புவனா ஒரு கேள்விக்குறி
புவனா ஒரு கேள்விக்குறி (Bhuvana Oru Kelvi Kuri) 1977இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். இயக்குனர் முத்துராமன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த், சிவகுமார், சுமித்ரா ஆகியோர் நடித்திருந்தனர்.
புவனா ஒரு கேள்விக்குறி | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எம் ஏ எம் பிலிம்ஸ் |
கதை | பஞ்சு அருணாசலம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் சிவகுமார் சுமித்ரா ஜெயா மீரா ஒய். ஜி. மகேந்திரன் வெண்ணிற ஆடை மூர்த்தி |
ஒளிப்பதிவு | பாபு |
படத்தொகுப்பு | ஆர். விட்டல் |
வெளியீடு | செப்டம்பர் 2, 1977 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
நண்பர்களான நாகராஜ் மற்றும் சம்பத் தெருவோரம் துணிமணி விற்று திருநெல்வேலியில் ஒரே வீட்டில் வாழ்பவர்கள். நேர்மையில் நம்பிக்கை கொண்ட சம்பத் எதையும் நேரடியாக பேசக்கூடியவர். பெண்களை மயக்கக்கூடிய நாகராஜ் பல பெண்களை ஒரே நேரத்தில் காதலிக்க கூடியவர். மாறாக சம்பத் உண்மையான அன்பில் நம்பிக்கை கொண்டவர். சம்பத்தின் காதலி ராஜி ஒரு காளை மாட்டிடம் இருந்து தப்பித்து ஓடும் போது விபத்து காரணமாக இறக்கிறார். மனச்சோர்வு அடைந்த சம்பத் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். ஆனால் நாகராஜ் அவரை தடுக்கிறார். துணிமணி விற்பதை நிறுத்திக்கொள்ள சம்பத் முடிவு செய்கிறார். பதிலாக நாகராஜுக்கு உதவியாளராகவே இருக்க முடிவு செய்கிறார்.
ஒரு தொழில் பயணத்தின் பகுதியாக மெட்ராஸ் செல்ல இருக்கும் ரயிலில் நாகராஜ் மற்றும் சம்பத் ஆகியோர் முத்து என்பவரை சந்திக்கின்றனர். முத்து ஒரு கோயில் டிரஸ்ட் கிளர்க் ஆவார். அவர் தனது சூட்கேசில் ஏராளமான பணம் வைத்திருக்கிறார். ஆனால் மெட்ராசுக்கு செல்லும் வழியில் மாரடைப்பு காரணமாக முத்து இறக்கிறார். சம்பத்தின் எதிர்ப்பையும் மீறி நாகராஜ் சூட்கேஸில் இருந்த பணத்தை எடுத்துக் கொள்கிறார். முத்துவின் சகோதரியான புவனா நாகர்கோயிலில் உள்ள அவர்களது வீட்டில் தொலைந்துபோன பணத்தைப் (அவை அனைத்தும் கருப்பு பணம்) பற்றி விசாரிக்க வருகிறார். நாகராஜ் தனக்கு எதுவும் தெரியாது என்று மறுக்கிறார். ஆனால் புவனாவுக்கு சந்தேகம் போகவில்லை. புவனாவை காதலிப்பதாக நாகராஜ் நடிக்கிறார். அவரது நடிப்புக்கு புவனா பலியாகிறார்.
அந்தக் கருப்பு பணத்தில் ஒரு பகுதியை தனது சொந்த ஜவுளிக் கடையை திறக்க நாகராஜ் பயன்படுத்துகிறார். எஞ்சிய கருப்பு பணத்தை வெள்ளை பணமாக்க நாகராஜ் ஒரு செல்வந்த வணிகரின் மகளான மனோகரியை திருமணம் செய்து கொள்கிறார். நாகராஜால் கர்ப்பமடைந்த புவனா கர்ப்பத்தை கலைக்க மறுக்கிறார். நாகராஜ் தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் நாகராஜ் மறுக்கிறார். புவனாவின் மானத்தை காப்பாற்றுவதற்கும் தனது நண்பனுக்கு உதவி புரிவதற்கும் சம்பத் புவனாவை திருமணம் செய்து கொள்கிறார். அவர்கள் இருவரும் பெயரளவில் மட்டுமே கணவன் மனைவியாக வாழ்கின்றனர். அதே நேரத்தில் மனோகரியை திருமணம் செய்துகொண்ட நாகராஜின் தொழில் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.
சம்பத் கணவன் மனைவியாக வாழ புவனாவை அழைக்கிறார். ஆனால் புவனா மறுக்கிறார். சம்பத் தனக்கு கடவுள் போன்றவர் என்று கூறுகிறார். சம்பத் புவனாவின் மகனை தனது சொந்த மகனாக வளர்க்கிறார். அதே நேரத்தில் நாகராஜ் மற்றும் மனோகரி குழந்தைக்காக ஏங்குகின்றனர். ஏனெனில் நாகராஜ் தனது தவறான பழக்கவழக்கங்கள் காரணமாக தற்போது ஆண்மையற்றவராக மாறி விட்டார். தன்னுடைய மகனை தனக்கே தத்துக் கொடுக்க வேண்டும் என்று நாகராஜ் கூறுகிறார். ஆனால் புவனா மறுக்கிறார்.
குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போகிறது. ஒரு ஊசி மருந்து அதற்கு தேவைப்படுகிறது. குழந்தை தனக்கு தத்து கொடுக்கப்பட்டால் தன்னுடைய மருந்து கடையில் இருந்து மருந்தை கொடுப்பதாக நாகராஜ் கூறுகிறார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் சம்பத் வந்து ஊசி மருந்தைக் கொடுத்து குழந்தையை காப்பாற்றுகிறார். பல வருட புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கம் காரணமாக சம்பத்திற்கு மாரடைப்பு ஏற்படுகிறது. புவனா சம்பத்தின் விதவையாகவே வாழ முடிவு செய்கிறார்.
நடிகர்கள்
- சிவகுமார் - நாகராஜ் [1]
- ரஜினிகாந்த் - சம்பத்[1]
- சுமித்ரா-புவனா[1]
- ஜெயா - மனோகரி[1]
- மீரா - இராஜி[2]
- சுருளிராஜன் - மனோகரியின் தந்தை
- ஒய். ஜி. மகேந்திரன் - முத்து[1]
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை பஞ்சு அருணாசலம் எழுதியிருந்தார்.[3] "விழியிலே மலர்ந்தது" என்ற பாடல் கருநாடக இசையின் நடபைரவி இராகத்தில் அமைந்தது. [4] "பூந்தென்றலே" என்ற பாடல் இராஜஸ்ரீ இராகத்தில் அமைந்தது.[5]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "விழியிலே மலர்ந்தது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:24 | |||||||
2. | "இராஜா என்பார் மந்திரி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:32 | |||||||
3. | "பூந்தென்றலே நல்ல நேரம்" | பி. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் | 4:08 | |||||||
4. | "தலைப்பு இசை" (இசைக்கருவி) | — | 2:05 | |||||||
மொத்த நீளம்: |
15:09 |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Ramachandran 2014, ப. 64.
- ↑ Ramachandran 2014, ப. 65.
- ↑ "Bhuvana Oru Kelvikuri (1977)" இம் மூலத்தில் இருந்து 1 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140401232734/http://play.raaga.com/tamil/album/Bhuvana-Oru-Kelvikuri-T0000033.
- ↑ Sundararaman 2007, ப. 168.
- ↑ Sundararaman 2007, ப. 154.