பெ. சுந்தரம் பிள்ளை
மனோன்மணீயம் பெ. சுந்தரனார் (Manonmaniyam P. Sundaranar, ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) என்பவர் மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர்.[1]
இயற்பெயர்/ அறியும் பெயர் |
மனோன்மணீயம் பெ. சுந்தரனார் |
---|---|
பிறப்புபெயர் | மனோன்மணீயம் பெருமாள் சுந்தரனார் |
பிறந்ததிகதி | 4 ஏப்ரல் 1855 |
பிறந்தஇடம் | ஆலப்புழா, கேரளா, இந்தியா |
இறப்பு | 26 ஏப்ரல் 1897 | (அகவை 42)
பணி | எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
பெற்றோர் | பெருமாள் மாடத்தி அம்மாள் |
துணைவர் | சிவகாமி அம்மாள் |
வாழ்க்கைக் குறிப்பு
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855-ஆம் ஆண்டு சுந்தரனார் பிறந்தார்.[2] இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவருக்குத் தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமி. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1876-ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
பெ. சுந்தரம் பிள்ளை (மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை. மனோன்மணீயம் சுந்தரனார்) (ஏப்ரல் 4 , 1855 - ஏப்ரல் 26, 1897). தமிழறிஞர், தமிழ் வரலாற்று ஆய்வாளர், கல்வெட்டாய்வாளர், அறிவியல் கட்டுரையாளர், நாடக ஆசிரியர், கவிஞர். இவர் எழுதிய மனோன்மணீயம் என்ற நாடகத்தின் காரணமாக இவர் பெயரின் முன்னொட்டாக "மனோன்மணீயம்" அமைந்தது. தமிழக அரசால் தமிழ்நாட்டின் அரசுப்பாடலாக அறிவிக்கப் பட்டுள்ள தமிழ்த்தாய் வாழ்த்தான ’நீராரும் கடலுடுத்த’ பாடல் மனோன்மணீயம் சுந்தரனார் அவர்களால் எழுதப்பட்டது.
முன்னோர்
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் முன்னோர் திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டுப் பகுதியிலிருந்து கேரளம், ஆலப்புழைக்குக் குடியேறியவர்கள். இவர்களின் குடும்பப்பெயர் தெக்கேகரக் குடும்பம். அக்குடும்பத்தில் வந்தவர் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் தாத்தா அர்ஜுனன் பிள்ளை. அவர் துணிவணிகம் செய்து வந்தார். திருவிதாங்கூர் திவான் ராஜா கேசவதாஸ் ஆலப்புழை துறைமுகத்தை உருவாக்கியபோது அங்கே குடியேற்றிய வணிகர்குடிகளில் ஒன்று இது. ( சில நூல்களில் இவர்கள் மதுரையில் இருந்து குடியேறியவர்கள் என்றும், வடக்கேக்கரக் குடும்பம் என்றும் சொல்லப்பட்டுள்ளது)
பிறப்பு
அர்ஜுனன் பிள்ளைன் மகன் பெருமாள் பிள்ளைக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 5 ஏப்ரல் 1855-ல் சுந்தரம்பிள்ளை பிறந்தார். 1878-ல் தாயாரையும், 1886-ல் தந்தையையும் இழந்தார்.
கல்வி
மனோன்மணீயம் சுந்தரனார் தந்தையிடமிருந்து இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். ஆலப்புழா வெர்னாகுலர் பள்ளியில் ஆரம்பக்கல்வி கல்வியும் பயின்றார். இவருடைய ஆசிரியர் திரு பீல் (Mr. Peel) திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியை சேர்ந்த பள்ளியில் சேர்ந்து உயர்நிலை கல்வி பயின்றார். அங்கே பத்தாம் வகுப்பில் முதலிடம்பெற்று உதவித்தொகை வென்றார்.
மனோன்மணீயம் சுந்தரனார் சென்னையில் தங்கி முதுகலைப் பட்டத்திற்காக பயிற்சி எடுத்துக்கொண்டபோது நாகப்பட்டினம் நாராயணசாமி என்பவரிடம் யாப்பெருங்கலக் காரிகை, நன்னூல் ஆகிய நூல்களை கற்றார்.
திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் சேர்ந்த சுந்தரம் பிள்ளை 1876-ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். திருவனந்தபுரத்தில் முதலிடமும் சென்னை பல்கலையில் நாலாவது இடமும் அவருக்குக் கிடைத்தன. கல்லூரியில் அவருக்கு புகழ்பெற்ற ஆசிரியரான ரோஸ் ஆங்கிலம் பயிற்றுவித்தார். 1880-ல் சென்னை பல்கலையில் தத்துவத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1882 முதல் 1885 வரை திருவனந்தபுரத்தில் அரசுப்பணியில் இருந்தபடியே சட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்றார். சட்டப்பேராசிரியர் ஓம்ஸ்பி ( Mr.Ormsby) அவருடைய ஆசிரியர்.
நெல்லையில் ஆசிரியப்பணி ஆற்றும்போது கோடகநல்லூர் சுந்தரம் சுவாமிகளின் மாணவராகி சைவசித்தாந்தமும் யோகப்பயிற்சிகளும் கற்றுக்கொண்டார்.
கல்விப்பணி
1876-ல் திருவனந்தபுரம் மகராஜா கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வி சுந்தரம் பிள்ளைக்கு அணுக்கமானவர்.
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை 1877-ல் இருந்து திருநெல்வேலியில் ஆசிரியராகப் பணியாற்றினார். திருநெல்வேலி ஆங்கில தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலை பின்னர் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார்.
1879-ல் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரிப் பேராசிரியர் ஹார்வியின் அழைப்பின் பேரில் அக்கல்லூரியின் தத்துவ ஆசிரியராக மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை நியமிக்கப்பட்டார். மூன்றாண்டுகள் இடைவெளிக்குப்பின் 1985 முதல் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரி தத்துவப்பேராசிரியராக பணி உயர்வுடன் நியமிக்கப்பட்டு இறுதி வரை அப்பணியில் இருந்தார்.
சென்னை பல்கலைக் கழகத்தின் உயர்கலைக்கழக உறுப்பினர் (Fellow of Madras Univesity) ஆக 1891ல்-நியமிக்கப்பட்டு பணியாற்றினார். பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம், தமிழ், வரலாறு, தத்துவம் ஆகிய பாடங்களுக்குத் தேர்வுநிலை உறுப்பினராகவும் இருந்தார்.
அரசுப்பணி
மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை 1882-ல் திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். 1885 வரை இப்பணியில் இருந்தார்
மணவாழ்க்கை
1877-ல் சிவகாமி அம்மாளை திருமணம் புரிந்தார். ஒரே மகன் நடராஜப் பெருமாள் பிள்ளை. நடராஜன் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். கேரளத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது திரு-கொச்சி மாகாணத்தின் நிதியமைச்சராகவும் இருந்தார். நடராஜன் கேரளத்தில் சிறந்த நிர்வாகி எனப் பெயர் பெற்றவர்.
இலக்கிய வாழ்க்கை
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை திருநெல்வேலியில் பணியாற்றிய காலகட்டத்தில் சைவக்கல்வியிலும் தத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார். சுந்தரம் பிள்ளையின் முதல்நூல் ஆங்கிலத்தில் 1877-ல் வெளிவந்தது. மே 1888-ல் ’சாத்திர சங்கிரகம் அல்லது நூற்றொகை விளக்கம்’ என்னும் நூல் திருவனந்தபுரத்தில் இருந்து வெளிவந்தது. அதுவே அவருடைய முதல் தமிழ் நூல். 1891-ல் மனோன்மணீயம் நாடகம் வெளிவந்தபின் தமிழறிஞர்களிடம் அறியப்பட்டவரானார்.
பாடல்கள்
சுந்தரம் பிள்ளை திருநெல்வேலியில் இருந்தபோது எழுதிய பாடல்கள் 'சிவகாமியின் சரிதம்' என்னும் தலைப்பில் சிறு பிரசுரமாக வந்தன. பின்னர் மனோன்மணீயம் நாடகத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டன. சைவ சித்தாந்தத் தத்துவம் தொடர்பான இப்பாடல்களை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இராமலிங்கத் தம்புரானின் உரையுடன் வெளியிட்டுள்ளது.
’ஒரு நற்றாயின் புலம்பல்’ என்னும் தலைப்பில் அமைந்த இவரது பாடல்கள் விவேக சிந்தாமணியில் (1885) வந்தன. இவை தத்துவார்த்தப் பாடல்கள் வகையைச் சார்ந்தவை. ’பொதுப்பள்ளி எழுச்சி’ என்னும் தலைப்பில் சில பாடல்களை விவேக சிந்தாமணியிலும் (1895) அன்பின் 'அகநிலைப் பாடல்கள்’ என்னும் தலைப்பில் சில பாடல்களை என்ற பத்திரிகையிலும் (1891) வெளியிட்டுள்ளார். பின்னது புனித பவுல் கூறிய அன்பு பற்றிய கருத்தை அடிப்படையாகக் கொண்டது.
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து தமிழகத்தின் அரசுப்பாடலாக அறிவிக்கப்பட்டு பாடப்பட்டு வருகிறது.
அறிவியல், பொது நூல்கள்
சுந்தரம் பிள்ளை எழுதிய 'புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும்' (1892), 'மரங்களின் வளர்ச்சி' (1892), 'ஜீவராசிகளின் இலக்கணம்' (1897) ஆகிய மூன்று அறிவியல் கட்டுரைகள் விவேக சிந்தாமணியில் வெளிவந்தன பின்னர் அவற்றைச் செந்தமிழ் செல்வி வெளியிட்டது. சுந்தரம் பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் சென்னை தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி இதழில் வந்தன. The Ten Tamil Idylls, (1890-1891), Hobbes - The Father of English Ethics (1894-1895), Bentham The Juristic Moralist (1896) என்னும் இக்கட்டுரைகளில் The Ten Tamil Idylls மட்டும் 1957-ல் நூல் வடிவில் வந்தது. ஆங்கில அறிவியலின் தந்தையாகக் கருதப்பட்ட ஹாப்ஸ் பற்றிய செய்திகளைக் கூறுவது Hobbes the Father of English Ethics என்ற கட்டுரை.
இலக்கிய நூல்கள்
சுந்தரம் பிள்ளை எழுதிய 'நூற்றொகை விளக்கம்' என்னும் உரைநடை நூல் 1888-ல் ஆங்கில முகவுரையுடன் வெளிவந்தது. சைவசித்தாந்த நூல் பதிப்புக்கழகம் 1936-ல் இந்நூலை மறுபதிப்பு செய்துள்ளது. நூற்றொகை விளக்கம் 94 பக்கங்களைக் கொண்ட சிறுநூல் தமிழ் உரைநடை வடிவத்தைப் பழைய மரபின்படி 38 சூத்திரங்களில் விளக்குகிறது. ஒரு நூல் எப்படி அமைந்திருக்க வேண்டும்; உரைநடை வடிவம் எத்தகைய பிரிவுகளை உடையது என்பனவற்றை இந்நூல் விளக்குகிறது.
நாடகம்
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை எழுதிய ஒரே புனைவு மனோன்மணீயம் என்னும் நாடகம். 1891-ல் இந்நூல் வெளிவந்தது. இந்நாடகத்தில்தான் தமிழ்நாட்டின் அரசுப்பாடலாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றுள்ளது.
இலக்கிய வரலாற்றாய்வுகள்
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை தமிழிலக்கியத்தின் காலக்கணிப்பை இலக்கியப்பிரதிகள் சார்ந்து வரையறை செய்வதில் முன்னோடி முயற்சிகளில் ஈடுபட்டவர். கே.என். சிவராஜ பிள்ளை , டி.இலட்சுமண பிள்ளை ,எஸ்.வையாபுரிப் பிள்ளை ஆகியோருடன் இணைந்து செயல்பட்டார்.
திருஞானசம்பந்தர் காலம்
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை இலக்கியவரலாற்று ஆய்வுகளுக்காகவே இன்று முதன்மையாக கருதப்படுகிறார். திருஞான சம்பந்தரின் காலகட்டத்தை அவர் கணித்து வரையறை செய்தது முக்கியமாகக் கருதப்படுகிறது. சென்னை கிறிஸ்தவக் கல்லூரி இதழில் இவர் தொடராக வெளியிட்ட Some Milestones in the History of Tamil Literature or The Age of Thirugnanasambandha என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரைகள் மார்ச் 24,1895-ல் திருவனந்தபுரம் ஹார்விபுரத்தில் ஆசிரியராலேயே நூல் வடிவில் வெளியிடப்பட்டது. அந்நூலுக்கு தொல்லியல் ஆய்வறிஞர் வெங்கய்யா முகவுரை எழுதியுள்ளார். இந்நூல் தென்னிந்திய வரலாற்றாராய்ச்சிக் கழகத் தலைவர் டாக்டர் ஹூல்ச் ( Dr Hultszch) என்பவருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி டி.ஏ.சொசைட்டி என்னும் நிறுவனம் மார்ச் 10,1909 அன்று இந்நூலை மறுபதிப்பாக வெளியிட்டது.
பின்னர் அந்நூலை தமிழில் மொழியாக்கம் செய்து மேலும் செய்திகளுடன் விரிவுபடுத்தி திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி என்னும் தலைப்பில் 65 பக்கங்களைக் கொண்ட நூலாக வெளியிட்டார்.
19-ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியக் காலஆராய்ச்சி பற்றி வந்த நூல் இது. எஸ். வையாபுரிப் பிள்ளை இந்நூல் பற்றி "சுந்தரனார் செய்த இந்தக் கால ஆராய்ச்சி பிற்காலத்தில் கிடைத்த கல்வெட்டுகள் வழி உறுதி செய்யப்படுவதுடன் மறுக்க முடியாமலும் உள்ளது" என்கிறார். ஆதிசங்கரர், சம்பந்தரை திராவிட சிசு என்று குறிப்பிட்ட செய்தியை சுந்தரம்பிள்ளைதான் இந்த நூலில் முதலில் கூறுகிறார். திராவிடம் என்னும் சொல் தமிழரைக் குறிக்கப் பயன்பட்டது என்னும் கருதுகோளைத் தமிழ் ஆய்வாளர்களுக்கு எடுத்துக்கொடுத்தவரும் இவர்தான் என ஆய்வாளர் அ.கா. பெருமாள் குறிப்பிடுகிறார்
கால்டுவெல் சம்பந்தர் காலத்து பாண்டிய மன்னனான நின்ற சீர் நெடுமாறன் என்னும் கூன்பாண்டியன் பொ.யு. 1292-ல் மதுரையை ஆண்டவன் எனக் கூறிச் சம்பந்தரை பொ.யு. 13-ஆம் நூற்றாண்டினர் என்கிறார். சி.வை. தாமோதரம் பிள்ளை கூன்பாண்டியன் 2000 ஆண்டுகளுக்கு முந்தியவன் என்றார். அக் கருத்துக்களை மறுத்து வரலாற்றுச் சான்றுகளுடன் காலவரையறை செய்திருக்கிறார் சுந்தரனார்.
சம்பந்தர், இரண்டாம் புலிகேசியைப் போரில் வென்ற சிறுத்தொண்டர் காலத்தவர்; வாதாபியில் நடந்த இப்போர் பொ.யு. 642-ல் நடந்தது. அதனால் சம்பந்தர் பொ.யு 7-ஆம் நூற்றாண்டினர் என்கிறார் சுந்தரம் பிள்ளை. வேறு சான்றுகளையும் கொடுத்துச் சம்பந்தர் காலத்தை நிறுவியுள்ளார். பிற்கால ஆராய்ச்சியாளர்கள் இந்தக் காலத்தின் அடிப்படையில் சம்பந்தர் காலத்துக்கு முன்னரோ பின்னரோ எனக் கணித்து பக்தி இயக்கக்காரர்களின் காலங்களை நிர்ணயித்துள்ளனர்.
பத்துப்பாட்டு திறனாய்வு
சுந்தரம் பிள்ளையின் The Tamil Idylls என்னும் சிறுநூல் பத்துப்பாட்டுப் பற்றிய திறனாய்வு நூல். இது 1890-1892 அளவில் எழுதப்பட்டதாயினும் 1953-ல் தான் நூல் வடிவில் வந்தது. உ.வே.சாமிநாதய்யரின் பத்துப்பாட்டுப் பதிப்பு பற்றிய திறனாய்வுக் கட்டுரை இது . இந்நூலில் சுந்தரம் பிள்ளை சங்ககால நக்கீரரின் காலத்தை ஆய்வுக்கு உட்படுத்துகிறார். முருகாற்றுப்படையைக் காலத்தால் பின் தள்ளியதற்குரிய காரணங்களைத் துல்லியமாக முன்வைக்கிறார்.
வரலாற்றாய்வுகள்
கல்வெட்டாய்வு
சுந்தரம் பிள்ளை முன்னோடியான கல்வெட்டாய்வாளர். கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையுடன் இணைந்து கல்வெட்டாய்வுகளில் ஈடுபட்டார். சில ஆண்டுகள் திருவிதாங்கூர் கல்வெட்டுத் துறையிலும் பொறுப்பு வகித்திருக்கிறார். இவர் நாஞ்சில் நாட்டுப் பகுதியிலும் (சோழபுரம். புரவசேரி) இடநாட்டிலும் (திருவட்டாறு ) கல்வெட்டுகளைத் தேடிக் கள ஆய்வு செய்திருக்கிறார். இவரே படி எடுத்திருக்கிறார். இந்தக் கல்வெட்டுகளின் வழி வேணாட்டு, செய்திகளை முறைப்படித் தொகுத்திருக்கிறார்.
திருவிதாங்கூர் வரலாறு
திருவனந்தபுரத்தில் தொல்லியல் துறையில் 1894 மார்ச் மாதம் 24 ,31 மற்றும் ஏப்ரல் 7 ஆகிய தேதிகளில் சுந்தரம்பிள்ளை ஆற்றிய சொற்பொழிவுகள் Some Early Sovereigns of Travancore என்னும் தலைப்பில் வெளிவந்தன. இதன் இரண்டாம் பதிப்பு 1943-ல் வந்தது. இது நான்கு இயல்களும் மூன்று பின்னிணைப்புகளும் கொண்ட நூல். முதல் மூன்று இயல்களும் வேணாட்டு மன்னர்களின் பட்டியல்களையும் வரலாற்றையும் நான்காம் இயல் திருவிதாங்கூரில் கிடைத்த சில கல்வெட்டுகளையும் கூறுவன. பின்னிணைப்பில் கல்வெட்டு மூலங்களும் சுந்தரம்பிள்ளை எழுதிய விளக்கக் குறிப்பும் உள்ளன.வேணாட்டு அரசர்களின் வரலாற்றை முதல் முறையாக கல்வெட்டுச் செய்திகளின் வழி கணிக்கும் நூல் இது. இந்த நூலுக்காக உ.வே.சாமிநாதையரின் சிலப்பதிகார முதல் பதிப்பை (1892) இவர் பயன்படுத்தியிருக்கிறார். இந்நூல் ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த 9 அரசர்களைப் பற்றிக் கூறுகிறது. Directory of Archaeology என்னும் தொகுப்பு நூலையும் திருவிதாங்கூர் அரசுப் பொறுப்பில் பெ.சுந்தரம் பிள்ளை வெளியிட்டார்.
கொல்லம் காலக்கணிப்புமுறை
திருவிதாங்கூர் உட்பட கேரள வரலாறு கொல்லம் ஆண்டு என்னும் காலக்கணிப்பு கொண்டது. அதன் தோற்றம் மற்றும் வானியல் அடிப்படைகளை மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை விரிவாக ஆராய்ந்தார்.டி.பி.கோபிநாத ராவ் போன்றவர்கள் பொ.யு ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த காலக்கணிப்பு முறை அது என்று கருதினர். அக்கருத்தை மறுத்து அது பொயு 825 ஆம் ஆண்டில் தொடங்குவது என்றும், வட இந்தியாவில் புழக்கத்திலிருந்த சப்தரிஷிமண்டல காலக்கணிப்பு முறையின் இன்னொருவடிவம்தான் அது என்றும் நிறுவினார்
ஆன்மிகம்
குடும்ப மரபாகவே சைவப் பின்னணி கொண்ட சுந்தரம் பிள்ளை இளமையில் சைவசித்தாந்தத்தை கற்றவர். திருவனந்தபுரம் சைவப்பிரகாச சபையை உருவாக்கியவர்களில் ஒருவர். 1885 சித்திரை முதல்நாள் சைவப்பிரகாச சபை திருவனந்தபுரத்தில் மன்னர் ஆதரவுடன் தொடங்கப்பட்டது.1896 தைமாதம் சபைக்குரிய கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.
விவேகானந்தர்திருவனந்தபுரத்தில் பணிபுரிகையில் 1892ல் மகாராஜாவின் விருந்தினராக வந்த சுவாமி விவேகானந்தருடன் சுந்தரம் பிள்ளை உரையாடியிருக்கிறார். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை மறைந்தபோது சுவாமி விவேகானந்தர் அஞ்சலிக்குறிப்பு எழுதியிருக்கிறாசைவசித்தாந்தம் பற்றி அறியாதிருந்த சுவாமி விவேகானந்தருக்கு அதை அவர் எடுத்துரைத்தார் என்று சொல்லப்படுவதுண்டு
ஆனால் 1877-1878ல் நெல்லையில் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளிடம் பிரம்ம கீதை, சூதசம்ஹிதை, பெருந்திரட்டு காட்டும் அத்வைத சிந்தனைகளைக் கற்றறிந்தார். தத்துவராயர் முறைப்படுத்திய பரமாத்துவித வேதாந்தத்தையே உட்பொருளாக வைத்து மனோன்மணீயம் நாடகத்தைப் படைத்தார் என்றும் சொல்லப்படுகிறது.
விருதுகள்
- கல்வெட்டு ஆய்விற்காக பிரிட்டிஷ் அரசு M.R.A.S (Member of the Royal Asiatic Society of Great Britain and Ireland) பட்டத்தைக் கொடுத்தது.
- தொல்லியல் ஆய்வாளர்களுக்கான லண்டன் வரலாற்று ஆய்வு மையம் FRHS என்ற விருதை வழங்கியது (1896).
- 1896-ஆம் ஆண்டு இந்திய பிரிட்டிஷ் அரசு ராவ்பகதூர் விருது வழங்கியது.
- திருநெல்வேலிப் பல்கலைக்கழத்திற்கு மனோன்மணீயம் சுந்தரனார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மறைவு
பேராசிரியர் சுந்தரனார் தமது 42-வது வயதில் ஏப்ரல் 26, 1897-ல் காலமானார்.
வாழ்க்கை வரலாறுகள்,ஆய்வுகள்
- பல்கலைச்செல்வர் சுந்தரனார். கவிமாமணி பி.குமரேசன். 1992
- மனோன்மணியம் சுந்தரனாரின் புரட்சித்திறன். கா மீனாட்சிசுந்தரம் 1997
- மனோன்மணியம் சுந்தரனார் படைப்புகள் ஓர் ஆய்வு- எம்.ஷீலா கேரளப் பல்கலைக் கழகம் 1997
- மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை - பேரா ந.வேலுச்சாமி (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை) 2001
- மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம் . அ.கா.பெருமாள்
திரைப்படம்
மனோன்மணீயம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் பி.யூ.சின்னப்பா நடிக்க 7 நவம்பர் 1942ல் திரைப்படமாக வெளிவந்தது.
இலக்கிய இடம்
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ஆறு தளங்களில் அறிவியக்கப் பங்களிப்பாற்றியவர்.
- தமிழ் மறுமலர்ச்சியாளர். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை இருபதாம்நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவராக கணிக்கப்படுகிறார். தமிழின் தனித்தியங்கும் தன்மையையும் பண்பாட்டு மேன்மையையும் வலியுறுத்தியவர்களில் ஒருவர்.
- திராவிட இயக்க முன்னோடி. தமிழ்மொழியை திராவிட மொழிக்குடும்பத்தின் தலைமைமொழியாக முன்னிறுத்தினார். திராவிடம் என்பதை இரு இன அடையாளமாகவும் நில அடையாளமாகவும் முன்வைத்தார். அவ்வாறாக திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக கணிக்கப்படுகிறார்
- இலக்கிய வரலாற்றாளர். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை தமிழ் இலக்கியங்களின் வழியாக தமிழக வரலாற்றின் காலத்தை கணிக்கும் முறைக்கு முன்னோடியான ஆய்வுகளைச் செய்தவர். திருஞானசம்பந்தர் காலம் என்னும் நூல் சம்பந்தரின் காலத்தை ஆதாரபூர்வமாக வரையறை செய்தது. அதிலிருந்து மற்ற காலக்கணிப்புகள் நடைபெற்றன
- கல்வெட்டாளர். மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை தமிழ் வரலாற்றை கல்வெட்டுகளின் வழியாக ஆராய்ந்து வகுக்கும் முறையை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். கேரள வரலாற்றாய்விலும் முக்கியமான தொடக்கச் சித்திரங்களை உருவாக்கினார்.
- நாடக ஆசிரியர்.மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை இலக்கிய ஆசிரியராக மனோன்மணீயம் நாடகம் மூலம் அறியப்படுகிறார். ஷேக்ஸ்பியர் மரபிலான செய்யுள்நாடகம் என்னும் வடிவில் தமிழில் எழுதப்பட்ட முக்கியமான முன்னோடி நூல் அது.
- பாடலாசிரியர். மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை குறிப்பிடத்தக்க பாடலாசிரியர். அவருடைய நீராரும் கடலுடுத்த தமிழ்நாட்டின் அரசுப்பாடலாக உள்ளது
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையை கே.கே. பிள்ளை தன் சுசீந்திரம் ஆலயம் நூலில் தமிழ் கல்வெட்டாய்வின் முன்னோடி என்று குறிப்பிடுகிறார்.
கவிதை
- ஒரு நற்றாயின் புலம்பல் (1885)
- அகநிலைப் பாடல்கள் (1891)
- பொதுப்பள்ளி எழுச்சி (1895)
- நூற்றொகை விளக்கம் (1888)
- சிவகாமி சரிதம்
நாடகம்
- மனோன்மணீயம் நாடகம் (1891)
கட்டுரை
- புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும் (1892)
- மரங்களின் வளர்ச்சி (1892)
- ஜீவராசிகளின் இலக்கணம் (1897)
ஆங்கிலம்
- The Ten Tamil Idylls, (1890-1891) - (1957)
- Hobbes - The Father of English Ethics (1894-95)
- Bentham The Juristic Moralist (1896)
- Some Milestones in the History of Tamil Literature or The Age of Thirugnanasambandha – 1896.
- Early Sovereigns of Travancore, (1894)
ஆய்வுநூல்கள்
- திருஞானசம்பந்தர் காலம்
- நூற்றொகை விளக்கம் (1885,1889)
- பத்துப்பாட்டு (1891)
- முற்காலத் திருவாங்கூர் அரசர் (1894)
- ஆறாம் நூற்றாண்டுத் திருவாங்கூர் அரசர் (1896)
- திருவாங்கூர் கல்வெட்டுகள் (1897)
மேற்கோள்கள்
- ↑ Randor Guy (19 December 2010). "Manonmani 1942". தி இந்து இம் மூலத்தில் இருந்து 22 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121022161520/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article961803.ece.
- ↑ 100010509524078 (2021-04-04). "மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை பிறந்த நாள்: ஏப்.4- 1855" (in English) இம் மூலத்தில் இருந்து 2021-11-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211101162734/https://www.maalaimalar.com/timeline/kalasuvadugal/2021/04/04040128/2503872/manonmaniam-sundaram-pillai-birthday-Apr4-1855.vpf.
வெளி இணைப்புகள்
- s:ta:மனோன்மணீயம்
- மனோன்மணீயம் (மதுரைத் திட்டம்)
- மறக்கமுடியுமா? ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரனார் கருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 2017
- அ.கா. பெருமாள்: ’தமிழ் அறிஞர்கள்’ புத்தகம்
- மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை - பேரா ந.வேலுச்சாமி
- மனோன்மணீயம் முழுமையாக
- மனோன்மணீயம் சுந்தரனாரின் மறுபக்கம் அ.கா.பெருமாள்
- மனோன்மணிணீயம் சுந்தரனார்
- சுந்தரனார்: தமிழ் இலக்கிய வரலாற்றின் தலைமகன்!
- மனோன்மணியம் சுந்தரனார் கீற்று இணையப்பக்கம்
- செந்தமிழுக்கு உழைத்த 'மனோன்மணியம்' சுந்தரனார்!
- மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை தென்றல் இதழ்
- மனோன்மணியம் பெ.சுந்தரனார் அவர்களின் அரிய பணிகள் பூ.கோ.சரவணன்