மறை. திருநாவுக்கரசு

மறை. திருநாவுக்கரசு (12 ஆகத்து 1907 - 1 செப்டம்பர் 1983) இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் சிறை சென்றவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளாரின் மகன். அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக எழுதி வெளியிட்டவர்.

மறை. திருநாவுக்கரசு
இயற்பெயர்/
அறியும் பெயர்
மறை. திருநாவுக்கரசு
பிறந்ததிகதி 12 ஆகத்து 1907
இறப்பு 1 செப்டம்பர் 1983
அறியப்படுவது எழுத்தாளர்

இளமையும் கல்வியும்

பள்ளியில் படிக்கும் காலத்தில் இளைப்பிருமல் நோய் திருநாவுக்கரசைத் தாக்கியது. அவருடைய தந்தை மறைமலை அடிகள் அறிதுயில் மருத்துவம் மூலம் அந்தத் தீராத நோயைக் குணப்படுத்தினார். தமக்குப்பிறகு தம் புகழை நிலை நிறுத்துவார் என்று அடிகள் நம்பினார். தந்தையின் விருப்பமும் எண்ணமும் நிறைவேறும் வகையில் மறை திருநாவுக்கரசு திருவையாற்றில் தமிழ்க் கல்லூரியில் படித்து புலவர் பட்டம் பெற்றார். (1926–1931).

பணிகள்

சென்னை நுங்கம்பாக்கம் நகராண்மை உயர்நிலைப் பள்ளியில் 1932 முதல் 1938 வரை தமிழாசிரியராகவும், நெல்லைச் சீமையில் குலசேகரன் பட்டினம் திருவள்ளுவர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1949 முதல் 1952 வரை தமிழாசிரியராகவும், தூத்துக்குடி வ. உ. சி. கல்லூரியில் 1952 முதல் 1967 வரை தமிழ் விரிவுரையாளராகவும் பணி புரிந்து சூன் 12, 1967 இல் பணி ஓய்வு பெற்றார்.

பொது வாழ்க்கை

1937இல் மாணவர்களின் மீது இந்தியைக் கட்டாயமாகத் திணிக்கும் வகையில்அரசு சட்டம் இயற்றியபோது தமிழகத்தில் பெரும் போராட்டம் ஏற்பட்டது. அப்போராட்டத்தில் மறை திருநாவுக்கரசு ஈடுபட்டார். 1938 இல் இந்தி எதிர்ப்புப் போரில் சிறைப்பட்டார். பெரியார், அண்ணாதுரை ஆகியோருடன் இவர் சிறையில் இருந்தார். மறை திருநாவுக்கரசு சிறையிலிருந்து விடுதலை ஆனதும் அவருடைய மனைவி ஞானம்மாள் தம் ஐந்து அகவை மகனுடனும் ஐந்து மாதக் கைக்குழந்தையுடனும் இந்தியை எதிர்த்து மறியல் செய்து சிறை சென்றார். ஆறுமாத சிறை வாழ்வு முடிந்து வெளிவந்தவுடன் ஐந்து மாதக்குழந்தை இறந்தது.

மறை திருநாவுக்கரசு தேசியக் காங்கிரசில் உறுப்பினர்; ஒரு தீவிர காந்தியவாதி. காந்தியடிகள் தொடங்கிய அறப் போராட்டத்தில் அரசை எதிர்த்து மேடைகளில் பேசினார். திரு. வி. கவுடன் தமிழகம் முழுக்கப் பயணம் செய்து இந்திய விடுதலைக்காக உரிமைக் குரல் கொடுத்தார். அதனால் 1941 சனவர் 30 முதல் ஓராண்டு சிறையில் இருந்தார்

சிவநெறி, நாயன்மார்களின் வரலாறு, அவர்களின் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டு சொற்பொழிவுகள் செய்தார். பர்மா, மலேசியா, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்து சமயச் சொற்பொழிவுகளை ஆற்றினார். சேக்கிழார் திருப்பணிக் கழகத்தைத் தொடங்கி 1942 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரை சேக்கிழார் விழாவைக் குன்றத்தூரில் நடத்தி பெரியபுராணத்தின் மேன்மையைப் பரப்பினார். 1950இல் சேக்கிழார் விழா நடத்தும் வேளையில் தம் தாயார் இறந்ததால் சுடுகாட்டில் தாயாரின் உடலை ஓடோடி வந்து பார்த்துவிட்டு மீண்டும் அவ்விழாவின் ஏற்பாடுகளைச் செய்ய முனைந்து ஈடுபட்டார்.

எழுதிய நூல்கள்

  • தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள் வரலாறு (1959, 2013), (968 பக்கங்கள் கொண்ட இந்நூலுக்கு அரசு பரிசு வழங்கியது)
  • இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?
  • சைவ மத வினா விடை.
  • நீலாம்பிகை அம்மையார் வரலாறு.
  • மறைமலையடிகள் வரலாறு சுருக்கம்.[1]
  • பெரியபுராண ஆய்வுரை அப்பர் (1972)
  • பெரியபுராண ஆய்வுரை சுந்தரர் (1973)
  • பெரியபுராண ஆய்வுரை சம்பந்தர் (1979)-தமிழக அரசு 1982இல் முதல் பரிசு வழங்கியது.
  • பெரியபுராண ஆய்வுரை அறுபதடியார் (1975)
  • மாணிக்கவாசகர் வரலாற்று ஆய்வுரை (1984)-வெளியீடு மறை.தாயுமானவன்.
  • மறைமலையடிகளார் நாள்குறிப்பு (1988)-வெளியீடு மறை.தாயுமானவன்.
  • சைவ மத வினா விடை ஆங்கிலப் பெயர்ப்பு நூலும் வெளிவந்துள்ளது.

பெற்ற பட்டங்கள்

  • 1951இல் சித்தாந்த தினகரன் என்று தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை வழங்கியது.
  • 1956 இல் திருமுறைச் செல்வர் என்று மதுரை ஆதீனம் வழங்கியது.

மேற்கோள் நூல்

  • தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலைஅடிகளார்

ஆசிரியர் --மறை தி.தாயுமானவன்,( மறை திருநாவுக்கரசின் மகன்) பதிப்பு: திசம்பர் 2009

ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=மறை._திருநாவுக்கரசு&oldid=5448" இருந்து மீள்விக்கப்பட்டது