யதுகிரி அம்மாள்

யதுகிரி அம்மாள் (1900 - ஆகஸ்ட் 2, 1954) எழுத்தாளர். சி.சுப்ரமணிய பாரதியின் நண்பர் மண்டயம் சீனிவாசாச்சாரியாரின் மகள். பாரதியின் நினைவுகள் பற்றி எழுதிய நூலுக்காக நினைவுகூரப்படுகிறார்.

யதுகிரி அம்மாள்
யதுகிரி அம்மாள்
இயற்பெயர்/
அறியும் பெயர்
யதுகிரி அம்மாள்
பிறந்ததிகதி 1900
இறப்பு ஆகஸ்ட் 2, 1954
அறியப்படுவது எழுத்தாளர்

வாழ்க்கைக் குறிப்பு

யதுகிரி புதுச்சேரியில் பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு இந்தியா இதழை ஆரம்பித்த மண்டயம் சீனிவாசாச்சாரியார் வேதம்மாள் இணையருக்கு 1900-ல் பிறந்தார். பாரதியார் புதுச்சேரிக்கு வந்தபோது, ஸ்ரீநிவாசாச்சாரியாரும் புதுச்சேரிக்கு வந்தார். 1908 முதல் 1918 வரை பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்தார். இருவருக்கும் எதிரெதிர் வீடு. யதுகிரி பாரதியின் வீட்டில் மூன்றாவது குழந்தையாகவே கருதப்பட்டார்.

தனிவாழ்க்கை

யதுகிரி அம்மாள் நரசிம்ம ஐயங்காரை மணந்தார். பிள்ளைகள் ரங்கநாயகி, வேதவள்ளி, ஜானகி. குடும்பத்துடன் பெங்களூரில் வசித்தார்.

இலக்கிய வாழ்க்கை

யதுகிரி அம்மாள் ’பாரதி சில நினைவுகள்’ எனும் பாரதியார் குறித்த நினைவு நூலை 1939-ல் எழுதினார். பதினைந்து ஆண்டுகள் கழிந்த பின் இந்நூல் வெளியானது. யதுகிரியின் வீட்டிற்கு அடிக்கடி வரும் பாரதியார் தான் எழுதிய பாடல்களைப் பாடிக்காட்டுவார். அவற்றை யதுகிரி தனது குறிப்புப் புத்தகத்தில் குறித்துக் கொள்வார். பாரதியின் பாடல்களும் அவை தோன்றிய சூழல் குறித்தும் யதுகிரி அம்மாள் எழுதினார்.

1938 காலகட்டத்தில் ஆனந்தவிகடன் இதழில் யதுகிரி அம்மாள் அவ்வப்போது இந்நினைவுகளை எழுதினார் என பதிப்பாசிரியரான கடற்கரய் மத்தவிலாச அங்கதம் குறிப்பிட்டுள்ளார். 1954-ல் இன்ப நிலையம் இக்கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாகக் கொண்டுவந்தது. அதற்கொரு முன்னுரையையும் யதுகிரி அம்மாள் ஜூலை மாதம் எழுதி அளித்தார். ஆனால், ஆகஸ்டு மாதத்தில் நூல் வெளிவந்த சமயத்தில் அவர் உயிருடன் இல்லை.

மறைவு

யதுகிரி அம்மாள் ஆகஸ்ட் 2, 1954-ல் காலமானார்.

இலக்கிய இடம்

”எனக்குத் தெரிந்த அளவில் வ.ரா.வின் பாரதியார் சரித்திரமும், செல்லம்மாளின் 'தவப்புதல்வர் பாரதியார்' நூலும், யதுகிரி அம்மாளின் ‘பாரதி நினைவுகளும்’ பாரதி நினைவு நூல்களில் சிறந்தவையாகத் தோன்றுகின்றன. பெரியவர்கள் சொல்ல முடியாத சில உண்மைகளைச் சிறியவர்கள் எவ்வளவு சுலபமாகப் புரிந்து கொண்டு எவ்வளவு சுலபமாகச் சொல்லிவிடுகிறார்கள்!” என க.நா.சுப்ரமண்யம் மதிப்பிடுகிறார்.

"இந்த அழகிய சிறிய புத்தகம் ஒரு க்ளாசிக் என்று சொல்லவேண்டும். வேறு எந்த புத்தகமும், இதன் அழகிற்கும், மனதை நெகிழ்த்தும் பாவனைகளற்ற நடைக்கும், ஈடாக மாட்டாது. ஒரு குழந்தையின் மனதில் ஒரு மகா கவிஞனும் மாமனிதனும் வரைந்துள்ள சித்திரம் இது." என வெங்கட் சாமிநாதன் மதிப்பிடுகிறார்.

நூல்கள்

  • பாரதி நினைவுகள்

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=யதுகிரி_அம்மாள்&oldid=5635" இருந்து மீள்விக்கப்பட்டது