பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஸ்வரர் கோயில்

கோகர்ணேஸ்வரர் கோயில் அல்லது பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஸ்வரர் கோவில் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் புதுக்கோட்டை நகரத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருக்கோகர்ணம் என்னும் ஊரில் அமைந்துள்ள சைவத் திருக்கோயிலாகும்.[2][3] இக்கோவிலின் மூலவர் கோகர்ணேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அம்பாளின் பெயர் பிருகதாம்பாள் என்பதாகும்.

அருள்மிகு பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவிடம்:திருக்கோகர்ணம்[1]
சட்டமன்றத் தொகுதி:புதுக்கோட்டை
மக்களவைத் தொகுதி:திருச்சிராப்பள்ளி
கோயில் தகவல்
மூலவர்:மகிழவனேசர், திருக்கோகர்ணேஸ்வரர்
தாயார்:ஸ்ரீ மங்களநாயகி, ஸ்ரீ பிரகதாம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடிப் பூரம், நவராத்திரி

மூர்த்திகள்

 
கோயிலில் காணப்படும் நாயன்மார்களின் சிலைகள்

கோயிலில் வாசல் பிள்ளையார் சந்நிதி, தெட்சிணாமூர்த்தி சந்நிதி, நடராசர் சந்நிதி, ஜீரஹரேஸ்வரர் சந்நிதி, சரஸ்வதி சந்நிதி, லெஷ்மி சந்நிதி, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை சந்நிதி, பிரம்மா சந்நிதிம் சண்டிகேஸ்வரர் சந்நிதி, காசி பாண லிங்கம் சந்நிதி, காசி விஸ்வநாதர் , விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன.[1] ஒரு மகிழ மரத்தின் கீழே சதாசிவ பிரம்மேந்திரர் சந்நிதியும் உள்ளது.

விழாக்கள்

சித்திரை மாதம் 9-ம் நாள் திருக்கல்யாணம், வசந்தோற்சவம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் 9ம் நாள் ஆடித்தபால், ஆடிப் பூரம் திருவிழாவாக நடைபெறுகிறது.[1] சித்திரை மாதம் பிரம்மோற்சவம், புரட்டாசி மாதம் நவராத்திரி, ஐப்பசி மாதம் கந்த சஷ்டி, தைப்பூசம் ஆகிய விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.[3]

தேர் விபத்து

2022 ஆகஸ்ட் முதல் நாளின்று நடந்த ஆடிப்பூரத் தேரோட்ட விழாவில் தேர் கவிழ்ந்து ஒருவர் இறந்தார், பலர் காயமுற்றனர்.[4][5]

வரலாறு

குடைவரைக்குகைக் கோயிலான இக்கோயில் பல்லவ அரசனான முதலாவது மகேந்திர வர்மன் காலத்தைச் சேர்ந்தது.[6] புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் வம்சாவளி அரசர்களின் பெயரில் அடைமொழியாக ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் என்று வருவதால் தொண்டைமான் அரச குடும்பத்தினரின் குலதெய்வம் இங்குள்ள பிருகதாம்பாள் எனக் கூறலாம் (எ-கா: ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் 1839-1886, ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் 1886)[7].
மேலும் புதுக்கோட்டை மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணயம் புதுக்கோட்டை அம்மன் காசு அல்லது அம்மன் சல்லி என அழைக்கப்பட்டது. அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் பிரகதாம்பாள் அம்மனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.[8] இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[9]

கல்வெட்டு விவரம்

  1. பல்லவ கிரந்தத்தில் உள்ளது. குடவரைக் கோயில் சுவாமி சந்நிதி தெற்கு சுவரிலுள்ளது
  2. சோழ மன்னர் கோலிராஜ ஸ்ரீ ராஜ கேசரிவர்மன் சாசனம், குடவரைக் கோயில் சுவாமி சந்நிதி முன்னால் உள்ள கிழக்கு முகத்தில் உள்ள வலதுபுறத்தில் இருந்து இரண்டாம் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தூணில் தெற்கு முகத்தில் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. குடவரைக் கோயில் சுவாமி சந்நிதி தெற்கு சுவரிலுள்ளது
  3. சோழ மன்னர் பரகேசரிவர்மன் சாசனம் குடவரைக் கோயில் சுவாமி சந்நிதி தெற்கு சுவரிலுள்ளது, குடவரைக் கோயில் சுவாமி சந்நிதி இரண்டாம் தூணில் உள்ளது, மூன்றாம் தூணில் உள்ளது.
  4. பரகேசரி வர்மன் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவன் சாசனம், சுவாமி சந்நிதி அர்த்தமண்டபத்தில் உள்ள ஒரு பாறையில் தெற்கு சுவரிலுள்ளது.
  5. ராஜ கேசரி வர்மன் திரிபுவன சக்ரவர்த்தின் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவன் சாசனம், சுவாமி சந்நிதியில் உள்ள ஒரு பாறையில் உள்ளது
  6. திரிபுவன சக்ரவர்த்தின் ஸ்ரீ ராஜ ராஜ சோழ தேவன் சாசனம் சுனை படியில் உள்ள சாசனம்.
  7. மாறன் சடையன் பாண்டியன் சாசனம் சுவாமி சந்நிதி தெற்கு சுவரிலுள்ளது.
  8. மாறவர்மன் கோயில் குலசேகர பாண்டிய தேவன் சாசனம் சுவாமி சந்நிதி அர்த்த மண்டபத்தின் கிழக்கு சுவரிலுள்ளது.
  9. மாறவர்மன் திரிபுவன சக்ரவர்த்தின் ஸ்ரீ வீரபாண்டிய தேவன் சாசனம், சண்டிகேஸ்வரர் சந்நிதி பின்புற சுவரிலுள்ளது.
  10. சுவாமி சந்நிதி அர்த்த மண்டபத்தின் கிழக்கு சுவரிலுள்ளது.
  11. விஜய நகர மன்னன் ஸ்ரீ வீரசவன உடையார் சாசனம், சண்டிகேஸ்வரர் சந்நிதி பின்புறம் வடக்கு சுவரிலுள்ளது.
  12. விஜய நகர மன்னன் ஸ்ரீ விருப்பண உடையார் சாசனம், குடவரைக்கோயில் சுவாமி சந்நிதி முன் மண்டபத்தின் கிழக்கு சுவரிலுள்ளது.
  13. பல்லவராயர் சோடஷ கணபதி சந்நிதியின் ( பெரிய குளம் பிள்ளையார் கோயில்) வடக்கு சுவரிலுள்ளது.[10]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
  2. திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர்
  3. 3.0 3.1 புதுக்கோட்டைக் கோயில்கள், புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, 2003
  4. "புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தேர் விபத்து.. அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு!!". மாலைமலர். https://www.malaimurasu.com/posts/tamilnadu/Pudukottai-Pragatambal-Temple-Chariot-Accident-Minister-Shekharbabu-personally-visited?utm=thiral. பார்த்த நாள்: 7 August 2022. 
  5. "புதுக்கோட்டை தேர் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் உயிரிழப்பு". செய்திப்புனல். https://www.seithipunal.com/tamilnadu/pudhukottai-chariot-collapse-1-women-death?utm=thiral. பார்த்த நாள்: 7 August 2022. 
  6. தமிழக சுற்றுலா தலங்கள்
  7. புதுக்கோட்டை அறிமுகம்
  8. புதுக்கோட்டை-அம்மன் காசு
  9. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
  10. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 10". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.

வெளி இணைப்புகள்