புகழாப்புகழ்ச்சி அணி

புகழாப்புகழ்ச்சி யணி என்பது ஒன்றைப் பழிப்பது போன்ற முறையில், அதன் மேன்மை தோன்றக் கூறுவது ஆகும். அதாவது புகழாமல் புகழ்தல்[1][2].

தண்டியலங்கார ஆதாரம்

12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் புகழாப்புகழ்ச்சி யணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:

நூற்பா

பழிப்பது போலும் பான்மையின் மேன்மை
புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி
                      --(தண்டியலங்காரம், 84)

(எ.கா.)

போர்வேலின் வென்றதூஉம் பல்புகழால் போர்த்ததூஉம்
தார்மேவு திண்புயத்தால் தாங்குவதூஉம் - நீர்நாடன்
தேரடிக்கூர் வெம்படையால் காப்பதூஉம் செங்கண்மால்
ஓரடிக்கீழ் வைத்த உலகு
                      --(தண்டியலங்கார மேற்கோள்)

( நீர்நாடன் - சோழன் ; தேரடி - தேர்ச்சக்கரம் போன்ற ; செங்கண்மால் - திருமால்)

பாடல்பொருள்:
சோழன் வலோல் வென்றும், புகழால் போர்த்தும், புயத்தால் தாங்கியும் உலகைக் காக்கின்றான். அவன் இவ்வளவு முயன்று தாங்கும் உலகு, திருமால் தன் ஒரு பாதத்தில் அடக்கிய உலகாகும். இது சோழனின் தன்மையைப் பழிப்பதுபோல் உள்ளது. எனினும் திருமாலுக்கு நிகராக உலகம் முழுவதும் காக்கிறான், என உண்மையில் சோழனைப் புகழ்தலே நோக்கமாகும். ஆதலின் இது புகழாப் புகழ்ச்சி ஆயிற்று.

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=புகழாப்புகழ்ச்சி_அணி&oldid=13547" இருந்து மீள்விக்கப்பட்டது