மனோன்மணி (திரைப்படம்)
இது மனோன்மணி திரைப்படத்தைப் பற்றிய கட்டுரை. மனோன்மணி எழுத்தாளர் குறித்து படிக்க மனோன்மணி (எழுத்தாளர்)
மனோன்மணி | |
---|---|
இயக்கம் | டி. ஆர். சுந்தரம் |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் |
கதை | பி. என். சுந்தரம்பிள்ளை, டி. வி. சாரி |
இசை | டி. ஏ. கல்யாணம், கே. வி. மகாதேவன் |
நடிப்பு | பி. யு. சின்னப்பா செருகளத்தூர் சாமா டி. எஸ். பாலையா டி. ஆர். ராஜகுமாரி |
விநியோகம் | சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் |
வெளியீடு | நவம்பர் 7, 1942 |
நீளம் | 19000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மனோன்மணி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாபநாசம் ராஜகோபாலய்யர், எஸ். வேல்சாமி கவி ஆகியோரின் பாடல்களுக்கு கல்யாணம், கே. வி. மகாதேவன் ஆகியோர் இசையமைத்திருந்தனர். கே. வி. மகாதேவன் இசையமைத்த முதல் தமிழ்த் திரைப்படம் இதுவாகும்.[1]
திரைக்கதை
தத்துவப் பேராசிரியரும் புலவரும் திருவிதாங்கூர் அரசு அதிகாரியுமான ராவ்பகதூர் பெ. சுந்தரம் பிள்ளை (1855-1897) 1892 இல் எழுதிய மனோன்மணீயம் என்ற நூலைத் தழுவி இப்படத்துக்கான கதை எழுதப்பட்டது.[1][2] டி. வி. சாரி திரைக்கதைக்கான வசனத்தை எழுதினார்.[2]
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
புருசோத்தமன் (பி. யூ. சின்னப்பா) சேரநாட்டை ஆண்டு வருங்காலத்தில், அவனின் பகைவனான பாண்டிய மன்னன் சீவகன் (கே. கே. பெருமாள்) தனது மந்திரி குடிலனின் (ஆர். பாலசுப்பிரமணியம்) சதியாலோசனைப்படி, திருநெல்வேலியைத் தலைநகராகக் கொண்டு, தனது மகள் மனோன்மணியுடன் (டி. ஆர். ராஜகுமாரி) குடிலனின் கைப்பொம்மையாக வாழ்ந்து வருகிறான். பாண்டியனின் நன்மையை விரும்பும் குலகுரு சுந்தரமுனிவர் (செருகளத்தூர் சாமா) அவனுக்குப் பலவகையிலும் துணையாக இருந்து வருகிறார். மனோன்மணி கனவில் சேர மன்னனைல் கண்டு காதல் கொள்ளுகிறாள். அதுபோலவே சேரனும் மனோன்மணியைக் கனவிற்கண்டு காதல் கொள்கிறான். ஆனால் ஒருவருக்கொருவர் இன்னார் யார் என்று தெரியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் சுந்தரமுனிவரின் ஆலோசனைப்படி, மனோன்மணியைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சேரனுக்குத் தூதனுப்ப முடிவு செய்யப்படுகிறது. ஆனால், குடிலனின் வஞ்சக யோசனைப்படி, அவனின் மகன் பலதேவனை (டி. எஸ். பாலையா) தூதனாக அனுப்புகிறார்கள். அவன் அங்கு சென்று, சேரனைத் தூண்டிவிட்டு சண்டைக்கிழுக்கிறான்.[2]
போர் மூண்டது. முதல் நாள் போரில் பாண்டியனின் படை தோல்வியடைகிறது. பாண்டியனின் சேனாதிபதி நடராஜனால் (டி. ஆர். மகாலிங்கம்) பாண்டிய மன்னன் சீவகன் காப்பாற்றப்படுகிறான். மனோன்மணியை சுரங்க வழியில் கொண்டுபோவதென சுந்தரமுனிவர் கூறிய யோசனையை குடிலன் மாற்றி அப்பொழுதே திருமணம் செய்தனுப்ப முடிவு செய்து மாப்பிள்ளையாகத் தனது மகன் பலதேவனை நிச்சயிக்க, ஏற்பாடுகள் நடக்கிறது.[2]
சுரங்கவழியைக் கண்டுவரச்சென்ற குடிலன், தூரத்தில் சேரனைக்கண்டு, அருகிற்சென்று, பாண்டியனைப் பிடித்துக் கொடுப்பதாகவும், இந்நாட்டைத்தனக்கு முடிசூட்டும்படியும் வேண்ட, சேரன் வெற்றியை வஞ்சக வழியில் பெறமனமில்லாமல், குடிலனை விலங்கிட்டு அச்சுரங்க வழியாகவே பாண்டியன் அரண்மனைக்கு அழைத்து வருகிறான். மணக்கோலத்திலிருக்கும் மனோன்மணி, தன் உயிர்ச் சிநேகிதி வாணியுடன் (ஏ. சகுந்தலா) கண்கலங்கி பலதேவனுக்கு மாலையிடும் நேரம், சேரன் அங்கு வருகிறான். மனோன்மணி அவனே தனது கனவில் தோன்றிய காதலனெனக் கண்டு மாலையிடுகிறாள்.[2]
நடிகர்கள்
நடிகர் | பாத்திரம் |
---|---|
பி. யூ. சின்னப்பா | புருசோத்தமன் |
செருகளத்தூர் சாமா | சுந்தரமுனிவர் |
டி. எஸ். பாலையா | பலதேவன் |
ஆர். பாலசுப்பிரமணியம் | குடிலன் |
டி. ஆர். மகாலிங்கம் | நடராஜன் |
கே. கே. பெருமாள் | சீவகன் |
என். எஸ். கிருஷ்ணன் | மணி |
காளி என். ரத்தினம் | சுப்பன் |
எல். நாராயணராவ் | சகடர் |
பி. ஜி. வெங்கடேசன் | உழவன் 1 |
பபூன் சண்முகம் | உழவன் 2 |
எஸ். எஸ். கொக்கோ | வசந்தன் |
டி. ஆர். பி. ராவ் | கந்தன் |
சாண்டோ நடேசம்பிள்ளை | அருள்வரதன் |
எம். ஈ. மாதவன் | மலையாளி |
நடிகை | பாத்திரம் |
---|---|
டி. ஆர். ராஜகுமாரி | மனோன்மணி |
ஏ. சகுந்தலா | வாணி |
டி. ஏ. மதுரம் | செல்லம்மா |
சி. டி. ராஜகாந்தம் | கோமதி |
பி. ஆர். மங்களம் | காந்திமதி |
ஜே. எம். ஜி. சாரதா | செவிலி |
ஜி. சரசுவதி | சண்பகம் |
தயாரிப்பு
பெயர் | பணி |
---|---|
டி. ஆர். சுந்தரம் | இயக்குநர் |
எஸ். வேல்சாமி கவி | உதவி இயக்குநர் |
ராவ்பகதூர் பி. சுந்தரம் பிள்ளை | மூலக்கதை |
டி. வி. சாரி | வசனம் |
பாபநாசம் ராஜகோபாலையர், எஸ். வேல்சாமி கவி |
பாடல்கள் |
இசை | கல்யாணம், கே. வி. மகாதேவன் |
பின்னணி இசை | கல்யாணம் குழுவினர் |
பாடல்கள்
பாபநாசம் ராஜகோபால் ஐயர், வேல்சாமி கவி ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு டி. ஏ. கல்யாணம், கே. வி. மகாதேவன் ஆகியோர் இசையமைத்தனர்.[2]
இல. | பாடல் | பாடியோர் | இராகம்-தாளம் |
---|---|---|---|
1. | தேவி திவ்ய சஞ்சீவி | டி. ஆர். ராஜகுமாரி | - |
2. | காட்சியே நல்ல காட்சியே | டி. ஆர். ராஜகுமாரி, ஏ. சகுந்தலா | - |
3. | என் நெஞ்சமெனும் நஞ்சமலர் செஞ்சுடரே வா | ஏ. சகுந்தலா, டி. ஆர். மகாலிங்கம் | - |
4. | என்னாசைக்கினிய இந்திரன் இவர்தானோ | காளி என். ரத்தினம் | நாட்டியபதம், சங்கராபரணம் |
5. | யாருக்கு வேண்டுவதிங்கே - வீரம் | பி. யு. சின்னப்பா | - |
6. | பாவையே மாரனும் பார்வதிநாதன் | டி. ஆர். ராஜகுமாரி, ஏ. சகுந்தலா | - |
7. | காதல் காதலென நீயேன் சதா கதறுகிறாய் | டி. ஆர். ராஜகுமாரி | - |
8. | கண்டேன் கண்டேன் என் காதல் கனியைக் கண்டேன் | பி. யு. சின்னப்பா, டி. ஆர். ராஜகுமாரி | - |
9. | கண்டது முதல் ஞிங்களே கண்டது | சி. டி. ராஜகாந்தம் | மலையாளம், தெலுங்கு, இந்தி தமிழ் மொழிகளில் |
10. | மோகன மாமதனா - என் ஆசையின் ரூபமெல்லாம் இவனோ | பி. யு. சின்னப்பா, டி. ஆர். ராஜகுமாரி | புன்னகவராளி |
11. | ஊராரின் காசினாலே ஜோராகினோம் | சி. டி. ராஜகாந்தம், காளி என். ரத்தினம் | - |
12. | ஆனந்தம் ஆனந்தமே - பரமானந்தம் | டி. ஆர். ராஜகுமாரி | நடனப் பாடல் |
13. | உந்தனுக்கோர் இணையானவர் உலகிலில்லை | பி. யு. சின்னப்பா, டி. ஆர். ராஜகுமாரி | - |
14. | என் வேந்தா இது கேட்பாய் | செருகளத்தூர் சாமா | - |
15. | ஊன்னு ஒரு வார்த்தை சொல்லம்மா | என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் | - |
16. | வஞ்ச உலக வாழ்வினைக் கண்டால் | மாசிலாமணி | தெருப்பாடகி |
17. | வானமுதே மான் விழியே | பி. யு. சின்னப்பா | - |
18. | பாவி மவே சீமையிலே ஆளை முழுங்கும் பஞ்சமடா | பபூன் சண்முகம், பி. ஜி. வெங்கடேசன் | குடியானவர் பாடல் |
19. | விற்கொடி பறக்கும் எங்கள் வேந்த சேர ராஜனே | குழுவினர் | - |
20. | மன்னன் இவன் யாரோ | டி. ஆர். ராஜகுமாரி | - |
21. | எற்றிப்பகை ஓட்டுவோம் | பாண்டியன் சிப்பாய் குழுவினர் | - |
22. | கூடிக் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் | கே. கே. கிருஷ்ணவேணி | - |
23. | மன்னா நீ பதராதே | செருகளத்தூர் சாமா | கரகரப்பிரியா |
24. | மோகனங்க வதனி - உனையே காணும் பாக்யம் வருமோ | பி. யு. சின்னப்பா | கானடா |
25. | ஆதியிலோர் யானையதே | டி. ஆர். ராஜகுமாரி | - |
26. | அன்பேநிறை சல்லாபம் உன்னாலடைந்த லாபம் | என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் | - |
வரவேற்பு
மனோன்மணி திரைப்படம் ரூ.200,000 செலவில் தயாரிக்கப்பட்டது. அக்காலத்தில் இது மிகப்பெரிய தொகையாகும்.[1][2] இத்திரைப்படத்துக்கான கதாநாயகன், கதாநாயகியைப் பரிந்துரைக்குமாறு தயாரிப்பாளர் டி. ஆர். சுந்தரம் பொதுமக்களிடம் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் கோரிக்கை விடுத்தார். பெரும்பான்மை மக்களின் விருப்புக்கமைய பி. யு. சின்னப்பாவும், டி. ஆர். ராஜகுமாரியும் முக்கிய பாத்திரங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1] திரைப்படமும் வசூலில் பெரு வெற்றி பெற்றது.[1] பி. யு. சின்னப்பாவின் மனைவி ஏ. சகுந்தலா கதாநாயகியின் தோழியாக நடித்தார்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ராண்டார் கை (19 திசம்பர் 2010). "Manonmani 1942". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2013-02-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130203222954/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article961803.ece.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 மனோன்மணி பாட்டுப் புத்தகம், 1942