மானா மக்கீன்
எம்.எம். மக்கீன் (மானா மக்கீன், பிறப்பு: மே 29, 1937) 1950களில் இருந்து எழுதிவரும் ஓர் ஈழத்து எழுத்தாளரும் ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமாவார்.
வாழ்க்கைக் குறிப்பு
கொழும்பு ஜம்பட்டா வீதியில் முத்து முஹம்மத், நூருல் ஹஃபீலா தம்பதியினரின் புதல்வராக பிறந்த இவர், கொழும்பு சாஹிரா கல்லூரியின் பழைய மாணவராவார். இவரின் பாரியார்: நூர் மினசா, மகள்: பாத்திமா அஞ்ஜானா, மகன்: அசீம் அகமது.
இலக்கிய ஆர்வம்
சிறு வயது முதலே இவர் இலக்கிய ஆர்வமிக்கவராக காணப்பட்டார். முதலாக்கம் 1950களின் ஆரம்பத்தில் வீரகேசரி ‘பாலர் வட்டாரத்’தில் ‘பால்காரன்’ என்ற குட்டிக் கதையாக பிரசுரமானது. அதைத் தொடர்ந்து ‘தினகரன் பாலர்’ கழகத்தில் பல கதைகள் எழுதியுள்ளார். ‘சுதந்திரனி’ல் சில ஆய்வுக் கட்டுரைகளையும்;. இலங்கை வானொலியில் வானொலி மாமாவினால் சாவகச்சேரி எஸ். சரவணமுத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பல ஆக்கங்களையும் எழுதி நேரடியாகப் பங்குபற்றியும் உள்ளார். இதுவரை 100க்கும் மேற்பட்ட கதைகளையும், 1000க்கு மேற்பட்ட கட்டுரைகளையும் இலங்கை இந்திய தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார்.
பத்தி எழுத்தாளர்
- தினகரனில் “கண்டதுண்டா கேட்டதுண்டா||.
- தினகரனில் ‘லைட் ரீடிங்’
எழுதியநூல்கள்
மானாமக்கீன் 1980ஆம் ஆண்டு முதல் 30 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
- ஆடு தன் ராணி – முதலாம் பதிப்பு: 1980 ஏப்ரல், வெளியீடு: அஸ்டலட்சுமி வெளியீட்டகம்,
- ஆடும் ராஜா – முதலாம் பதிப்பு: 1981 மே, வெளியீடு: அஸ்டலட்சுமி வெளியீட்டகம்,
- கமல் - அகில இந்திய சிறந்த நடிகர் – முதலாம் பதிப்பு: 1983 அக்டோபர், வெளியீடு: அஸ்டலட்சுமி வெளியீட்டகம்,
- இலண்டன் ரயில் கொள்ளை – முதலாம் பதிப்பு: 1990 சூன், வெளியீடு: அஸ்டலட்சுமி வெளியீட்டகம்,
- லைட்ரீடிங் - முதலாம் பதிப்பு: 1994 ஏப்ரல், வெளியீடு: புரவலர் ஹாசிம் உமர்
- லைட்ரீடிங் (2ம் பாகம்) – முதலாம் பதிப்பு: 1995 பெப்ரவரி, வெளியீடு: நவமணிப் பதிப்பகம்
- பேனாமுனையில் அரை நூற்றாண்டு – முதலாம் பதிப்பு: 1995 ஒக்டோபர், வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
- இளைய தலைமுறையினருக்கு இனிக்கும் இஸ்லாமிய கதைகள் – முக்தார் -ஏ. முஹம்மத் (தொகுப்பாசிரியர்: மானா. மக்கீன்) - முதலாம் பதிப்பு: 1996 மே, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
- முஸ்லிம் டைஜஸ்ட் – முதலாம் பதிப்பு: 1996 மார்ச், வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
- என்னைக் கேளுங்கோ – முதலாம் பதிப்பு: 1996 ஏப்ரல், வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
- இதழியல் முன்னோடி எங்கள் பாரதியார் – முதலாம் பதிப்பு: 1997, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
- 'ஜெயில்'லலிதா சிப்ஸ் – முதலாம் பதிப்பு: 1997, வெளியீடு: அஸ்டலட்சுமி வெளியீட்டகம்
- மானா மக்கீன் கதை மலர்கள் – முதலாம் பதிப்பு: 1997. வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
- என் நினைவில் ஒரு கவிஞர் – முதலாம் பதிப்பு: 1997, வெளியீடு: அய்யூப் இல்லம்
- இரு சமூகங்கள் இரு கண்கள் – முதலாம் பதிப்பு: 1997, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
- இலங்கை கீழக்கரை இனிய தொடர்புகள் – முதலாம் பதிப்பு: 1998, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
- இந்திய இலங்கை எழுத்தாளர்களின் ஈகைப்பெருநாள் கதைகள் - முதலாம் பதிப்பு: 1998
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
- இந்திய இலங்கை எழுத்தாளர்களின் தியாகத் திருநாள் கதைகள் – முதலாம் பதிப்பு: 1998
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
- நீடூர்- நெய்வாசல் நெஞ்சங்கள் – முதலாம் பதிப்பு: 1999, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
- கீழக்கரைப் பண்பாட்டுக் கோலங்கள் – முதலாம் பதிப்பு: 2000 டிசம்பர், வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
- வரலாற்றில் இலங்கையும் காயல்பட்டினமும் – முதலாம் பதிப்பு: 2001, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
- இலங்கை – முதலாம் பதிப்பு: 2000, வெளியீடு: குட்புக்ஸ் பப்ளிகேசன்ஸ்
- சிறுவர் பாலியல் கொடுமைகள் – முதலாம் பதிப்பு: 2002 , வெளியீடு: அஸ்டலட்சுமி பதிப்பகம்
- இலங்கை கண்டகுமரி – முதலாம் பதிப்பு: 2003, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
- வாழும்பொழுதே வாழ்த்துவோம் – முதலாம் பதிப்பு: 2003 சூன்
- வள்ளல் ஹபீபு முகம்மது அரசர் – முதலாம் பதிப்பு: 2004, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
- ஒரு முண்டாசுக் கவிஞரின் முஸ்லிம் நேசம் – முதலாம் பதிப்பு: 2005, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
- நீடூர் காமராஜர் ஜுபைர் பாய் – முதலாம் பதிப்பு: 2006, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
- தமிழுக்கு முதல் புதினம் கிழக்கரையிலிருந்து – முதலாம் பதிப்பு: 2007 மே, வெளியீடு: ஹாஜி ஏ.ஜீ.ஏ.ரிஃபாய் கீழக்கரை
- முத்தான முத்துப்பேட்டை – முதலாம் பதிப்பு: 2007 டிசம்பர், வெளியீடு: றஹ்மத் அறக்கட்டளை, சென்னை 4
கலைக் கழக இஸ்லாமிய நுண்கலைக்குழு
கலை - இலக்கியத்துறை சம்பந்தமான அரசு நியமனங்களில் 1969இல் இலங்கைக் கலைக் கழக இஸ்லாமிய நுண்கலைக்குழு உறுப்பினராகவும், பின்பு 1977இல் அதேகுழுவின் செயலாளராகவும் நியமனம் பெற்றார். 1978ல் கலைக் கழக நாடகக்குழு அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டார்;. 1992ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் திரைப்பட, நாடகத் தணிக்கைசபை அங்கத்தவராகப் பணியாற்றியுள்ளார்.
நாடகங்கள்
புகழ்பூத்த ஆங்கில நாடகங்களான ‘டயல் எம் போர் மர்டர்’, ‘விட்னஸ் போ த பிரசிகியூசன்’, ‘நொட் இன் த புக்’ நாடக தமிழாக்கம் செய்து தனது புதுமை அரங்கின் மூலம் (Modern Stage) அரங்கேற்றியுள்ளார்.
பெற்ற விருதுகள்
- ‘தாஜுல் உலூம்' - 1991 இலங்கை முஸ்லிம் கலாசார அமைச்சு
- ‘தமிழ் மணி' - 1992 இலங்கை இந்துசமயää கலாசார அமைச்சு
- ‘எழுத்து வேந்தன்' - 1994 தமிழ்நாடு முஸ்லிம் பத்திரிகையாளர் சங்கம்.
- ‘தமிழ்மாமணி' - 1994 தமிழ்நாடு, இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகம்.
- ‘தமிழ்க் குமரன்'- 1994 அனைத்திலங்கை எம்.ஜி.ஆர் மன்றம்.
- ‘முத்தமிழ் வித்தகர்'- 1990 உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்.
- ‘தமிழ்காவலன்' - 1996 தாய்லாந்து தமிழ்ப்பண்பாட்டுக் கழகம்.
- ‘ஆய்வு இலக்கியச்சுடர்'- 1999 சென்னை ராத்திபு ஜலாலிய்யா மையம்.
- ‘இலக்கிய சிரோமணி' - 1999 மலேசியா, கவிஞர் மன்றம்.
- ‘தீன்வழிச் செம்மல்’- 2003 குளச்சல் இஸ்லாமிய இளைஞர் சங்கம்.
- ‘கலாபூசணம்' - 2004 இலங்கை அரசு தேசிய விருது.
- ‘தேசத்தின் கண்'- 2005 இலங்கைப்பிரதமர் சாகித்திய விருது.
- ‘ஆய்வுத்தமிழ் ஆற்றுனர் - 2007 உலகத் தமிழுறவு பண்பாட்டு மன்றம். சென்னை.
- ‘இலக்கிய நிறைமதி' - 2007 ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி.
பொற்கிழிகள்
- தமிழ் நாடு, அய்யம்பேட்டை, 14வது அல்-குர்ஆன் மாநாடு - 1993
- தமிழ்நாடு, சென்னை வி.ஜி.பி. சந்தனம்மாள் அறக்கட்டளை- 1993