பிரான் சாத்தனார்
பிரான் சத்தனார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 65.
பாடல் தரும் செய்தி
தலைவி தாய் முதலானோரின் கட்டுக்காவலில் இருக்கிறாள். தலைவன் அவளுக்காக வெளியில் காத்திருக்கிறான். இதனைத் தோழி தலைவிக்குச் சொல்வது போலத் தலைவனுக்குக் கேட்குமாறு சொல்கிறாள்.
சுனையில் புதுநீர் பொங்கி வருகிறது. அதில் நீராடுவது உடலுக்கு ஆக்கம் தரும். இவ்வாறு தாயை வணங்கி எடுத்துரைத்தால் "சென்று விளையாடி வருக" என்று விட்டுவைப்பாள் போலத் தெரிகிறது, என்கிறாள் தோழி.
பழந்தமிழர் விளையாட்டுக் கொள்கை
பாடல் பகுதி
- "விளையாடு ஆயமோடு ஓரை ஆடாது, இளையோர் இல்லிடத்து இல் செறிந்து இருத்தல், அறமும் அன்று, ஆக்கமும் தேய்ம்"
கொள்கை விளக்கம்
- இளம் வயதினர் விளையாட்டுத் தோழரோடு சேர்ந்து ஓரை விளையாட்டு விளையாட வேண்டும். அப்படி விளையாடாமல் இல்லத்திலே அடைந்து கிடத்தல் அறச்செயலும் அன்று. அத்துடன் அவர்களின் உடல் ஆக்கமும் குன்றிப்போகும்.