மே. ரா. மீ. சுந்தரம்


மேலநத்தம் இராமசந்திர ஐயர் மீனாட்சிசுந்தரம் (சுந்தா, ஏப்ரல் 13, 1913 - நவம்பர் 11, 1995) எழுத்தாளர், கவிஞர்.புகைப்படத்திற்கு நன்றி பசுபதிவுகள் எழுத்தாளர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். மே.ரா.மீ.சுந்தரம் என்ற பெயரில் நிறைய எழுதினார்.

மே. ரா. மீ. சுந்தரம்
மே. ரா. மீ. சுந்தரம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
மே. ரா. மீ. சுந்தரம்
பிறப்புபெயர் மேலநத்தம்
இராமசந்திர ஐயர்
மீனாட்சிசுந்தரம்
பிறந்ததிகதி ஏப்ரல் 13, 1913
இறப்பு நவம்பர் 11, 1995
அறியப்படுவது எழுத்தாளர்,
கவிஞர்

வாழ்க்கைக் குறிப்பு

மீனாட்சிசுந்தரம் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் மேலநத்தம் கிராமத்தில் இராமசந்திர ஐயர் - ருக்மணி அம்மாள் தம்பதிக்கு பிறந்தார். தொடக்க காலத்தில் கிராம முன்சீப்பாக 13 ரூபாய் சம்பளத்தில் பணிக்குச் சேர்ந்தார். சுந்தா, மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

வேலை பார்க்கும்போதே புத்தகம் படிப்பதில் ஈடுபாடு கொண்டார். கவிதை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. கலைமகள் நடத்திய கவிதைப் போட்டி ஒன்றில் முதல் பரிசாக தங்கப்பதக்கம் கிடைத்தது.

ரசிகமணி டி.கே.சி. பரிந்துரையின் பேரில் திருச்சி வானொலி நிலையத்தில் சுந்தா பணியில் சேர்ந்தார். இதன் மூலம் ராஜாஜி, தொ.மு.சி. பாஸ்கரத் தொண்டைமான் ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு சுந்தாவுக்கு ஏற்பட்டது. எழுதத் தொடங்கினார். எழுத்திலே இயற்கையாக அமைந்த நகைச்சுவை, இலக்கியக் கவிதைநடை பலரைக் கவர்ந்தது. ஆசிரியர் கல்கியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.

தில்லி வானொலியில் பணி

பிறகு, தில்லி வானொலிக்குச் செல்லும்படி நேர்ந்தது. தில்லியில் பல இலக்கிய நண்பர்கள் அறிமுகமானார்கள். தில்லி வானொலியில் தமிழ்ச் செய்திப் பிரிவில், தமிழ்ச் செய்தி தயாரிப்பதோடு செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார். "செய்திகள் வாசிப்பது எம்.ஆர்.எம்.சுந்தரம்' என்ற குரலுடன் தனது ஒலிபரப்பைத் தொடங்குவார். செய்திப் பிரிவில் தலைவராகப் பதவி உயர்வு கிடைத்தது.

தமிழ்ச் செய்திப் பிரிவில் பணியாற்றியதோடு தமிழில் புதிய சொல் வடிவங்களைத் தாமே உருவாக்கிப் படிப்பார். "அடிக்கல் நாட்டுதல்', "குழந்தைகள் காப்பகம்' என்று பல சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தினார். குடும்பக் கட்டுப்பாடு பிரசாரத்துக்காக சுந்தா உருவாக்கிய சொற்றொடர்கள்தாம் "நாம் இருவர் நமக்கு இருவர்', "அதிகம் பெறாதீர், அவதியுறாதீர்' போன்றவை.

தில்லி தமிழ்ச்சங்கம் தொடங்கிய காலத்தில் அதன் வளர்ச்சிக்கு உதவியவர்களுள் சுந்தாவுக்கு முக்கிய பங்குண்டு. அந்த நாள்களில் தமிழ்ச் சங்கம் "சுடர்' என்ற அருமையான இலக்கிய இதழ் ஒன்றைத் தயாரித்தது. "சுடர்' தயாரிப்பதில் சுந்தாவின் பங்கு அதிகம். பிபிசி தமிழோசை நிகழ்ச்சியிலும் இவர் மூன்றாண்டுகள் பணியாற்றியிருந்தார்.

சுந்தா நாடகங்களில் நடித்திருக்கிறார். பாட்டி வேடம் போட்டிருக்கிறார். குறவன்-குறத்தி நடனம் என்று நகைச்சுவை நாடகங்களும் நடத்தியிருக்கிறார்.

எழுத்தாளராக

வானொலி நிலையப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, தினமணி கதிரில் "தலைநகரில் ஒரு தலைமுறை" என்ற தொடரை எழுதினார். அதன் பின்னர் 1976 ஆம் ஆண்டு கல்கி நிறுவனர் ரா. கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையை "பொன்னியின் புதல்வர்" என்ற பெயரில் கல்கி இதழில் 4 ஆண்டுகளாக எழுதினார். இது நூலாக 912 பக்கங்களில் வெளிவந்தது.

இது தவிர "இதய மலர்கள்' என்ற கவிதைத் தொகுப்பும், "கருநீலக் கண்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் சிறு சிறு - ஒரு பக்க எழுத்துச் சித்திரங்களை தொடக்கக் காலத்தில் எழுதியிருக்கிறார்.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=மே._ரா._மீ._சுந்தரம்&oldid=5615" இருந்து மீள்விக்கப்பட்டது