாபித்த பெரியவர் திருமேனியர் வேங்கடாசலபிள்ளை அவர்கள் தர்மகர்த்தாவாக இருந்து எவ்வாறு முன்மாதிரியாக ஆலயத்தை நிர்வகித்தார்களோ அதே பரம்பரையினர் அதே போன்று இன்று வரை இந்தப் பணியை இறை நம்பிக்கையுடன் , இறை தொண்டாக கருதி அர்ப்பணிப்புடனும், அனைவருக்கும் முன்மாதிரியாகவும் செயற்பட்டுக்கொண்டிருப்பது இந்த ஆலயத்தின் தனித்துவம் இன்னும் காப்பாற்றப்படுவதற்கு மிகமுக்கிய காரணமாகும். இவ்வாறு ஆலயத்தை நிர்வகிக்கின்ற இந்த அறங்காவலர்கள் குடியிருக்கும் அக்கிரகாரம் என்ற அந்த குடியிருப்புப் பகுதி ஆலயத்துடன் இணைந்த வகையில் அமைந்திருக்கும் சிறப்பையும் நாம் இங்கு காணலாம். ஆலயத்தில பூசையை மேற்கொள்ளும் பிராமணர்களுக்கும், நிர்வாக அறங்காவலர்களுக்கும் இடையில் பேணப்பட்டு வரும் சமூகமான உறவினால் தான் இந்த ஆலயம் இவ்வாறான தனித்துவத்தையும், சிறப்பையும் தொடர்ந்தும் பேணமுடிகின்றது என்பதை இவ்விடத்தில் நாம் குறிப்பிடுதல் பொருத்தமானதாகும். உதாரணமாக ஆலயம் பாலஸ்தாபனம் செய்த பொழுதே கும்பாவிசேகத்திற்குரிய திகதியும் குறிக்கப்பட வேண்டுமென்று அறங்காவலர்களின் கருத்திற்கு ஆலயத்தின் பிரதம குருக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி அதற்கேற்ற வகையில் திகதி குறித்து இரண்டு பகுதியினரும் ஒருமித்த மனதுடன் அதை நிறைவேற்ற கடினமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் சிறப்பை இங்கே காணமுடிகின்றது.

ஆலயம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்று வரை தூய சைவ முறைப்படியான வழிபாட்டு ஆசார முறைகள் அடியவர்களால் இன்றும் இந்த ஆலயத்தில் இறுக்கமாக பின்பற்றப்பட்டு வருவதும் இந்த ஆலயத்திற்கே உரிய இன்னனொரு தனித்துவமான சிறப்பாகும். காலத்தால் ஏற்படுகின்ற நவீன நாவரீக மாற்றங்கள் எதுவும் இவ்வாலயத்தில் ஊடுருவுவது இல்லை. கால மாற்றங்களுக்கு அப்பாற்பட்டு பூசை முறைகளும், வழிபாட்டு முறைகளும் தொடர்ந்தும் இவ்வாலயத்தில் எவ்வித மாற்றமுமின்றி பேணப்பட்டு வருவதை அனைவரும் வியப்புடன் நோக்குவதை காண்கின்றோம். அதாவது ஆலயம் மக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்குரிய இடமாகவே பேணப்பட வேண்டுமென்பதை வெளிப்படுத்துகின்ற ஆலயமாக இவ்வாலயம் விளங்கிக் கொண்டிருப்பது சமய ஆர்வலர்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இவ்வாறான ஒரு ஆன்ம ஈடேற்ற நோக்கத்துடனும், சமய ஈடுபாட்டுடன் மட்டுமே இந்த ஆலயத்தின் அடியார்கள் கூடுவது இந்த ஆலயத்திற்கு மட்டுமன்றி சைவ உலகத்திற்கே சிறப்பையும், உயர்வையும் கொடுக்கும் ஒரு விடயமென்றால் அது மிகையாகாது.

ஆலய வழிபாட்டில் தூப, தீப, பாராயணம் ஆகிய மூன்று விடயங்களும் முக்கியமானவையே. இதில் தூப, தீப விடயங்கள் மட்டுமன்றி பாராயணம் என்ற விடயமும் அன்று தொடக்கம் இன்று வரை இந்த ஆலயத்தில் பக்தி உணர்வுடன் மேற்கொள்ளும் சிறப்பும் இங்கே இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது.

பூசை முறைகளும் உற்சவ செயற்பாடுகளும்

ஆறுகாலப் பூசை உட்பட ஒரு சிவன் ஆலத்தில் இடம் பெற வேண்டிய அனைத்து வகையான பூசைகளும், எல்லா வகையான சிறப்புக்களுடனும் இடம் பெறுகின்றன.

வருடாந்த மகோற்சவத்தின் போது இடம்பெறும் பஞ்சரத தேர்த்திருவிழா, சமுத்திரத் தீர்த்தம், கல்யாணத் திருவிழா என்பன ஆலயத்தின் சிறப்பை வெளிக்காட்டுகின்றன.

மகோற்சவம்

பங்குனி மாத பௌர்ணமி நட்சத்திரத்திற்கு முதல் 15 நாட்கள் பிரமோற்சவம் எனப்படும் மகோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். மகோற்சவ முதலாம் கிரியை ஆலய வாமபாகத்திலுள்ள கிராம தேவதையான ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தனது சிங்க வாகனத்தில் திரு வீதி உலா வருவார். மறுநாள் ஊரின் மூலைமுடுக்கு எல்லாம் வாதவூரர் சிவபெருமான் ஆணைப்படி சென்று மகோற்சவத்தை அறிவித்து ஓர் ஊர்வலம் செல்லும்.

பின்னர் அமாவாசைத் திதியில் கொடியேற்றத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும் அன்று மாலை விநாயகருக்கு சிறப்பு யாகம் ஆரம்பித்து முதல் மூன்று நாள் உற்சவம் நடைபெற்று விநாயகருக்கு மூர்த்தி கரத்தை அதிகரிக்கப்படும். பின்னர் மூன்று நாட்கள் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கும் உற்சவம் நடைபெற்று கடைசி நாள் தீர்த்தோற்சவம் நடைபெறும்.

7ம் நாள் மாலையில் மகாயாகம் சிவபெருமானுக்கு தொடங்கி சிவபெருமான் அம்பாள் சகிதம் விநாயகர் முருகன் சண்டேசுவரர் சகிதம் வசந்த மண்டபத்தில் விஷேட சோடசோபன பூசையுடன் மகா ஆசீர்வாதம் நடைபெற்று சந்திரசேகரப் பட்டம் மூலமூர்த்தி சார்பாக பிரதம குருவால் சூட்டப்படும். இப்படியாக திருவிழாக்கள் நடைபெற்று இறுதி நாள் தீர்த்தோற்சவத் தினமான பங்குனி பூரணயில் நடராஜருக்கு விஷேட அபிஷேகம் நடைபெற்று நடராஜர் சகிதம் திருவீதி வலம் வருவார். பின் சுவாமி அம்பாள் வெள்ளி இடப வாகனத்தில் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகன் சண்டேஸ்வரர் 11ஃ2 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ஊறணி சமுத்திர தீர்த்தமாடி பின் நெடியகாட்டில் உள்ள திருச்சிற்றம்பல பிள்ளளையார் ஆலயத்தில் தங்கி மாலை இறைவன் இறைவியை மணம் முடித்து பங்குனி உத்தர பௌர்ணமியை சித்தரிக்கும் நாள் திருமணகோல காட்சியுடன் ஆலயம் திரும்புவார். அதன் பின் பிராயச்சித்த அபிஷேகம் முடிந்த பின் கொடியிறக்கம் நடைபெறும். அதன் மறுநாள் ஊடல் திருவிழா நடைபெறும்.

தீர்த்தோற்சவத்துக்கு மறுநாள் சுந்தரருக்காக சுவாமி பரவையாரிடம் தூது சென்ற சம்பவத்தையிட்டு அம்மன் சுவாமி ஊடல் நடக்கும் சுந்தரர் சுவாமிக்காக அம்மனிடம் தூது சென்று ஒற்றுமையாக்குவார். இரவு அம்மன் உற்சவம் நடைபெறும்.

உசாத்துணைகள்

  • வல்வை ஶ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கு விழா மலர் - 11 ஆனி 1967
  • வல்வை ஶ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி கோயில், மஹாகும்பாவிஷேக மலர் - 04 சித்திரை 2004
  • ஈழத்துச் சிவாலயங்கள்- (வெளியீடு : ஸ்ரீமத் சபாரத்தின சுவாமிகள் தொண்டர் சபை)
  • வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்-இரண்டாம் பதிப்பு - (ஆசிரியர் : வல்வை.ந.நகுலசிகாமணி)
  • சைவநீதி -பொங்கல் விழா மலர் - (வெளியீடு: கனடா இந்து மாமன்றம்,2014)

வெளி இணைப்புகள்