முள்ளியூர்ப் பூதியார்

முள்ளியூர்ப் பூதியார் சங்ககாலத்துப் பெண்புலவர்களில் ஒருவர். பூதன் ஆண்பால் பெயர். பூதி பெண்பால் பெயர். இவரது பாடல் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 173.

பாடல் தரும் செய்திகள்

பொருள்செய்வதன் நோக்கம்

  • சங்ககாலத்தில் வினை என்னும் சொல் போரிடும் செயலைக் குறிக்கும். 'வினை முற்றிய தலைவன்' என்னும்போது இச்சொல் இப் பொருள்படுவதைக் காணலாம். பொருள் தேடும் பொருள்செய் வகையைக் குறிக்கும் சங்ககாலச் சொல் 'செய்வினை'
  1. அறம் தலைப்பிரியாது ஒழுகல் (ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாய் எல்லாம் செயல் - திருக்குறள்)
  2. சிறந்த கேளிர் கேடு பல ஊன்றல் (கேட்டின்கண் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் - திருக்குறள்)

தாங்கல் வேண்டும்

இந்த நன்னோக்குடன் அவர் பொருளீட்டச் சென்றிருக்கிறார். எனவே அவர் பிரிவைச் சிலநாள் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் என்று தோழி தலைவியை வற்புறுத்துகிறாள்.

உமண் விளி

உப்பு விற்கச் செல்லும் உமணர்கள் உப்பு வண்டியை மேட்டு நிலத்துக்கு ஏற்றும்போது பகடுகளைப் பல நுகங்களில் கட்டி ஒன்றாகப் பிணித்து இழுக்கச் செய்வர். அப்போது பலநுகப் பகடுகளை ஓட்டுவதற்குப் பலர் செய்யும் அதட்டல் ஒலிதான் உமண் விளி.

இந்த ஒலியைக் கேட்டு அங்குள்ள பாலைநிலத்தில் மேயும் மான்கள் நாலாப் பக்கமும் ஓடுமாம். அப்படிப்பட்ட நிலவழியில் தலைவன் பொருள் தேடச் சென்றானாம்.

மண்ணா முத்தம்

முத்தம் என்றும் சொல்லப்படும் முத்து நீரில் தோன்றும். நீரில் கழுவி எடுக்கப்படும். நீண்ட மால மூங்கிலில் விளையும் முத்தம் முத்தம் மண்ணா முத்தம். நீரில் கழுவப்படாத முத்தம். அவை மூங்கிலின் கணுக்கள் உடைந்து தெறிக்குமாம்.

கழங்கு விளையாட்டு

கழங்கு என்பது கழறசிக்காய். இதனை இக்காலத்தில் சூட்டுக்கொட்டை எனவும் வழங்குவர். இது வெண்மை நிறம் கொண்டது. கழங்குகளைக் குழியில் போட்டு விளையாடும் ஆட்டம் கழங்கு.

மூங்கிலின் கணு உடைந்து தெறிந்து மண்ணிலுள்ள பழங்குழிகளில் விழுவது வழங்கு விளையாட்டு போல் இருக்குமாம். (இக்காலத்தில் சிறுவர்கள் குண்டைக் குழியில் போட்டு விளையாடும் ஆட்டம் அக்காலக் கழங்காட்டம் போன்றது)

இப்படிப்பட்ட பாலைநிலப் பாதையில் தலைவன் பொருள்தேடச் சென்றானாம்.

நன்னன் பொன்படு நெடுவரை

மூங்கிலின் மண்ணா முத்துகள் கழங்கு போல் பழங்குழிகளில் தாவும் மலைப்பகுதிகளைக் கொண்டது 'பொன்படு நெடுவரை'. இதன் அரசன் நன்னன்.

இந்த மலைப்பகுதி நாட்டில் பொருள்செய்யத் தலைவன் சென்றானாம்.


"https://tamilar.wiki/index.php?title=முள்ளியூர்ப்_பூதியார்&oldid=11834" இருந்து மீள்விக்கப்பட்டது