யாப்பிலக்கணம்

யாப்பிலக்கணம் என்பது செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். யாத்தல் என்னும் சொல் கட்டுதல் என்னும் பொருளை உடையது. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்புகளை ஒருசேரக் கட்டி அமைப்பது என்னும் பொருளிலேயே செய்யுள் யாத்தல் என்கிறார்கள். எனவே, இந்த யாத்தலுக்கு உரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.

யாப்பிலக்கணம் என்பது செய்யுளின் இலக்கணம் என்றும் பொருள் தரும். இதில் உறுப்பியல், செய்யுளியல் என இருவகைகள் உள்ளன. உறுப்பியலில் செய்யுள் உறுப்புகளின் இலக்கணமும், செய்யுளியலில் பா, பாவினம் ஆகிய இருவகைச் செய்யுள்களின் இலக்கணமும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.[1]
மேலும் உறுப்பியலுக்குப் புறனடையாக உள்ளவை ஒழிபியல் என்ற மூன்றாவது வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

யாப்பு என்னும் சொல்

சங்க நூல்களிலும் இச்சொல் கட்டுதல் என்ற அடிப்படைப் பொருளில் பரவலாக வந்துள்ளது. யாப்பு என்னும் சொல்லைத் திருவள்ளுவரும் அதே பொருளில் பின்வரும் குறள்களில் கையாண்டுள்ளார்.

கழல் யாப்பு [2]
யாப்பினுள் அட்டிய நீர் [3]
யாக்க நட்பு [4]
யானையால் யானை யாத்து அற்று [5]
ஆயினும் செய்யுளின் கட்டுக்கோப்பு என்ற இலக்கணப்பொருளில் காண்பது அதேபோன்று பாடல்களிற் காண்பது அரிது.

பாட்டு, தூக்கு, தொடர், செய்யுள் எல்லாம் யாப்பு என்ற சொல்லின் பொருள் கூறும் பிற சொற்களாகும்.[6]

யாப்பிலக்கண நூல்கள்

தமிழில் இன்று கிடைக்கக் கூடியதாக உள்ள நூல்களுள் காலத்தால் முந்தியது தொல்காப்பியம். ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கூறப்படும் இந்நூல், அதன் மூன்று அதிகாரங்களில் ஒன்றான பொருளதிகாரத்தில் யாப்பிலக்கணம் பற்றிக் கூறுகின்றது. மேலும், ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள பொருளதிகாரப் பிரிவுகளில் ஒன்றே செய்யுளியல் என்னும் யாப்பிலக்கணமாகும். இதைத் தவிர, யாப்பிலக்கணம் கூறும் பல நூல்கள் காலத்துக்குக் காலம் இயற்றப்பட்டு வந்தன.

நத்தத்தனார், நல்லாதனார், அவிநயனார், பல்காயனார், கையனார், மயேச்சுரனார், பேராசிரியர், பரிமாணனார், வாய்ப்பியனார், காக்கைபாடினியார், சிறுகாக்கை பாடினியார் போன்ற புலவர்கள் யாப்பிலக்கணம் செய்தனர். சங்க யாப்பு, பெரியபம்மம், நாலடி நாற்பது, செயன்முறை, செயிற்றியம் போன்றவையும் யாப்பிலக்கணங் கூறும் நூல்களே. ஆயினும், தொல்காப்பியம் தவிர இன்று வரை நிலைத்திருப்பவை அமிர்தசாகரர் என்பவர் இயற்றிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய இரண்டு மட்டுமே. இவ்விரண்டும் செய்யுள் இலக்கணத்தைத் தமிழில் செப்பமுற விளக்கும் யாப்பிலக்கண நூல்களாகும்.

இவற்றையும் பார்க்கவும்

அடிக்குறிப்பு

  1. யாப்பதிகாரம். சென்னை: பாரி நிலையம். ஏழாம் பதிப்பு 1995. பக். 1-192. 
  2. குறள் 777
  3. குறள் 109
  4. குறள் 793
  5. குறள் 678
  6. மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை (ஐந்தாம் பதிப்பு 2002). யாப்பருங்கலக் காரிகை. சென்னை: பாரி நிலையம், சென்னை. பக். 1-254. 

வெளியிணைப்புக்கள்

"https://tamilar.wiki/index.php?title=யாப்பிலக்கணம்&oldid=12861" இருந்து மீள்விக்கப்பட்டது