வடிவேலு செல்வரத்தினம்
வடிவேலு செல்வரத்தினம் (26 ஜனவரி 1947-22 டிசம்பர் 2006) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். தான் நடித்த இசைநாடகங்களில் பெண் வேடத்திற்காக ரசிக்கப்பட்டார். நாட்டுக்கூத்துக்களை நெறியாள்கை செய்து இளைஞர் பரம்பரையை உருவாக்கினார்.
வாழ்க்கைக் குறிப்பு
வடிவேலு செல்வரத்தினம் ஜனவரி 26, 1947-ல் இலங்கை யாழ்ப்பாணம் அரியாலையில் பிறந்தார். அரியாலை ஆனந்தா வித்தியாசாலை, யா.கனகரத்தினம் ம.ம. வித்தியாலயம் ஆகிய பள்ளிகளில் கல்வி கற்றார். பள்ளியிலிருந்தே நாடகங்களில் நடித்தார்.
தனிவாழ்க்கை
காலம் இதழுக்கு அளிக்கப்பட்ட பேட்டியில் வடிவேலு செல்வரத்தினம் தன்னை ஒரு கூலித்தொழிலாளி என்றும் நாடகம் கூடுதலாக செய்வது என்றும் கூறுகிறார். பதினொரு வயதில் அம்மா இறந்து போக அப்பாவும் தவறிவிழுந்து இறந்து போக எட்டாம் வகுப்புடன் படிப்பு நின்றது. நெடுங்காலம் தச்சுத்தொழிலைச் செய்து வந்தார்.
கலை வாழ்க்கை
1954-ல் கலைமகள் நாடக சபாவில் "கன்னிக் கோட்டை" நாடகத்தில் "மணிமாறன்" என்னும் குழந்தை நடிகனாக ஏழுவயதில் அறிமுகமானார். தன் அண்ணா ரத்தினம் அறிமுகப்படுத்த முதன்முதலாக அல்வாயூர் சின்னப்பு கணேசனின் உழவர் நாடு என்னும் நாடகத்தில் பெண்வேடமிட்டு நடித்தார். தொடர்ந்து கன்னிக்கோட்டை, பதவிமோகம் முதலிய சரித்திர நாடகங்களில் பெண்வேடமிட்டு நடித்தார்.
அரிச்சத்திர மயானகாண்டத்தில் "சந்திரமதியாக" இருபத்தியாறு கதாதாயகர்களுடன் பல்வேறு மேடைகளில் நடித்துப் பாராட்டுப் பெற்றார். நடிகமணி வி.வி.வைரமுத்துவுடன் சேர்ந்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, வவுனியா, கொழும்பு, கண்டி, கம்பஹா ஆகிய இடங்களில் பெண் கதாபாத்திரங்களில் நாடகங்கள் நடித்தார். பல பாடசாலை மாணவர்களுக்கும், தனிப்பட்ட மன்ற இளைஞர்களுக்கும் பாட்டு, நடிப்பு கற்றுக் கொடுத்து இசைநாடக நெறியாள்கை செய்து இளைஞர் பரம்பரையை உருவாக்கினார்.
மறைவு
வடிவேலு செல்வரத்தினம் டிசம்பர் 22, 2006-ல் மறைந்தார்.
பாராட்டுக்கள்
- இலங்கையில் தயாரிக்கப்பட்ட நிர்மலா திரைப்படத்தில் நடிகமணி வி. வைரமுத்துவுடன் இணைந்து நடித்த 25 நிமிடக்காட்சி, சிலோன் தியேட்டர் மண்டபத்தில் காட்சி காட்டப்பட்டது.
- 1969-ல் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் வடிவேலு நடித்த பெண் வேடத்தை பாராட்டி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் ஸ்தாபனத்தின் சார்பாக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
- 1991-ம் ஆண்டு கம்பன் கழகத்தில் சிவதமிழ்ச்செல்வி தங்கம்மா, அப்பாக்குட்டி அவர்களால் பொன்னாடை போர்த்தி பாராட்டப்பட்டார்.
- 1976-ல் அகில இலங்கை ரீதியில் லும்மினிய மண்டபத்தில் நடத்தப்பட்ட நாடகத்தில் "சந்திரமதி" பெண் பாத்திரத்திற்காக பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
- ஏப்ரல் 14, 1994-ல் அரியாலை சுதேச பவளவிழாவில் அரியாலை புகழ்பூத்த தலைவர்கள் வரிசையில் யாழ் அரசஅதிபர் செ.பத்மநாதன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
- 1980-ல் கரவெட்டி காரையம்பதி கலைக் கூடத்தினால் கௌரவிக்கப்பட்டு "நடிக கலாமணி" என்ற பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட்டார்.
நடித்த கூத்துகள்
- அரிச்சந்திர மயானகாண்டம் - சந்திரமதி
- சத்தியவான் சாவித்திரி - சாவித்திரி
- நல்லதங்காள் - நல்லதங்காள்
- ஸ்ரீவள்ளி - வள்ளி
- சாரங்கதாரா - சித்திராங்கி
- ஞானசவுந்திரி - ஞானசவுந்திரி
- பவளக்கொடி - பவளக்கொடி
- கண்ணகி - கண்ணகி, மாதவி
- பூதத்தம்பி - அழகவல்லி
- பாமா விஜயம் - ருக்குமணி
- அடங்காபிடாரி - அடங்காபிடாரி
- மந்திரிகுமாரி - குமாரி
- அம்பிகாபதி - அமராவதி
- பராசக்தி - கல்யாணி
- பண்டாரவன்னியன் - நல்லநாச்சியார்
- அல்லி அர்ச்சுனா - அல்லி
- பாண்டியன் வீழ்ச்சி
- சகோதர விரோதி
- கிருஷ்ணா அர்ச்சுனா
- பதவிமோகம்
- அலாவுதீன்
- பாண்டிய மகுடம்
- மனோன்மணி
- கொஞ்சும்குமாரி
பழக்கிய நாடகங்கள்
- சத்தியவான் சாவித்திரி - வசாவிளான் கட்டியம்புலம் மகாவித்தியாலய மாணவர்களுக்கும், யாழ் மத்திய கல்லூரி மாணவர்களுக்கும் பழக்கியது.
- ஞானசவுந்தரி - திருமறைக் கலாமன்றத்தில் வேணாள், ஞானசவுந்திரி ஆகிய பாத்திரங்களைப் பழக்கியும், பாடல்களை ஒலிப்பதிவு செய்து கொடுத்தும் மேடையேற்றினார்.
- ஸ்ரீவள்ளி - தனியார் கல்வி நிறுவன மாணவர்களின் கலை நிகழ்வுக்கு பழக்கியும், பூம்புகார் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின விழாவுக்கு பழக்கியும் மேடையேற்றிப் பாராட்டுப் பெற்றது.
- அரிச்சந்திர மயான காண்டம் - கைதடி தனியார் நாடகமன்றத் நினருக்குப் பழக்கி மேடையேற்றப்பட்டது.