வரதராஜன்
பாவலர் வரதராஜன் (Pavalar Varadharajan) தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பண்ணைப்புரம் கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தினரான இராமசாமி - சின்னத்தாயம்மாள் தம்பதியரின் மூத்த மகனாக வரதராஜன் பிறந்தார். இவரது தம்பிகள் ஆர். டி. பாஸ்கர், இளையராஜா மற்றும் கங்கை அமரன் ஆவார். [1] திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் நிலைய வித்துவானாக இருந்த மரியானந்த பாகவதரிடம் இசை கற்றார். [2]
இளமையில் வரதராஜன் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் சிறந்த மேடைப் பாடகர், கவிஞர், நாடகாசிரியர், மற்றும் நடிகர் எனும் பன்முகத் தன்மை கொண்டவர் என்பதால் இவரை பாவலர் வரதராசன் என்று அழைத்தனர். பாவலர் வரதராஜனின் மனைவி பெயர் சீனியம்மாள். இவரது நான்கு மக்களில் ஹோமோ ஜோ என்பவர் திரைப்பட உதவி இயக்குநராக பணிபுரிந்து இளமையில் மறைந்தவர்.[3]1962-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற இந்தியப் பொதுவுடமைக் கட்சி மாநாட்டில் தியாகி மணவாளன் நாடகத்தை எழுதி நடத்தியுள்ளார். இந்நாடகத்தில் தியாகி மணவாளனின் இரண்டு பிள்ளைகளாக பாவலரின் பிள்ளைகளும், மற்ற பாத்திரங்களில் தனது தம்பிமார்களும் நடித்துள்ளனர். தியாகியின் மனைவியாக வரதராஜனின் மனைவியும், தாயாராக தனது சொந்தத் தாயாரும் நடிப்பதாக இருந்த திட்டம் கைவிடப்பட்டது. இவரது குடும்பமே கலைக் குடும்பமாகத் திகழ்ந்தது என்பதை தோழர் மாயாண்டி பாரதி தம் கட்டுரையில் தெரிவித்துள்ளார். பொதுவுடமைக் கட்சித் தலைவர் கூத்தகுடி சண்முகம் வரதராஜனுக்கு இசைவானர் எனும் விருதை வழங்கி பெருமைபடுத்தினார். வாழ்க்கையின் நெருக்கடியான நிலையில் நோயுடன் போராடிக் கொண்டிருந்த பாவலர் வரதராஜன் மதுரை அரசினர் மருத்துவ மனையில் இறந்தார்.