யாத்ரா (1978 இதழ்)

யாத்ரா என்பது 1970 களில் வெளியான தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மாதம் ஒருமுறை வெளிவந்தது.

வரலாறு

1978 ஆகத்து மாதம் யாத்ரா இதழ் வெளிவந்தது. 'கலை சார்ந்த கருத்துக்களுக்கேயான களன்' என்று அறிவித்துக் கொண்ட இம் மாத இதழ் தன் நோக்கத்தை வெளியிட்டது. இராமநாதபுரம் மாவட்டம், திருச்சுழி அஞ்சல், பண்ணை மூன்றடைப்பு என்ற இடத்திலிருந்து வெளியான இந்த இதழின் ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழுவினர் யார் என்று வெளிப்படையாக கூறப்படவில்லை.

‘யாத்ரா' ஒரு குழுவினரின் முயற்சி என்று கூறப்பட்டு வந்த போதிலும், அதில் வெங்கட் சாமிநாதன் குரலே தொனித்துக் கொண்டிருந்தது. அவரது கருத்துக்களை, சிந்தனைகளை விருப்பு வெறுப்புக்களையே அது எடுத்துக் காட்டியது என்பதை அந்தப் பத்திரிகையின் வாசகர்கள் நன்கு உணர முடிந்தது. என்று வல்லிக்கண்ணன் குறிப்பிடுகிறார்.

புத்தகங்களைப் பற்றியும் அபிப்பிராயங்கள் தெரிவிப்பதற்காக 'பார்வைகள்' என்ற பகுதியை கொண்டிருந்தது. இதர சிறு பத்திரிகைகளின் முக்கியமான ரசிகர்கள் கவனித்துப் படிப்பதற்கு ஏற்ற கட்டுரைகள், ஆய்வுகள் வெளிவந்தால், அவற்றை எடுத்துச் சொல்வதற்காக 'யாத்ராவின் சிபாரிசு' என்றொரு பகுதியை இது வளர்த்தது. தமிழ்நாடு சரிவரத் தெரிந்து கொள்ளாத படைப்பாளிகள், ஆய்வாளர்களையும், அவர்களது சாதனைகளையும் தன் வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவர இந்த இதழ் பாடுபட்டது. பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை பற்றிய சிறப்புக் கட்டுரை, ப. வ. இராமசாமி ராஜு என்ற நாடகாசிரியர் பற்றியும், அவரது பிரதாயசந்திர விலாசம் நாடகம் பற்றியும் அறிமுகக் கட்டுரைகள், 'ஆண்டி' என்ற புனைபெயரில் நாடகங்களும், நாடகக் கலை பற்றிய ஆய்வுரைகளும் எழுதிய வி. ராமசுப்பிரமணியம் பற்றிய சிறப்பிதழ் (31-32-33) வெளியிட்டது.

ந. முத்துசாமி, செ. ரவீந்திரன், ஜெயராமன், ஆர். ரவீந்திரன் முதலியோர் 'யாத்ரா' வில் அதிகம் எழுதினார்கள். தெருக்கூத்து, கணியான் ஆட்டம், தோற்பாவைக்கூத்து, மெலட்டுர் பாகவத மேளாநாட்டிய நாடகம் பற்றி ஆதாரபூர்வமான கட்டுரைகள் வெளியாகின. 'கணியான் ஆட்டம்' பற்றி எழுதிய அ. கா. பெருமாள் 'நாட்டுப்புற வழிபாடுகள் நம்பிக்கைகள்' குறித்து ஆய்வாக இயக்கி அம்மன் பற்றி விரிவான கட்டுரை எழுதினார். ஒரு இதழ் (மார்ச்-ஏப்ரல் 1980 ) தெருக்கூத்து சிறப்பிதழ் ஆக வெளிவந்தது.

மேலும் இந்த இதழ் நவீன நாடகத்திலும் கருத்து செலுத்தியது. ந. முத்துசாமியின் நாடகங்கள் பற்றிய கருத்துகளையும், முத்துசாமியின் புதிய நாடகங்களையும் வெளியிட்டது.

பல சிற்றிதழ்களைப் போல காலம் தவறி வந்து கொண்டிருந்த யாத்ரா 1983இல் பல மாதங்கள் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் திசம்பரில் திடீரென்று திரு. வி. க. பற்றிய சிறப்பிதழாக விளங்கியது. ஓவியர் ஆதிமூலம் தீட்டிய சித்திரம் ஒன்றை அட்டைப் படமாகக் கொண்ட இந்த இதழ் வெளியானது. 'மற்றுமோர் காந்தி' என்ற தலையங்கம். 'திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புகள்' நூலிலிருந்து பல தகவல்கள், 'பின்னோக்கிய மறுபார்வையில் திரு. வி. க.' என்று செ. ரவீந்திரன் எழுதிய கட்டுரை ஆகியவை அதில் வெளியாயின.[1]

1978இல் துவக்கப்பட்ட யாத்ரா 1986 வரை தொடர்ச்சியாகவும் இடைவெளியோடும் வெளிவந்தது. [2]

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=யாத்ரா_(1978_இதழ்)&oldid=17687" இருந்து மீள்விக்கப்பட்டது