மா. கமலவேலன்
மா. கமலவேலன் திண்டுக்கல்லைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். இவர் இந்திய மத்திய அரசின் பாலசாகித்ய புரஸ்கார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1961 ஆம் ஆண்டில் இருந்து சிறுவர் நூல்களை எழுதி வருகிறார். சிறுகதை, நாடகம், வாழ்க்கை வரலாறு ஆகிய துறைகளிலும் இவரது பங்களிப்பு உள்ளது. வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள், உரைச் சித்திரங்கள் வழங்கியுள்ளார்.
இவர் திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு 1998ம் ஆண்டு மாநில அரசு நல்லாசிரியர் விருது வழங்கி உள்ளது. கண்ணன், அரும்பு கோகுலம், சிறுவர்மணி ஆகிய சிறுவர் இதழ்களில் குழந்தைகளுக்காக எழுதியுள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
கமலவேலன், இளம் வயது முதலே இலக்கிய ஆர்வம் உடையவராக இருந்தார். இவரது புதுமை என்னும் தலைப்பிலான முதல் சிறுகதை, இவரது 18 ஆம் வயதில், 1961-ல், கண்ணன் சிறார் இதழில் வெளியானது. தொடர்ந்து சிறார்களுக்காக ‘அரும்பு’, ’கோகுலம்’, ‘பாலர் மலர்’ போன்ற இதழ்களில் எழுதினார். பெரியோர்களுக்கான முதல் சிறுகதை நாரண துரைக்கண்ணன் ஆசிரியராக இருந்த 'பிரசண்ட விகடன்' இதழில் வெளியானது. தொடர்ந்து 'ஆனந்த போதினி' இதழில் சில இலக்கியக் கட்டுரைகளை எழுதினார். நா. பார்த்தசாரதி நடத்திய ‘தீபம் இதழில் இவரது சிறுகதைகள் பல வெளியாகின. தொடர்ந்து கலைமகள், கல்கி, குங்குமம், குமுதம், கண்ணதாசன், இலக்கிய பீடம், அமுதசுரபி, குமுதம் ஜங்ஷன், ஆனந்த விகடன், சாவி, இதயம் பேசுகிறது, தமிழரசி, ராணி என்று பல இதழ்களில் சிறுகதைகள், குறுநாவல், கட்டுரைகள் எழுதினார். கண்ணதாசன் இதழில் இவர் எழுதிய ஆண்டாள் கவிராயர் கட்டுரை வாசக வரவேற்பைப் பெற்றது.
நூல்கள்
விண்வெளி விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம், ஒய்.எஸ். ராஜனுடன் இணைந்து எழுதிய இந்தியா 2020 என்னும் நூலை, சிறுவர்களுக்காக எளிய தமிழில் சுருக்கி எழுதினார் மா. கமலவேலன். முன்னாள் குடியரசுத் தலைவர்களான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், கே.ஆர். நாராயணன், அப்துல் கலாம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதினார். கே.ஆர்.நாராயணன் வாழ்க்கை வரலாறு இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி பால் சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற இவரது நூலான அந்தோணியின் ஆட்டுக்குட்டி’மலையாள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய சிறார் நூல்களை பழனியப்பா பிரதர்ஸ், தென்றல் நிலையம், மணிவாசகர் பதிப்பகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட் போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன.
கமலவேலன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுள் ஒருவராகப் பணியாற்றினார். இவரது படைப்புகளை ஆராய்ந்து மாணவர்கள் சிலர் இள முனைவர் (M.Phil) மற்றும் முனைவர் (Ph.D) பட்டம் பெற்றுள்ளனர். பக்க பலம் என்ற இவரது கட்டுரைத் தொகுப்பு கோவை அரசினர் கல்லூரியில் துணைப்பாடமாக வைக்கப்பட்டது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இரண்டிலும் இவர் எழுதிய அழுக்குப்படாத அழகு என்ற நாடக நூல் பாடமாக இடம் பெற்றது.
மா. கமலவேலன் 90 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். அவற்றில் சுமார் 30 நூல்கள் சிறார்களுக்கானவை.
நாடக வாழ்க்கை
கமலவேலன், திருச்சி, மதுரை வானொலி நிலையங்களின் சிறுவர் பூங்கா நிகழ்ச்சியிலும் இளைய பாரதம் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இவரது முதல் வானொலி நாடகம் அப்பாவுக்குத் தெரியாமல் நவம்பர் 1971-ல் ஒலிபரப்பானது. தொடர்ந்து பல உரைச்சித்திரங்களை, நாடகங்களை எழுதினார். இவரது நாடகங்கள் அகில இந்திய வானொலி நாடக விழா க்களில் ஒலிபரப்பாகின. காந்தி கிராமத்தில் இயங்கி வரும் ஊரகப் பல்கலைக் கழகம் பற்றிய அண்ணலின் அடிச்சுவட்டில் என்ற உரைச்சித்திரத்தை, மதுரை (பொதிகை) தொலைக்காட்சிக்காக வழங்கினார். தவிர பொதிகைக்காக பல நூல் மதிப்புரைகளை அளித்துள்ளார்.
கமலவேலன் எழுதிய பாவமா? சாபமா? , எங்கப்பாவா கஞ்சன், வாடாமலர் போன்ற நாடகங்கள் கோகுலம் இதழில் பிரசுரமாகின. அசோகன் பதிப்பகம், இவர் எழுதிய நாடகங்களைத் தொகுத்து உறவுப்பாலம் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டது. இந்த நூல், பள்ளிக் கல்வித் துறையின் கரும்பலகைத் திட்டம் மூலம் 11000 படிகள் வாங்கப்பட்டு தமிழ்நாடெங்கும் விநியோகிக்கப்பட்டது.
விருதுகள்
- சாகித்ய அகாதெமி குழந்தைகள் இலக்கியத்துக்கான “பாலசாகித்ய புரஸ்கார் விருது” "அந்தோணியின் ஆட்டுக்குட்டி" என்ற சிறுவர் நூலுக்கு கிடைத்துள்ளது. இப்பரிசு பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் மா.கமலவேலன்[1].
- திருப்பூர் தமிழ்ச் சங்க விருது,
- தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்ற விருது
- அறிவொளி இயக்கத்தில் சிறந்த பணிக்காக மால்கம் ஆதிசேஷய்யா விருது
- இலக்கியச் சிந்தனை பரிசு தீபம் இதழில் வெளியான ஆடு ஒன்று அழைக்கிறது சிறுகதைக்காக.
- சாவி நடத்திய மாதச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு
- திருப்பூர்த் தமிழ்ச் சங்கப் பரிசு - சிதையாத உண்மைகள் நூலுக்காக.
- திருப்பூர்த் தமிழ்ச் சங்கப் பரிசு - நம்பமுடியாத நல்ல கதைகள் நூலுக்காக.
- கோவை அமரர் லில்லி தேவசிகாமணி அறக்கட்டளைப் பரிசு - நந்தவனப் பூ சிறுகதைத் தொகுப்புக்காக.
- தமிழ்நாடு கலை இலக்கிய மன்றம்-என்.சி.பி.எச். பதிப்பகம் இணைந்து நடத்திய போட்டியில் பரிசு - கல்லா மனம் நூலுக்காக.
- கோவை ‘வள்ளியப்பா இலக்கிய வட்டம்’ வழங்கிய அழ.வள்ளியப்பா விருது.
- தமிழக அரசின் நல்லாசிரியர் விருது
- மால்கம் ஆதிசேஷையா விருது - அறிவொளி இயக்கம் சார்ந்த பணிகளுக்காக.
- பால் சாகித்ய புரஸ்கார் - அந்தோணியின் ஆட்டுக் குட்டி நாவலுக்காக. (2010)
இலக்கிய இடம்
சிறார்களைக் கவரும் வகையில் சிறு சிறு வார்த்தைகளைக் கொண்ட எளிய நடையில் தன் நூல்களை எழுதி வருகிறார் மா. கமலவேலன். ரேவதி, செல்லக்கணபதி, கொ.மா. கோதண்டம், இரா. நடராசன், தேவி நாச்சியப்பன் எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் போன்ற சிறார் எழுத்தாளர்கள் வரிசையில் மா. கமலவேலன் இடம் பெறுகிறார்.
நூல்கள்
சிறுகதை - கட்டுரை நூல்கள்
- அந்தோணியின் ஆட்டுக்குட்டி
- அழகர்சாமியின் நீச்சல்
- பேசும் கடிதங்கள்
- நம்ப முடியாத நல்ல கதைகள்
- செம்மொழி வளர்த்த செம்மல்கள்
- சாதனைச் செம்மல் ச.வே.சு.
- குழந்தைகள் கொண்டாடும் குடியரசுத் தலைவர்
- குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன்
- அழுக்குப்படாத அழகு
- நேர்காணல்கள் - 1
- நேர்காணல்கள் - 2
- நேர்காணல்கள் - 3
- பெயர் சொல்லும் பூக்கள்
- போராடும் பூக்கள்
- நந்தவனப் பூ
- அதிசய தவளைப்பெண்
- அலையாடும் நினைவுகள்
- கல்லாமனம்
- வெள்ளம்
- கமலவேலன் கதைகள்
- காந்தியடிகள்
- பாரதரத்னா டாக்டர் ராதாகிருஷ்ணன்
- நாட்டுக்கு உழைத்த நல்லவர் - பாபு ஜெகஜீவன்ராம்
- நாட்டுக்கு உழைத்த நல்லவர் - அன்னை தெரசா
- சமயம் வளர்த்த சான்றோர் - காரைக்கால் அம்மையார்
- நாட்டுக்கு உழைத்த நல்லவர் - பெரியார் ஈ.வெ. ராமசாமி
- நாட்டுக்கு உழைத்த நல்லவர் - முத்துராமலிங்கத் தேவர்
- நாட்டுக்கு உழைத்த நல்லவர் - ராஜீவ்காந்தி
- ஜப்பான் நாட்டுக் கதைகள்
- பக்கபலம்
- மழையில் நனையும் மலை
- விடுதலைக் கீர்த்தனைகள்
- ஒற்றைக்கால் பறவை
- நேசிக்கும் நெஞ்சங்கள்
- தன்னம்பிக்கை தந்த பரிசு
- படிக்காத பாடம்
- இன்று மழை பெய்யும்
நாடகங்கள்
- வெள்ளம்
- பிறைசூடி
- தெளிவு பிறந்தது
- சிதையாத உண்மைகள்
- காட்டுப் பூக்கள்
- படிக்காத பாடம்
- அகிலா
- மாறி வரும் முகவரிகள்
- உறவுப்பாலம்
ஆங்கில நூல்கள்
- Antony And The Little Lamb
- Chetan Bagat The Three Mistake Of My Life
- Bharat Ratna Dr . Radhakrishnan
உசாத்துணை
மேற்கோள்கள்
- ↑ எழுத்தாளர் மா.கமலவேலனுக்கு பாலசாகித்ய புரஸ்கார் விருது, தினமணி, ஆகத்து 27, 2010