வண்ணத்தியல்பு
தமிழிசையின் இலக்கணம் கூறும் நூல் வண்ணத்தியல். இதனை வண்ணத்தியல்பு என்றும் வழங்குகின்றனர். வண்ணத்தை இக்கால இசைவாணர்கள் சந்தம் என்கின்றனர்.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய இலக்கண நூல்கள் இரண்டு - ஒன்று அறுவகை இலக்கணம் என்னும் நூல். மற்றொன்று வண்ணத்தியல்பு எனப்படும் இந்த நூல். இந்த நூலைப் பாடியதாலேயே நூலாசிரியர் தண்டபாணி சுவாமிகளை ‘வண்ணச்சரபம்’ என்னும் அடைமொழி தந்து சிறப்பிக்கலாயினர்.
கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை என்னும் நூல்கள் கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் என்பதை முச்சங்க வரலாறு தெரிவிக்கிறது. அந்த நூல்கள் இப்போது இல்லை.
பண்ணத்தி பற்றிய குறிப்பு தொல்காப்பியத்தில் உள்ளது. மேலும் பாஅ-வண்ணம், தாஅ- முதலான 20 வகையான வண்ணங்களைப் பற்றிய விளக்கமும் உள்ளது.
சிலப்பதிகாரத்திலும், அதற்கு எழுதிய அடியார்க்கு நல்லார் உரையிலும் தமிழிசை பற்றிய குறிப்புகள் உள்ளன.
நமக்குக் கிடைத்துள்ள தமிழிசை-நூல்களில் இந்த வண்ணத்தியல் முதல்-நூல் எனலாம்.
இந்த நூலில் 110 நூற்பாக்கள் உள்ளன. முதல் 10 பாடல்கள் நூல் பற்றிய செய்திகளைக் கூறும் பாயிரமாக அமைந்துள்ளது.
- வண்ணம்
- தத்த, தத்தா, தாத்த, தாத்தா, தாந்த, தாந்தா,
- தனா, தான, தானா, தன்ன, தன்னா
- தய்ய, தய்யா,
ஆகிய வண்ணங்களுக்கு இந்நூலில் விளக்கங்கள் உள்ளன.
- முருகப் பெருமானைக் காப்புச் செய்யுளில் பாடித் தொடங்கும் இந்த நூல் முடிவிலும் முருகப் பெருமானைப் போற்றும் தனி வெண்பா ஒன்றைக்கொண்டு முடிகிறது. முதலிலும் முடிவிலும் கடவுளைப் போற்றும் புதுமை இந்த நூலில் காணப்படுகிறது.
இந்நூல் குறிப்பிடும் செய்திகளில் சில (பாடல் எண்ணுடன்):
- வண்ணத்தியல் பொருள் 100 என்று இந்த நூல் சுட்டுகிறது (5)
- வடமொழி மரூஉச்சொல் சேர்த்தால் மதுரம் குன்றும் -17-
- துள்ளல் என்பது சில சந்தம் புணர்ப்பது -95-
- குழிப்பு என்பது பல சந்தம் புணர்ப்பது -96-
- தன் விருப்பத்தையும், தெய்வத்தின் சீரையும் வண்ணப்பாவால் வழங்குவது முறைமை -103-
மேலும் பார்க்க
கருவிநூல்
- தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச.வே.சுப்பிரமணியன், தொகுப்புப் பதிப்பாசிரியர், மெய்யப்பன் பதிப்பக வெளியீடு, 2007