ம. சண்முகலிங்கம்
குழந்தை ம. சண்முகலிங்கம் ஈழத்தின் நாடக எழுத்தாளர், நாடகப் பயிற்சியாளர், நாடக நடிகர்.
வாழ்க்கைச் சுருக்கம்
இவர் நாடகத்துறைக்கான பட்டப்படிப்பினை கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்று முப்பது ஆண்டு காலமாக அதே பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றியிருக்கின்றார்.
கலை இலக்கிய பணிகள்
இவர் இதுவரை நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறார். இவற்றில் சில நூலுருவிலும் வந்திருக்கின்றன. நாடக ஆசிரியர்களான சோபாக்கிளிஸ், இப்சன், அன்ரன்-செக்கோவ், பேட்டல்-பிரக்சட், தாகூர் ஆகியோரின் நாடகங்களில் சிலவற்றையும் சில யப்பானிய நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
1970களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரி ஒன்றினை நிறுவி நாடகத்தை ஒரு பயிற்சி நெறியாக தமிழ் கலைஞர்கள் மத்தியில் அறிமுகம் செய்தார். இந்தப் பணி மூலமாக யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையிலேயே காத்திரமான நாடகத்துறை ஒன்று உருவாக இவர் காரணமாக இருந்திருக்கின்றார்.
1980களுக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை தனது நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்திய இவர் ராணுவ அடக்குமுறை பெண்களுக்கெதிரான அடக்குமுறை மாணவர்களை அடக்கிய கல்வி அடக்குமுறை சாதிய அடக்குமுறை சமூகத்தின் போலித்தனங்கள் என்பவற்றையெல்லாம் தனது நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்தி வந்துள்ளார்.
இவர் எழுதி இயக்கிய மண் சுமந்த மேனியர் என்ற நாடகம் யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டியெல்லாம் மேடையேற்றப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் இவரது ஏனைய நாடகங்களான அன்னை இட்ட தீ, எந்தையும் தாயும் ஆகிய நாடகங்களும் மிகவும் பிரபல்யம் ஆனவை. இவரது ஆர்கொலோ சதுரர் நாடகம் எல்லா நாடகங்களிலும் உச்சமானது.யுத்தத்தில் வெற்றி அல்லது முடிவு ஒன்றில்லை. தோற்பது மனிதம் தான் என்பதை பாரதப் போரின் 14ம் நாள் போரை மையப்படுத்திக் காட்டுகின்றார். இவர் மொழிபெயர்த்த வெண்கட்டி வட்டம் மக்கள்களரி தயாரிப்பில் 2016இல் தமிழ் சிங்கள மலையக முஸ்லிம் கலைஞர்களின் சங்கமிப்பில் யாழ்ப்பாணத்திலும் பண்டத்தரிப்பிலும் கொழும்பிலும் மேடையேறியமை குறிப்படத்தக்கது. நாடக அரங்கக் கல்லூரியின் தயாரிப்பாக உறவுகள் நாடகம் 2017இல் மீளவும் இரதிதரன் இயக்கி பண்டத்தரிப்பு, காரைநகர், புத்தூர், வவுனியா ஆகிய இடங்களில் தேசிய கலை இலக்கியப் பேரவையினால் மேடையேற்றப்பட்டுவருகின்றது. அதேபோல் அவரது மொழிபெயர்ப்பில் தான் விரும்பாத் தியாகி நாடகமும் பல மேடையேற்றங்களைக் கண்டு வருகின்றது. 1976 ஆம் ஆண்டில் வெளியான பொன்மணி இலங்கைத் திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இவர் மொழிபெயர்த்த கவிதைகள் சில தாயகம் இதழில் பிரசுரமானதுடன் தாயகம் இதழின் ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகிக்கின்றார். ஈழத்தின் சிறுவர் நாடகத்தின் முன்னோடியான இவர் சிறுவர் நாடகங்களையும், பாடசாலை நாடகங்களையும் எழுதி இயக்கியிருக்கிறார். கூடிவிளையாடு பாப்பா, காட்டுராஜா, முயலார் முயல்கிறார் போன்ற நாடகங்கள் அவர் எழுதிய சிறுவர் நடாகங்களில் சில.
கௌரவ பட்டம்
நாடகத்துறைக்கு இவர் ஆற்றிவரும் பணிக்காக கிழக்குப் பல்கலைக்கழகம் கலாநிதி (முனைவர்) பட்டம் வழங்கியிருந்தது.
எழுதிய நூல்கள்
- நாடக வழக்கு (அரங்கியற் கட்டுரைகளும், நேர்காணல்களும்)
- மாதொருபாகம்
- வேள்வித் தீ
- ஒரு பாவையின் வீடு ( மொழி பெயர்ப்பு நாடகம்)
- அன்னை இட்ட தீ
- கோக்கேசிய வெண்கட்டி வட்டம் (மொழிபெயர்ப்பு நாடகம்)