மருது (ஓவியர்)

டிராட்ஸ்கி மருது (Trotsky Marudu, பிறப்பு: ஆகத்து 12, 1953 புகைப்படத்திற்கு நன்றி கீற்று[1]) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓவியரும், இயங்குபடக் கலைஞரும், திரைப்பட சிறப்புத் தோற்ற இயக்குநரும் ஆவார்.

மருது (ஓவியர்)
மருது (ஓவியர்)
இயற்பெயர்/
அறியும் பெயர்
மருது (ஓவியர்)
பிறந்ததிகதி ஆகத்து 12, 1953
அறியப்படுவது ஓவியர்
இயங்குபடக் கலைஞர்

கலைப் பணி

டிராட்ஸ்கி மருது கோட்டோவியங்களிலும், கணிப்பொறி வரைகலையிலும் முன்னோடியாகக் கருதப்படுபவர். 1987 வாக்கிலேயே மரபார்ந்த இயங்குபட வேலையைச் செய்யத் தொடங்கியவர்[2].

உலகக் காண்பியல் தளத்தில் தமிழ் அடையாளத்தை முதன்மையாகப் பதிவு செய்தவர்களில் ஒருவராகவும், வெகுமக்கள் ஊடகங்களில் செயல்பட்டு நவீன ஓவியத்தைக் கொண்டுசென்றவராகவும், காண்பியக்கலை வெளிப்பாட்டிற்குக் கணினியைப் பயன்படுத்தியதில் முன்னோடியானவராகவும், இளங்கலைஞர்களை இயங்குபடத் துறையில் ஊக்கப்படுத்தி வளர்த்தவராகவும் கருதப்படுகிறார்.[3]

சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் மருது படித்தபோது அந்நாளில் கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியின் முதல்வராக இருந்த சிற்பி தனபாலுடன் அறிமுகம் ஏற்பட்டது. பின்னாட்களில் அவர் மருதுவுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். கல்லூரியின் மூத்த மாணவரான ஓவியர் ஆதிமூலத்துடன் சேர்ந்து வெகுமக்கள் இதழ்களில் சமகால ஓவியங்களைப் புகுத்தினார். மங்கையர் மலர், குமுதம் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியுள்ளார். சென்னையில் உள்ள நெசவாளர் சேவை மையத்தில் ஆடை வடிவமைப்பாளராகவும் சில காலம் பணியாற்றினார்.[1][2]

தேவதை, சாசனம், சரியான ஜோடி, முகம், அசுரன், ராஜகாளியம்மன், பாளையத்தம்மன், நாகேஸ்வரி, நைனா உள்ளிட்ட முப்பத்தைந்திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் கலை/ சிறப்புத்தோற்ற இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். அவ்வை, ஏகலைவன், மணிமேகலை உள்ளிட்ட நவீன நாடகங்களுக்கு அரங்கம், ஆடைகளை வடிவமைத்துள்ளார்.[1][4][5]

’’பேராண்மை’’ திரைப்படத்தில் விஞ்ஞானி வேடமேற்று நடித்தவர்,’’வாழ்த்துக்கள்’’ திரைப்படத்தில் நடிகர் மாதவனுக்கு அப்பாவாக கவுரவ வேடமேற்று நடித்தார்.

பல்வேறு தமிழ் நூல்களுக்கு, பழங்காலச் சூழலையும் வீரர்களின் படங்களையும் வரைந்தவர். இலங்கையின் விடுதலைப் புலிகளுக்கும் தமிழக வீர வரலாற்றுச் சின்னங்களை வரைந்திருக்கிறார்.[6] உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், ஊர்வலக் குழுவில் உறுப்பினராய் இடம்பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

மிகச் சிறந்த ஓவியர்களில் ஒருவரும், தமிழுக்கு பெருமை சேர்த்தவருமான ’’ட்ராட்ஸ்கி மருது’’ மதுரையில் பிறந்தவர். மதுரை நகரில் உள்ள கோரிப்பாளையம் இவரது பூர்வீகம் ஆகும். இவருக்கு ரத்தினம் என்ற மனைவி உள்ளார்.

இவரது தந்தை மருதப்பன் ஒரு டிராட்ஸ்கியவாதி ஆவார். அவரே மருதுவுக்கு சால்வதோர் தாலீ, பிகாசோ போன்ற கலைஞர்களைச் சிறுவயதிலேயே அறிமுகப்படுத்தியதாகவும், கையால் வரையப்பட்ட நாட்டுத் தலைவர்களின் படங்களும், பல்வேறு நூல்களும் நிரம்பியதாக அவரது வீடு திகழ்ந்ததாகவும் மருது குறிப்பிட்டுள்ளார். பாகப்பிரிவினை, பாவ மன்னிப்பு, ‘’பாசமலர்’’ பதிபக்தி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எம். எஸ். சோலைமலை இவரது தாத்தா. எம்.எஸ்.சோலைமலையின் மகளும், இவரது தாயாருமான திருமதி. ருக்மணி மருதப்பன் திரைத்துறை சார்ந்த ஈடுபாட்டை இவருக்கு ஊட்டினார். கோயில்கள், திருவிழாக்கள், இசைநாடகம் என்று அரசியல்ரீதியாகவும், பண்பாட்டுரீதியாகவும் திகழும் மதுரையின் நாட்டுப்புற மரபு தம் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.[2]

மதுரை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், சென்னையில் உள்ள அரசு கவின்கலைக் கல்லூரியில் பட்டய, பின்பட்டயப் படிப்புகளையும் படித்தவர். புது தில்லியில் கல்லச்சுக் கலை, உருப்பொறித்தல் ஆகியவற்றில் வரைகலைப் பயிற்சியும் பெற்றவர்.[1][2]

நூல்கள்

வாளோர் ஆடும் அமலை

தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்படும் தமிழ் அரசர்களின் சிம்மாசனம், உடையலங்காரம் போன்ற கூறுகள் உண்மையில் மராத்திய சினிமாவில் காட்டப்பட்ட மொகலாய, விஜயநகர அரசர்களுடையவை என்ற ஆதங்கத்தோடு, இலக்கியத்தையும், வரலாற்றையும் ஆய்வு செய்து தமிழ் மரபுக்கேற்ப வரையப்பட்ட 40 தமிழ் மன்னர்களைப் பற்றிய படங்களும் தகவல்களும் அடங்கிய தொகுப்பு.[2]

கார்டூனாயணம்

மருதுவின் வடிவமைப்பில், எம். எஸ். எஸ். பாண்டியன், வீ. எம். எஸ். சுபகுணராஜன், டிராட்ஸ்கி மருது ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்துள்ள நூல் இதுவாகும். அண்ணாவைப் பற்றிய கேலிச்சித்திரங்களும், சித்திரத்தொகுப்புகளும் அடங்கியது.

கோடுகளும் வார்த்தைகளும்

ஓவியங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு

குழந்தைகளுக்கான ஓவியங்கள்

Line and Circle மற்றும் Look, the Moon! ஆகியவை குழந்தைகளுக்காக இவர் வரைந்த ஓவியங்களின் தொகுப்புகளாகும். Line and Circle என்ற நூல் 27 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.[2][3]

டிராட்ஸ்கி மருது குறித்த நூல்

காலத்தின் திரைச்சீலை - ட்ராட்ஸ்கி மருது என்பது ஓவியர் மருது பற்றி தமிழ் அறிவுலக ஆளுமைகள், அவரது நெருங்கிய உறவினர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துக்களும், மருதுவின் பேட்டியும் அடங்கிய தொகுப்பு நூலாகும். அகநி பதிப்பகம் வெளியிட்ட இந்நூலை கவிஞர் அ. வெண்ணிலா தொகுத்துள்ளார்.

இவரது விருப்பத் துறைகள்

  • தமிழ் ஓவிய வரலாறு
  • இந்திய வரைகதை (காமிக்ஸ்) வரலாறு
  • சுவரோவியங்கள்
  • சிற்பங்கள்
  • நெசவு
  • திரைப்படம்

விருதுகள்

1978ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த ஓவியர் விருதினைப் பெற்றார். 2007ஆம் ஆண்டு கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் இவருக்குப் பெரியார் விருதினை வழங்கியுள்ளது.[5] 2011இல் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அவருக்குத் "தமிழ்த் தேசிய புகழொளி" விருதினை வழங்கியது.

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 "தன்விவரக் குறிப்பு" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304223957/http://trotskymarudu.com/page2.html. பார்த்த நாள்: அக்டோபர் 2, 2015. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 T. Saravanan (செப்டெம்பர் 13, 2012). "Drawing attention". தி இந்து (ஆங்கிலம்). http://www.thehindu.com/features/friday-review/art/drawing-attention/article3893322.ece. பார்த்த நாள்: அக்டோபர் 2, 2015. 
  3. 3.0 3.1 "கார்டூனாயணம்" நூலில் உள்ள ஆசிரியர் குறிப்பு. சென்னை: கயல்கவின் புக்ஸ். 2009. பக். 269. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-909922-4-4. 
  4. "பேச்சாளர் அறிமுகம், இந்து இலக்கிய விழா 2015". தி இந்து (ஆங்கிலம்) இம் மூலத்தில் இருந்து 2015-01-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150107202103/http://www.thehindulfl.com/speakers/m-trotsky-marudu-painter-illustrator. பார்த்த நாள்: அக்டோபர் 2, 2015. 
  5. 5.0 5.1 "பெரியார் விருதுபெற்றோரின் வாழ்க்கைக் குறிப்பு". விடுதலை இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305104248/http://www.viduthalai.in/page5/5609-2011-03-17-10-03-54.html. பார்த்த நாள்: அக்டோபர் 2, 2015. 
  6. மருதுவின் பேட்டி, ஆனந்த விகடன், 30.10.13

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மருது_(ஓவியர்)&oldid=7008" இருந்து மீள்விக்கப்பட்டது