வல்லு
வல்லு என்பது சங்ககால விளையாட்டுகளில் ஒன்று. இதில் பல வகை உண்டு. எல்லாம் பொழுதுபோக்குக்காக விளையாடப்படுபவை. இது ஓர் ஊழ்த்திற விளையாட்டு. இந்த விளையாட்டில் வல்லநாய் என்னும் உருட்டுகாய் உருட்டப்படும். அதில் வரும் எண்ணுக்கு ஏற்ப அரங்குக்கட்டங்களில் கட்டுகாய்கள் கட்டப்படும். கட்டுகாய்களைக் கட்டுவது உத்தித்திறன். இதுபோன்ற ஆட்டங்களில் வெற்றி பெற்றவர்களை இக்காலத்தில் 'பழம் பெற்றவர்' எனக் கூறுகின்றனர். இந்த விளையாட்டைப்பற்றித் தொல்காப்பியமும், சங்கநூல்களும் குறிப்பிடுகின்றன.
சங்கநூல் தரும் செய்திகள்
- வல்லுப்பலகையில் வல்லநாய் உருட்டி ஆடப்படும் ஆட்டம். [1] [2] 'வல்' என்பது நட, செல் என்பது போன்றதோர் தொழில்பெயர். வல் என்னும் சொல் வல்லு விளையாடும் தொழிலைக் குறிக்கும். இந்த விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் பலகையை 'வல்லுப்பலகை' என்றும், 'வல்லப்பலகை' என்றும் வழங்குவர். இந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்படும் காய்களை 'வல்லுநாய்' என்றும், 'வல்லநாய்' என்றும் வழங்குவர். இது வல்லப்பலகையில் வல்லநாய்களை உருட்டி ஆடப்பட்ட விளையாட்டு எனத் தெரிகிறது.
- முதியவர் வல்லு ஆடுவர். ஊரின் பொதுமன்றத்தில் வல்லு விளையாடுவதற்கு அமைக்கப்பட்டிருந்த பலகையைக் கறையான் அரித்துவிட்டதாம். [3]
- வல்லுப்பலகை - கூனி ஒருத்தியைக் குறளன் ஒருவன் தன் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்துகிறான். இணங்காத கூனி அந்தக் குறளனை வல்லிப்பலகையை நிறுத்தி வைத்திருப்பது போல் இருக்கிறான் என்று குறிப்பிடுகிறாள். [4] இதனால் வல்லுப்பலகையானது சுமார் மூன்றடி உயரம் இருக்கும் என்பதை உணரமுடிகிறது.
- வல்லுப்போர் என்பது வல்லமையைக் காட்டும் போர். [5] ஒருத்தி ஒருவனை வல்லுப்போர் வல்லான் எனக் குறிப்பிடுகிறாள். இதில் 'மலைமேல் மரம்' என்னும் குழூஉக்குறியைப் பயன்படுத்துகிறாள். [6] வல்லுக்காய்களை வட்டுருட்டாகவும் [7], நெட்டுருட்டாகவும் [8] உருட்டுதல் அவரவர் கைத்திறம்.
வல்லுக்காய் அளவு
வல்லநாய் எனப்பட்ட வல்லுக்காயின் அளவு பருவ மகள் முலை அளவினது என்று குற்றாலக் குறவஞ்சி நூல் குறிப்பிடுகிறது. [9]
அடிக்குறிப்பு
- ↑ 'வல்' என் கிளவி தொழிற்பெயர் இயற்றே. (தொல்காப்பியம் 3-374)
- ↑
நாயும் பலகையும் வரூஉம் காலை,
ஆவயின் உகரம் கெடுதலும் உரித்தே;
உகரம் கெடு வழி அகரம் நிலையும். (தொல்காப்பியம் 3-375) - ↑
கொழுங் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து,
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி,
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய,
வரி நிறச் சிதலை அரித்தலின், (அகநானூறு 377) - ↑
வல்லுப் பலகை எடுத்து நிறுத்தன்ன
கல்லாக் குறள! (கலிக்கொகை 94) - ↑
வல்லுப் போர் வல்லாய்! மலைமேல் மரம்.
வட்டுருட்டு வல்லாய்! மலைய--நெட்டுருட்டுச்
சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து,
போர் ததும்பும் அரவம் போல்,
கருவி ஆர்ப்ப, கருவி நின்றன குன்றம். (பரிபாடல் 18) - ↑ தாயம் விளையாடும்போது நகர்த்தப்படும் காய்கள் தாயக்கட்டத்தில் ஆங்காங்கே குறுக்குக் கோடிட்ட மலைகளில் காய் இருந்தால் வெட்ட முடியாது. ஒருவரின் காய் வைக்கப்பட்டிருக்கும் மலையில் மற்றொருவர் தன் காய்களை நிறுத்தி வைப்பார். இது மலைமேல் மரம் எனப்படும். யாருடைய காய் நகர்ந்தாலும் தொடர்ந்து இன்னொருவர் ஊழ்த்திறனால் தனக்கு விழும் எண்ணைக்கொண்டு நகர்த்தி அதனை வெட்டமுடியும். இது போல வல்லு விளையாட்டில் வரும் ஒரு குழூஉக்குறி மலைமேல் மரம்.
- ↑ வட்டமாகச் சுழன்று விழும்படி உருட்டுதல்
- ↑ நீண்டு உருளும்படி உருட்டுதல்
- ↑ "வல்லை நிகர்முலை" சொக்கட்டான் காய்களை ஒத்த முலைகளை உடையவள் - என்பது இப்பகுதிக்குப் புலியூர்க் கேசிகன் தரும் விளக்கும். - திருக்குற்றாலக் குறவஞ்சி - பக்கம் 84 - பாரி நிலையம் வெளியீடு 2013