மா. அன்பழகன்
புதுமைத்தேனீ மா. அன்பழகன் (பிறப்பு: சனவரி 21 1948) தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவரும், மளிகை வணிகத் தொழிலாளரும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினருமாவார்.
இலக்கியப் பணி
கவிதை, கட்டுரை. புதினம் ஆகிய துறைகளில் பல்லாண்டுகாலமாக எழுதிவருகின்ற இவர் இலக்கியப் பணியுடன் திரைப்படத்துறை, அரசியல், மேடைப்பேச்சு, சமுதாயத் தொண்டு ஆகியவற்றிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.
எழுதியுள்ள நூல்கள்
1985 - சென்னையில்
1. சமுதாயச் சந்தையிலே - கட்டுரை
2. அலைதரும் காற்று - கவிதை
3. ஜூனியர் பொன்னி - புதினம்
4. மடிமீது விளையாடி - புதினம்
5. இதில் என்ன தப்பு? - திரைக்கதை
1987 - சென்னையில்
6. பழமும் பிஞ்சும் - சிறுவர் கடித இலக்கியம்
7. அந்தப் பார்வையில் - புதினம்
2002 - சிங்கையில்
8. ஒன்றில் ஒன்று - உரைவீச்சு with Translations
9. இப்படிக்கு நான் - படச்சுவடி
2005
10. விடியல் விளக்குகள் - சிறுகதைகள்
2006
11. உடன்படு சொல் - மேடைப் பேச்சு
2007
12. இன்னும் கேட்கிற சத்தம் - பண்பாட்டுப் பதிவு
2009
13. ஆயபுலம் - புதினம்
14. என்பா நூறு - வெண்பாச் செய்யுள்கள்
15. Bubbles of Feelings – Short Stories Translations
2010
16. என் வானம் நான் மேகம் - திரைப் பெரும் கதைகள்
2011
17. Beyand The Realm - Stories Translations
2012
18. கவித்தொகை - ‘பிசி' கவிதைகள்
2013
19. திரையலையில் ஓர் இலை - திரைத்துறை அனுபவம்
20. எர்கு - திரைப்படத்திற்கான கதை
21. ERHU – Story Translation
2014
22. வாய்க்கால் வழியோடி - மேடைப் பேச்சுகள்
23. ஆயிழையில் தாலாட்டு - அளித்த அணிந்துரைகள்
24. கூவி அழைக்குது காகம் 1 - மாணவர் கடித இலக்கியம்
25. கூவி அழைக்குது காகம் 2 - மாணவர் கடித இலக்கியம்
26. கூவி அழைக்குது காகம் 3 - மாணவர் கடித இலக்கியம்
2015
27. பாதிப்பில் பிறந்த பாடல்கள்
28. புதுமைத்தேனீ - சிறுகதைகள்
2016
29. காதல் இசைபட வாழ்தல் - புதினம்
2017
30. அடுத்த வீட்டு ஆலங்கன்று - கவிதை
2018
31. அன்புக்கு அழகு75 - பவளவிழா மலர்
2019
32. சிங்கப்பூர் சொல்வெட்டு 555 - வரலாற்று - விருத்தப்பாவில்
2020
33. டுரியானுள் பலாச்சுளை - சிறுகதைகள்
34. கூவி அழைக்குது காகம் 4. கடித இலக்கியம்
35. மேகம் மேயும் வீதிகள் - கவிதைகள்
2023
36. ஐம்பதிலும் வாழ்க்கை வரும் (தன்முனைப்புக் கட்டுரைத் தொகுப்பு)
37. செம்பியன் திருமேனி (சரித்திர புனைவு நாவல்)
பெற்ற விருதுகள், பரிசுகள், சாதனைகள்
1959-ஆம் ஆண்டு. பிறந்த ஊரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில், 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, புரூக் பாண்ட் நிறுவனத்தார் மாணவர்களுக்கு ஒரு கட்டுரை போட்டி நடத்தினார்கள். தலைப்பு: 'இந்திய தேயிலைத் தொழிலின் முக்கியத்துவம்'. ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்திலேயே முதல் சிறந்த கட்டுரையெனத் தேர்ந்தெடுத்து இருபத்தைந்து ரூபாய் பரிசு கொடுத்தார்கள். தென்னாட்டுக் காந்தி என அழைக்கப்பட்ட, சட்டை போடாத சர்தார் வேதரத்தினம் பிள்ளை வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, பள்ளியின் ஆண்டுவிழா மேடையில் கொடுத்தார். 'இனி காப்பி, டீ குடிப்பதில்லை' என அப்போது அவருக்குக் கொடுத்த உறுதிமொழியை இன்றளவும் காப்பாற்றி வருகிறார்.
17.07.1990 இல் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தலைமையில் உவமைக் கவிஞர் சுரதா அவர்களால் " கவிமாமணி " என்ற விருது அளிக்கப்பட்டது.
2003 ஆம் ஆண்டு தாமோங் ஜூரோங் சமூக மன்றத்தின் சார்பில் டாக்டர் என். ஆர். கோவிந்தன் அவர்களின் ஏற்பாட்டில் நடந்த தமிழர்த் திருநாள் விழாவில் சிங்கப்பூர் அமைச்சர் மாண்புமிகு தர்மன் சண்முகரத்தினம் கரங்களால், “முத்தமிழ்க் காவலர்" என்ற விருது வழங்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டு சிங்கப்பூர் புத்தக மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் நடைபெற்ற சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கு 'ஆயபுலம்' எனும் புதினம் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானது.
2011 ஆம் ஆண்டு சிங்கப்பூர் இலக்கிய மையமும், அரசு விரைவு வண்டி போக்கு வரத்து நிறுவனமும், சிங்கப்பூர்த் தேசியக் கலைகள் மன்றமும் இணைந்து தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் நடத்திய 'மூவிங் வோர்ட்ஸ்' எனும் நான்குமொழி கவிதைப் போட்டி நடைபெற்றது. ஆங்கிலம், மாண்டிரின், மலாய், தமிழ் ஆகிய தேசிய அதிகாரத்துவ நான்கு மொழிகளிலிருந்தும் ஈராயிரம் கவிதைகள் போட்டிக்கு வந்தன. அதில் ஆங்கிலம், மாண்டிரின் எனும் சீனமொழிக்குத் தலா 4 கவிதைகளும், மலாய், தமிழுக்குத் தலா 2 கவிதைகளும் தேர்வாகின. அந்தக் கவிதைகளை நாட்டின் அனைத்து MRT நிலையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. மக்கள் வாக்களிக்க ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தன. அன்பழகனின் கவிதை தமிழில் முதலாவதாகவும், அனைத்து 2000 கவிதைகளில் மூன்றாவதாகவும் தேர்வு பெற்று பரிசு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
26.09.2011 அன்று கவிஞர் பொன்னடியாரின் திங்களிதழ் முல்லைச்சரத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, 'கவிப்பேரொளி' எனும் பட்டத்தைச் சென்னை வாணிமகாலில் நடைபெற்ற விழாவில் அன்பழகனுக்கு அளித்துப் பெருமைப்படுத்தினார்.
2012 ஆம் ஆண்டு சிங்கப்பூர் புத்தக மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் நடைபெற்ற சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கு 'என் வானம் நான் மேகம்' எனும் குறுநாவல்கள் நூல் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானது.
2012 ஆம் ஆண்டு நாமக்கல் கு. சின்னப்பப்பாரதி இலக்கிய அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற அனைத்துலகப் போட்டியில் 'என் வானம் நான் மேகம்' எனும் நூல் சிறந்த நூலுக்கான சிறப்புப் பரிசினைப் பெற்றது.
2013 ஆம் ஆண்டு சிங்கப்பூர்த் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பாரதியார் விழாவில் "பாரதியார் விருது" அளிக்கப்பட்டது.
14.03.2015 அன்று கூடல்மாநகரில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 'உலகத் தமிழர்களுக்கிடையிலான பன்னாட்டுப் பரிமாற்றக் கருத்தரங்கில்' சிங்கப்பூரின் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றியதைப் பாராட்டிச் சான்றிதழும், கேடயமும் தமிழக அரசின் தமிழ்மொழிப் பண்பாட்டுச் செயலாளர் திரு இராஜாராம் கரங்களால் அளிக்கப்பட்டது.
2015 ஆண்டு சிங். தமிழ் எழுத்தாளர் கழகம் முத்தமிழ் விழாவை முன்னிட்டு நடத்திய சிறுகதை போட்டியில் 'கைம்மாறு' எனும் இவருடைய சிறுகதை 1000 வெள்ளி முதற்பரிசைப் பெற்றது.
2015 ஆம் ஆண்டு சிங்கப்பூர் இந்தியர் சங்கம், வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவுடன் நடத்திய 'குறளுக்கேற்ற சைப்பாடல்' கவிதைப்போட்டியில் இவர் கவிதை முதற்பரிசு 800 வெள்ளியைப் பெற்றது.
2016 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், கம்பம் பாரதி கழகத்தின் சார்பில் நடைபெற்ற போட்டியில் இவர் எழுதிய 'கூவி அழைக்குது காகம்' எனும் நூல் 2015 ஆம் ஆண்டின் சிறந்த நூல் எனத் தேர்வு பெற்று அதற்கானப் பரிசைப் பெற்றது.
19.02.2018- அன்று சென்னை அமரகவி அப்துல் ஹமீது நினைவு அறக்கட்டளை 'கூவி அழைக்குது காகம்' எனும் மாணவர் கடித இலக்கிய நூல் 2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் என தேர்வு செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கரங்களால் விருது கொடுத்துச் சிறப்பிக்கப்பட்டது.
கவிமாலை சார்பில் திங்கள்தோறும் நடைபெறும் கவிதைப் போட்டியில் பலமுறை பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.
சாதனைகள்
அன்பழகன் பெற்ற விருதுகளின் எண்ணிக்கைக்கு இணையாக அவர் 'வேண்டாம்' எனத் தவிர்த்த விருதுகளும் பல உள்ளன.
1980-இல் சென்னையில் வசித்த காலம். முன்னாள் அமைச்சர் க. இராசாராம் அவர்கள், அன்பழகனுக்கு நெருக்கமான நண்பர். எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, அவருக்கு சட்டமன்ற அவைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. அன்பழகன் கொடுத்த ஆலோசனையை ஏற்று, அவை தொடங்கும்போது, தினம் ஒரு குறள் பொழிப்புரையுடன் சொல்லித் தொடங்கியது. அப்பழக்கம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது. அத்துடன் மாநகராட்சிகளிலும் பின்பற்றப்படுவதாகச் சொல்கிறார்கள்.
15.08.1971-இல் சென்னையில் 'பசும்பொன் பைன் ஆர்ட்ஸ்' எனும் அமைப்பு தொடங்கப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து அவ்வமைப்புக்கென்று சென்னை அபிபுல்லா தெருவில் ஓர் இடம் வாங்க அன்பழகன் பின்புலமாக விளங்கினார். அந்த அமைப்புக்கென்று ஒரு 'தேவர் வாழ்த்தை' உருவாக்க திட்டமிட்டார்கள். பல பெரிய கவிஞர்கள் எல்லோரும் வாழ்த்துப் பாடல்களை எழுதினார்கள். ஆனால் அன்பழகன் எழுதிய வாழ்த்துதான் சிறந்த வாழ்த்தாகத் தேர்வாகி, இன்று வரை அப்பாடல் பாடப்படுகிறது.
1983-ஆம் ஆண்டு சென்னை, அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தில், அன்பழகனின் ஆலோசனையின் பேரில் 'உறவுமலர்' எனும் திங்களிதழ், இவரையே ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்டது. அக்காலத்தில் திருமணத் தகவல் நிலையம் அமைத்து சுமார் 100 திருமணங்கள் நடப்பதற்கு மூல காரணமாக விளங்கினார்.
2008 -ஆம் ஆண்டு முதல் 2017 வரை சிங்கப்பூரில் கவிமாலை எனும் அமைப்புக்கு முழுபொறுப்பேற்றுக்கொண்டார். சிங்கப்பூரில் ஏற்கனவே சிறந்து விளங்கும் தமிழ் அமைப்புகளுக்கு நிகராகக் குறுகிய காலத்தில் கவிமாலையை உயர்த்திக் காட்டினார். அமைப்பைப் பதிவு செய்தார். ஆனால் எந்தப் பதவியையும் ஏற்றுக்கொள்ளாமல் அதன் நிரந்தர காப்பாளராகவே விளங்குகிறார். அன்பழகனுடைய ஊக்கத்தால், உதவியால் சுமார் 140 தமிழ் நூல்களை வெளியிட்டுக் கொடுத்த பெருமை அன்பழகனையே சாரும். நிகழ்ச்சிகளை நடத்தும்போது நேரம் தவறாமையையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிப்பதில் சிங்கைத் தமிழ் இலக்கிய உலகில் முன்னோடியாகத் திகழ்கிறார்.
அன்பழகன் இதுவரை 35 நூல்களைப் படைத்துச் சிங்கப்பூரில் அதிகமான நூல்களை எழுதிய எழுத்தாளர்களில் இவரும் ஒருவராகத் திகழ்கிறார்.
இதுவரை 35 நூலளின் வழி சுமார் 6,572 பக்கங்களை எழுதிப் படைத்துள்ளார். இவர் எழுதிய முதற்கவிதை எழுதிய ஆண்டு 1960, முதற்கதை எழுதிய ஆண்டு 1962. முதல் ஐந்து நூல்களை வெளியிட்ட ஆண்டு 1985. வெளியிட்டவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்.
இவருடைய நூல் ‘மடிமீது விளையாடி' 1986-இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை படிக்கும் மாணவர்களுக்குப் பாடநூலாக மூன்றாண்டுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
1988-இல் அதேபோல் பாரதிதாசன் பல்கலைக் கழகத்திலும் அதே நூல் இளங்கலை படிக்கும் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
1990-இல் இவருடைய 'அந்தப் பார்வையில்' என்ற நூல் பூண்டி புஷ்பம் தன்னாட்சிக் கல்லூரியில் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பாடநூலாகப் பரிதுரைக்கப்பட்டது.
1976 - ஒரு அரசியல் வழக்கு. பொதுவுடமை இயக்கத்தின் தலைவர் எம். கல்யாணசுந்தரம் வாதி. பிரதிவாதி அன்பழகன். வழக்கு தொடுத்தவர் நேரில் வந்து வாக்குமூலம் கொடுத்தால்தான், வழக்கானது அடுத்த நிலைக்குப் போகும். தொடர்ந்து சில ஆண்டுகளாக வராமலேயே இருந்த வாதி ஒருநாள் நீதி மன்றத்திற்கு வந்துவிட்டார். ஆனால் அன்பழனின் வழக்குரைஞர் வழக்கம்போல் வாதி இன்றும் வரமாட்டார் என்று எண்ணி, உயர்நீதி மன்றத்திற்குச் சென்றுவிட்டார். அன்றையதினம் வாதியின் வாக்குமூலத்தைப் பெறாவிட்டால் மேலும் சில ஆண்டுகள் தள்ளிப்போகும் என்று நினைத்த அன்பழகன் தானே வழக்குரைஞராகி வாதியிடம் கேட்கவேண்டிய கேள்விகளைக் கேட்டு முடித்தார். வாதியும், நீதிபதியும் வியப்பாகப் பார்த்தனர்.
அன்பழகனுக்குப் பல பட்டங்களும், விருதுகளும் கிடைதாலும், அவர் எதையும் பயன்படுத்துவதில்லை. ஆனால் இவருடைய மணிவிழாவின்போது பிச்சினிக்காடு இளங்கோ அவர்ளால் முன்மொழியப்பட்ட அடைமொழியான "புதுமைத்தேனீ" மட்டும் இவருடைய பெயருக்கு முன்னால் ஒட்டிக்கொண்டே வருகிறது.
உசாத்துணை
- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு