பிரளயன்

பிரளயன், நவீன நாடகம், வீதி நாடகம், குழந்தைகளுக்கான நாடகப் பயிற்சி என்ற வகைகளில் தமிழ்நாட்டின் தனித்துவ நாடக ஆளுமையாக செயல்பட்டு வருபவர். பத்திரிக்கையாளராகவும், திரைப்பட இயக்குநராகவும் இருக்கிறார். [1] [2]

பிரளயன்

நாடகத்தொடர்பு

கல்லூரியில் படிக்கும்போது தமிழ் மொழிக் கழகம் வாயிலாக நாடகத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கல்லூரி நாடகங்களில் ஈடுபட்டதோடு, கவிதைகளும் எழுதியுள்ளார். அக்காலகட்டத்தில் திருவண்ணாமலையில் பிலிம் சொசைட்டி என்ற அமைப்பினை நிறுவி அதன் மூலமாக கலை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். அதில் கல்லூரி ஆசிரியர்களும் ஈடுபட்டிருந்தனர். சர்வதேச படங்களைப் பார்ப்பது, அவற்றை விமர்சனம் செய்வது போன்ற செயல்பாடுகள் கலை ஆர்வத்தை அவரிடம் மிகுவித்தது.[2] கணிப்பொறி நிரல் பயிற்சிக்காகச் சென்னை வந்த போது நவீன நாடக வடிவத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, 1984இல் சென்னைக் கலைக் குழு என்ற ஒரு குழுவினை ஆரம்பித்து நடத்தி வருகிறார். [1]

நாடக ஆக்கங்கள்

இவருடைய புகழ் பெற்ற நாடக ஆக்கங்களில் உபகதை, பாரி படுகளம், வஞ்சியர் காண்டம், மத்தவிலாஸ பிரகசனம், கனவுகள் கற்பிதங்கள், முற்றுப்புள்ளி, மாநகர், பவுன்குஞ்சு போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். [1] [3] [4] இவர் சமகால மக்களுக்காக நாடகத்தை இயக்குபவர் ஆவார். [2] பயணம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார். [5]

தாக்கம்

வங்க நாடகாசிரியரான பாதல் சர்க்கார்[6], வீதி நாடகக் கலைஞரான சப்தர் ஹாஷ்மி ஆகியோரின் தாக்கத்தைப் பெற்றவர். 1977-இல் பேராசிரியர் ராமானுஜம் ஏற்பாட்டில் பன்சி கௌல் நடத்திய 70 நாள் நாடகப் பயிலரங்கம், 1978-ல் அவர்கள் மீண்டும் நடத்திய பயிலரங்கம், 1979-இல் தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய நாடக விழா, 1980-இல் பாதல் சர்க்கார் சென்னையில் சோழ மண்டலத்தில் நடத்திய நாடகப் பயிலரங்கு போன்றவை தமிழ் நவீன நாடகச்செயல்பாடுகளின் அடித்தளங்களை உருவாக்கியவையெனில் இவர் நேரடியாகப் பங்கேற்று உந்துதல் பெற்றது தஞ்சாவூர் நாடக விழா ஆகும். தமிழ் நாடகத்தில் அவருடைய முன்னோடிகளாக ந. முத்துசாமி, மு.ராமசாமி ஆகியோரைக் கருதுகிறார்.[1] ‘காற்று’, ‘கொல்லிப்பாவை’ போன்ற இதழ்களில் நவீன நாடகங்கள் தொடர்பாக வந்த விவாதங்களைப் படிக்க ஆரம்பித்தபின்னர் இவருக்கு நாடகம் மீதான ஆர்வம் உருவாகியுள்ளது. [7]

பயிலரங்கு

12 முதல் 16 வயது வரையிலான வளரிளம் பருவத்து மாணவர்களுடன் 25 வருடமாகப் பணியாற்றிவரும் இவர், நாடகத்தைக் கல்வியின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தும் முயற்சியாக, வருடத்துக்கு ஒரு பயிலரங்கை நடத்தி வருகிறார். இது நாடகத்தை ஊடகமாகக்கொண்டு, வகுப்பறை தாண்டிய அனுபவங்களைத் தருவதற்கான முயற்சியாகும்.[1]

உசாத்துணை

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பிரளயன்&oldid=27294" இருந்து மீள்விக்கப்பட்டது