மொஹம்மது நிசார்
ஹாமிது லெப்பே மொஹம்மது நிசார்: பிறப்பு மே 25, 1948 எச். எல். எம். நிசார், உடுநுவரை நிசார், உ. நிசார் ஆகிய புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர், சிறுவர் இலக்கியம் படைப்பதில் ஆர்வம் காட்டிவரும் எழுத்தாளராவார்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
மொஹம்மது நிசார் |
---|---|
பிறப்புபெயர் | ஹாமிது லெப்பே மொஹம்மது நிசார் |
பிறந்ததிகதி | மே 25, 1948 |
பிறந்தஇடம் | முருதகஹமுல |
தேசியம் | இலங்கை |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | ♂ஹாமிது லெப்பே, ♀செ. ஹவ்வா உம்மா |
வாழ்க்கைக் குறிப்புகள்
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த உடுநுவரை முருதகஹமுல எனுமிடத்தில், ஹாமிது லெப்பே, செ. ஹவ்வா உம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர், உடுநுவரை டி. பி. விஜயதுங்க தேசிய பாடசாலை, கம்பளை சாஹிரா தேசிய பாடசாலை, கம்பளை விக்கிரமபாகு தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவராவார். இவரின் மனைவி எம். ஆர். எஸ். முபீதா. இவரும் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை. இத் தம்பதியினருக்கு அஹமட் ரிஸ்னி, பாத்திமா முபீனா, ரிஸ்னியா, பாத்திமா சம்ரா ஆகிய பிள்ளைகளுளர்.
இலக்கியத் துறை ஈடுபாடு
கற்கும் காலத்திலிருந்தே வாசிப்புத்துறையிலும், இலக்கியத் துறையிலும் ஆர்வமிக்கவராகக் காணப்பட்ட இவரின் கன்னியாக்கம் 1979ஆம் ஆண்டு தினகரன் வாரமஞ்சரியில் “உலக சாதனை” எனும் பெயரில் பிரசுரமானது. அதிலிருந்து நூற்றுக்கணக்கான சிறுகதைகள், சிறுவர் கதைகள், கவிதைகள் போன்றவற்றை இவர் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் தினகரன், தினக்குரல், சுடரொளி, நவமணி, தினபதி, சிந்தாமணி போன்ற தேசிய பத்திரிகைகளிலும் பல்வேறு சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. அத்துடன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சில நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பாகியுள்ளன.
எழுதியுள்ள நூல்கள்
இதுவரை இவர் ஆறு நூல்கள்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
- கனவுப் பூக்கள்
- ஓயாத அலைகள்
- நட்சத்திரப் பூக்கள்
- வெந்நிலா
- மலரும் மொட்டுக்கள்
- சிறகு விரி
மேலே குறிப்பிட்ட முதல் இரு நூல்களும் கவிதை நூல்களாகும். அடுத்த நான்கு நூல்களும் சிறுவர்களை மையமாக வைத்து சிறுவர்களுக்காக எழுதப்பட்ட சிறுவர் பாடல்களாகும். மேற்குறிப்பிட்ட நூல்கள் முறையே 2005, 2007, 2006, 2007, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்தன.
பெற்ற விருது
- கலாபூஷணம் 2008
ஆதாரம்
- இவர்கள் நம்மவர்கள்- பாகம் 05 - கலாபூஷணம் புன்னியாமீன் (பக்கம் 146-148) ISBN 978-955-1779-17-7