மயிலங்கூடலூர் பி. நடராசன்

மயிலங்கூடலூர்
பி. நடராசன்
P.Nadarasan Sir 2.jpg
பிறப்பு 14-10-1939
மயிலங்கூடல்,
யாழ்ப்பாணம்,
இலங்கை
இறப்பு 12-05-2022
(அகவை 82)
நல்லூர்
நாயன்மார்கட்டு
பணி ஆசிரியர்
தேசியம் இலங்கைத் தமிழர்,
அறியப்படுவது பத்திரிக்கையாளர்கள்
தமிழறிஞர்,
கவிஞர்,
எழுத்தாளர்


மயிலங்கூடலூர் பி. நடராசன் (14 அக்டோபர் 1939 - 12 மே 2022) ஈழத்துத் தமிழறிஞரும், கவிஞரும், எழுத்தாளரும், ஆசிரியரும் ஆவார்.[1] சிறுவர் இலக்கியத்தில் பெரும் பங்காற்றியவர். இலக்கியம், வரலாறு, அறிவியல், கல்வியியல் சார்ந்து பல கட்டுரைகளை ஆடலிறை, செந்தூரன், பொய்கையார், காங்கேசன், கூத்தன், நடராஜ மைந்தன், திருப்பெருந்துறை இறை எனப் பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.[2]

வாழ்க்கைக் குறிப்பு

நடராசன் 1939 அக்டோபர் 14 இல் யாழ்ப்பாணத்தின் வடக்கே மயிலங்கூடல் என்ற ஊரில் எட்டு பேர் கொண்ட குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். ஆரம்பக் கல்வியை இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம், பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலை, இளவாலை புனித என்றியரசர் கல்லூரி ஆகியவற்றில் கற்றார். இடைநிலைக் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் கற்றார். தமிழார்வம் காரணமாக பண்டிதர் செ. கதிரேசர்பிள்ளை, விழிசிட்டி பண்டிதர் வே. சங்கரப்பிள்ளை ஆகியோரிடம் இலக்கணம் பயின்று, மல்லாகத்தில் பண்டித வகுப்பில் சேர்ந்து கற்றார். பால பண்டிதர் கோதனையில் சித்தியடைந்தார். அதன் பின்னர், வவுனியா வண்ணான் சின்னக்குளம் என்ற இடத்தில் ஒரு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையை ஆரம்பித்து நடத்தி வந்தார். அதன் பின்னர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சியும் எடுத்துக் கொண்டார். 1985 இல் யாழ்ப்பாணம் ஆசிரிய வள நிலையத்துக்குப் பொறுப்பாகப் பணியாற்றினார்.

இவர் கவிதைகளும், சிறுவர் பாடல்களும் எழுதினார். ஆங்கில சிறுவர் பாடல்களை மொழியாக்கம் செய்தார். இவற்றை ஆடலிறை சிறுவர் பாடல்கள், ஆடலிறை குழந்தைப் பாடல்கள் என இரு தொகுதி நூல்களாக வெளியிட்டார். பண்டித வகுப்பில் படித்த வேளை 'பண்டிதம்' என்ற பெயரில் கையெழுத்துச் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தார். பலாலி ஆசிரிய கலாசாலையில் 'சுடர்' அறிவியல் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தார். தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தில் பணியாற்றிய போது, அந்நிலையத்தின் ஆங்கில செய்தி ஏடான FWC News Letter இன் ஆசிரியராக 1978 முதல் 1984 வரை இருந்துள்ளார். தெல்லிப்பழை கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் மறுமலர்ச்சிக் காலம்-இலக்கியச் சிறப்பிதழ் என்ற நூலை வெளியிட்டார். 1971 முதல் 1976 வரை 'மகாஜனன்' இதழ்களின் பதிப்பாசிரியராகவும் இருந்துள்ளார். 1977-இல் முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் சார்பில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, சு. வித்தியானந்தன், அ. சண்முகதாஸ், நா. சுப்பிரமணியன், க .சொக்கலிங்கம் ஆகியோரின் தமிழியல் ஆய்வு நூல்களை பதிப்பித்தார்.

மறைவு

மயிலங்கூடலூர் நடராசன் நல்லூர் நாயன்மார்கட்டில் உள்ள அவரது இல்லத்தில் 2022 மே 12 அன்று காலமானார்.

மேற்கோள்கள்

  1. "மயிலங்கூடல் பி.நடராசன்". Archived from the original on 2022-08-11. பார்க்கப்பட்ட நாள் 2022-05-12.
  2. நேர்காணல்: மயிலங்கூடலூர் பி.நடராஜன்