ரோமுவால்ட் டி'சோசா

ரோமுவால்ட் டி'சோசா (Romuald D'Souza) (20 டிசம்பர் 1925 - 1 நவம்பர் 2019)[1] இந்தியவைச் சேர்ந்த இயேசு சபை குரு ஆவார்.

சுயவிவரம்

கோவாவின் அல்டோனாவில் பிறந்த இவர் 1958 இல் பெல்ஜியத்தில் பாதிரியாராக நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள போர்தாம் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு நியூயார்க் நகரத்தின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேலும் படித்தார்.

பணிகள்

1962 இல் இந்தியா திரும்பிய இவர் 1967 இல் புனே புனித வின்சென்ட் உயர்நிலைப் பள்ளியின் முதல்வராகப் பொறுப்பேற்றார். 1978 இல் கோவாவின் போர்வோரிமில் சேவியர் வரலாற்று ஆராய்ச்சி மையத்தை நிறுவினார். 1982 முதல் 1989 வரை ஜம்சேத்பூரிலுள்ள சேவியர் மேலாண்மைப் பள்ளியின் இயக்குநராகப் பணியாற்றினார். 1987 இல், புவனேசுவரத்தில் சேவியர் மேலாண்மை நிறுவனத்தை நிறுவி, 1993 வரை அதன் இயக்குநராக இருந்தார். 1993 இல், கோவாவின் பனஜியிலுள்ள சேவியர் மேலாண்மை நிறுவனத்தை நிறுவி, அதன் இயக்குநராக 2004 வரை பணியாற்றினார்.

தெற்காசியாவின் மேலாண்மை மேம்பாட்டு நிறுவனங்களின் சங்கம், அகில இந்திய மேலாண்மை படிப்புகள் வாரியம், கோவா பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு, உட்கல் பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக பணியாற்றினார். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மேலாண்மை கழகம், சர்வதேச உளாவியளார்கள் அமைப்பு மற்றும் அமெரிக்க உளாவியளார்கள் சங்கம் ஆகியவற்றின் தொழில்முறை உறுப்பினராக இருந்தார். மேலும்,வணிக நெறிமுறைகள், மன அழுத்த மேலாண்மை, மனோவியல் மற்றும் நிறுவன நடத்தை ஆகியவற்றைக் கற்பித்தார். கோவாவில் தற்போது செயல்படாத மரியன் நல்வாழ்வு மேலாண்மை நிறுவனத்தையும் நிறுவினார்.

விருது

26 ஜனவரி 2010 அன்று, இந்திய அரசு, இவருக்கு, கல்வி மற்றும் இலக்கியத்தில் இவரது பங்களிப்பிற்காக, இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கியது.[2]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ரோமுவால்ட்_டி%27சோசா&oldid=18913" இருந்து மீள்விக்கப்பட்டது