மதுராபுரி

மதுராபுரி என்பது இலங்கையின் தென் மாகாணத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், பிரசித்திபெற்ற சுற்றுலாத்துறை நகரமுமான வெலிகம நகரின் எல்லையில் ஓடும் பொல்வத்து ஓயா நதியினால் முற்றிலும் சூழப்பட்ட ஒரு அழகிய கிராமம் ஆகும். இது சுமார் 400 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. வெலிகம – அக்குரசை பிரதான நெடுஞ்சாலை இதனை ஊடறுத்தே செல்கின்றது.

மதுராபுரி
CountrySri Lanka
மாகாணம்தென் மாகாணம்
நேர வலயம்Sri Lanka Standard Time Zone (ஒசநே+5:30)
 • கோடை (பசேநே)Summer time (ஒசநே+5:30)

சூழல் - தாவரங்கள்

இங்கும், இதனையண்டிய பகுதிகளிலும் இலங்கைக்கே உரித்தான பல்வேறு விதமான தாவர விலங்கினங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இதர பகுதிகளிற் காண்பதற்கரிதான கின்னை மரங்களும், கிங் மரங்களும், “தயிர்த் தென்னை” மரங்களும் இங்கு நிறைந்துள்ளன.

விலங்குகள்

நீர் நாய்களும், முதலைகளும், பலவித நண்டுகளும், இறால் வகைகளும், ஆற்றுச் சிப்பிகளும் இங்கு காணக் கிடைக்கின்றன. கோடை காலங்களில் அரபிக் கடல் பகுதியிலிருந்து சுறா மீன்கள் பொல்வத்து ஓயாவினுள் ஊடுருவுவதுண்டு.

புவியியல் - காலநிலை

இலங்கையின் ஈர வலயத்தில் அமைந்துள்ளதால் வருடம் முழுவதும் மழை வீழ்ச்சியைப் பெறக்கூடிய இப்பகுதி மிதமான காலநிலையைக் கொண்டுள்ளது.

மண்

மேற்புற மண் முழுவதும் வண்டல் மண்ணாகக் காணப்படும் இக்கிராமத்தில் எங்கு தோண்டினாலும் பல்வேறு விதமான கடல்வாழ் உயிரினங்களினதும் பாறைப் படிவுகளே நிறைந்து காணப்படுகின்றன. இதனால், இப்பகுதியானது ஆதியில் கடல் மட்டத்துக்குக் கீழ் அமைந்திருந்ததெனக் கருதலாம். இங்கு பெறப்படும் நிலத்தடி நீரும் ஓரளவு உவர்ப்புத் தன்மையுள்ளதாகும்.


வெலிப்பிட்டிய பிரதேச செயலக எல்லைக்குள் அமைந்த சுமார் 4000 பேர் வசிக்கும் இக்கிராமமானது இரண்டு கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இதன் மதுராகொட பிரிவில் ஒரு ஜும்ஆப் பள்ளிவாசல் உட்பட இரண்டு பள்ளிவாசல்களும், சிங்கள பௌத்தர்கள் அதிகமாக வாழும் தெனிப்பிட்டிய-மேற்கு பிரிவில் இரண்டு பௌத்த விகாரைகளும் ஒரு சிங்களப் பாடசாலையும் காணப்படுகின்றன.

இங்கு பேச்சு வழக்கிலுள்ள தமிழ்ச் சொற்கள் இதனை அண்டிய பகுதிகளிலுள்ள பேச்சு வழக்கிலிருந்து பெரிதும் மாறுபட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. அவ்வாறே புழக்கடை, தன்னினைவு, குறுணி, பாகம் (தூரம்), பரிகாரி போன்ற சொற்கள் ஏனைய பகுதிகளில் பயன்படுத்தப்படாவிடினும் இங்கு பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.


இங்கு அமைந்துள்ள, கல்வி வளர்ச்சியில் துரித வளர்ச்சி கண்டுவருவது அஸ்ஸபா முஸ்லிம் பாடசாலையாகும். மேலும், சில தனியார் நிறுவனங்களும் இங்கு இலவச கல்விப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் ஒரு அஹதிய்யாப் பாடசாலையும் இங்கு இயங்கி வருவது குறிப்பிடத் தக்கது.

இலங்கை முஸ்லிம் ஆசிரிய முன்னோடி, தமிழிற்சூரியன் த.சா. அப்துல் லதீப் இவ்வூரைச் சேர்ந்தவர்.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=மதுராபுரி&oldid=39524" இருந்து மீள்விக்கப்பட்டது