புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி

புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி (அக்டோபர் 30, 1972 - பெப்ரவரி 12, 2009) புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட வன்னியைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளரும் ஆவார். இவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்தில் இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகாயமுற்று இறந்தார்[1].

புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாண மாவட்டம், மண்டைதீவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பொலன்னறுவை மாவட்டம், மன்னம்பிட்டியில் பிறந்து வளர்ந்து பின்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து தனது பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்தார்.

அத்துடன், ஊடகத்துறையில் 1990-களில் ஈடுபடத் தொடங்கிய இவர், தொடக்க காலத்தில் புலிகளின் குரலில் நிகழ்ச்சி எழுதுதல் மற்றும் "வெளிச்சம்" சஞ்சிகை உள்ளிட்ட அச்சு ஊடகங்களில் கவிதைகள், சிறுகதைகளை எழுதி வந்தார். 1990-களின் பிற்பகுதியில் அரசியல் மற்றும் படைத்துறை ஊடகப்பணியில் ஈடுபட்டார்.

ஈழநாதத்தில் படைத்துறை பத்தியை எழுதி வந்த இவர், ஈழநாடு பத்திரிகையில் ஊடகவியலாளராக செயற்பட்டு அரசியல் படைத்துறை ஆய்வுகளையும் எழுதி வந்தார்.

ஓயாத அலைகள்-3 நடவடிக்கையில் மீட்கப்பட்ட நிலப்பகுதிகளின் பதிவுகளை இவர் திறம்பட செய்தார். தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டு தொடக்கம் தாயகத்தில் இருந்து ஈழத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள், மற்றும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தார்.

நாட்டுப்பற்றாளர் விருது

படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்திக்கு நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி விடுதலைப் புலிகள் மதிப்பளித்தனர்[2].

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்