புகழ் (நகைச்சுவையாளர்)
புகழ் (Pugazh) 14.11.1990 பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் நடிக்கும் ஒரு நகைச்சுவை நடிகர் ஆவார். விஜய் தொலைக்காட்சியின் “கலக்கப்போவது யாரு“ நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்த முயன்றார். அந்த நிகழ்ச்சிக்கு இவர் தெரிவு செய்யப்படாததால் ”அது, இது, எது?” என்னும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு தனது திறமையை வெளிக்காட்ட முயன்றார். ”சிரிப்புடா” எனும் நிகழ்ச்சியிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதில் அவர் பெண் வேடமிட்டு நடித்த போது அவரின் நளினமான உடல் மொழிகளும் நகைச்சுவை தரும் உணர்ச்சிகளும் பலரை கவர்ந்தது.[1] விஜய் தொலைக்காட்சியில் தொடங்கிய குக்கு வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாக அவர் தனது திறமையை வெளிப்படுத்தினார். சமையலும் நகைச்சுவை கலாட்டாவும் கலந்த இந்நிகழ்ச்சி பலரின் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அவர் செய்த நகைச்சுவை பாவனைகளும், நகைச்சுவையும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமும் மக்களை அந்நிகழ்ச்சியின் பக்கம் ஈர்த்தது. ஒவ்வொரு முறையும் ஒரு போட்டியாளருக்கு ஒரு கோமாளி உதவியாளராக சேர்வார். ரம்யா பாண்டியனுடன் சேர்ந்து இவர் செய்த குறும்பு சேட்டைகளும், நகைச்சுவைகளும் மக்களை சிரிக்க வைத்தது. அதேபோன்று சமையலிலும் ஈடுகொடுத்து போட்டியாளர்களின் மனதைக் கவர்ந்தார். இதனால் அந்நிகழ்ச்சியில் உள்ள பெரும்பாலான போட்டியாளர்களுக்கு புகழ் மிகவும் விருப்பமான கோமாளியாக அமைந்தார்.[2] அதன் பிறகு தொலைக்காட்சியில் வந்த பல நிகழ்ச்சிகளில் அவர் தனது நகைச்சுவையால் பல மக்களை மகிழ வைத்தார். பின் சிறிது காலம் கழித்து தொடங்கிய குக்கு வித் கோமாளி தொடர்களில் பல வகையான கதாபாத்திரங்களில் தனது நகைச்சுவைத் திறனை வெளிப்படுத்தி கைதட்டல்களை வாங்கினார். இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் அடைந்த புகழின் காரணமாக பல படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடிக்கவுள்ளார்.[3] இந்நிகழ்ச்சி மூலம் தற்போது மூன்று விருதுகளையும் பெற்றுள்ளார். கடலூரில் ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்த இவர் சென்னையில் எண்ணற்ற வேலைகளை செய்து தனது உழைப்பால் இப்பொழுது ஒரு கலைஞனாக உயர்ந்துள்ளார். இப்போது வலையொளியில் பரட்டை புகழ் என்ற பெயரிலான முகவரியில் காணொளிகளையும் வெளியிட்டு வருகிறார்.
மேற்கோள்கள்
- ↑ அஸ்வினி.சி (in ta). `ரூஃபிங் வேலைக்குப் போனேன்; 5 நரம்பு கட்டாகிருச்சு!' - கலங்கவைக்கும் `குக் வித் கோமாளி’ புகழ். https://cinema.vikatan.com/television/cook-with-comali-pugazh-shares-about-his-career. பார்த்த நாள்: 2021-04-17.
- ↑ "‘குக் வித் கோமாளி’ முடிந்தால் என்ன? ‘பரட்டை புகழ்’ சேனல் இருக்கே!" (in ta-IN). https://tamil.indianexpress.com/lifestyle/cook-with-comali-pugazh-parattai-pugazh-youtube-channel-291856/.
- ↑ "விஜய் சேதுபதி படத்தைத் தொடர்ந்து ‘மாநாடு’ படத்தில் இணைந்த குக் வித் கோமாளி புகழ் : ரசிகர்கள் கொண்டாட்டம்!". https://www.kalaignarseithigal.com/cinema/2021/04/03/cook-with-comali-pugazh-joins-with-simbu-in-maanadu-movie.