பெங் சுயி
பெங் சுயி (சீனம்: 风水 ஃபங் ஷுவெய் அல்லது ஃபங் ஷுயி, என்னும் "காற்று நீர்"/ˈfʌŋˌʃuːi/ [1] or /ˌfʌŋˈʃweɪ/[2])) என்பது சூழலுடன் இசைந்து வாழ்வது தொடர்பாக சீனாவில் புழக்கத்திலிருக்கும் பாரம்பரிய அறிவுத்துறையாகும். இது இந்தியாவின் வாஸ்து சாஸ்திரம் போன்றதாகும். வாஸ்து சாஸ்திரத்திலிருந்தே பெங் சுயி தோன்றியிருக்கக்கூடுமென்றும் கருதப்படுகிறது. தற்காலத்தில் பெங் சுயி, சீனாவின் எல்லைகளைத் தாண்டி உலகின் பல பகுதிகளிலும் பின்பற்றுபவர்களைக் கொண்டுள்ளது.
பெங் சுயி என்பதன் பொருள்
பெங் சுயி என்பதன் நேரடியான பொருள், காற்றும், நீரும் என்பதாகும். மனிதனதும் ஏனைய உயிரினங்களதும் வாழ்க்கைக்குக் காற்றும் நீரும் இன்றியமையாதன. பூமியிலுள்ள காற்றுடனும், நீருடனும் இசைந்து வாழ்வது மனிதனுக்கு அதிட்டத்தையும், வளத்தையும் கொண்டுவரும் என்று பண்டைய சீனர்கள் நம்பினார்கள். அதனால்தான் அதிட்டத்தையும், வளத்தையும் கருதிக் கையாளப்பட்டுவரும் இந்த அறிவுத்துறைக்கு பெங் சுயி என்ற பெயர் வந்தது.