பிண்டி (மரம்)
பிண்டி Caesalpinioideae என்னும் மரத்தை இக்காலத்தில் அசோகமரம் என்பர்.
பிண்டி பரம், மலர் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் உள்ளன. அவை அவற்றின் தோற்றம் பற்றியும், பயன்பாடு பற்றியும் விளக்குகின்றன.
- காட்டில் பூக்கும்.[1]
- குறிஞ்சிநில மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்று குறிஞ்சி.[2]
- இப்படி விளையாடிய தலைவியைக் கண்ட தலைவன் தன் காது ஒன்றில் பிண்டிப்பூ செருகியிருந்தான்.[3]
- முருகனை வழிபடும் சூரரமகளிர் பிண்டித் தளிரை வளைந்த காதுகளில் அணிந்திருந்தார்களாம்.[4]
- பிண்டி செந்நிற மலர். வையையில் நீராடச் சென்ற மற்றொருத்தி இதனை காதில் குழை போலத் தொங்கும்படி மாட்டியிருந்தாள்.[5]
- வையையில் நீராடச் சென்ற ஒருத்தி காதில் பிண்டித்தளிரைச் ‘சாய்குழையாக’ மாட்டியிருந்தாள்.[6]
- திருமால் குடிகொண்டிருந்த இருந்தையூரில் பிண்டி மலர்ந்திருந்தது.[7]
- மதுரை செல்லும் வழியில் உலகநோன்பிகள் அருகதேவனுக்கு இட்டிருந்த சிலாதலம் (மலைப்பாறை இருக்கை) பொன்னிறப் (செந்நிறப்) பிண்டி நிழலில் இருந்தது. (இது இப்போதுள்ள மீனாட்சிபுரம் ஆனைமலை சமணர் படுக்கைகள்) கோவலன் கண்ணகி காவுந்தி ஆகியோர் இதனை வலம்வந்த பின்னர் மதுரைக்குச் சென்றான்.[8]
- கோதைதாழ் பிண்டி நிழலில் அறிவன் (அருகன்) கோயில் இருந்தது.[9]
- ஆடற்கலை கை முத்திரை
- பிண்டி என்பது ஆடற்கலையில் கைகாட்டும் முத்திரைகளில் ஒன்று.[10]
இவற்றையும் காண்க
இந்த மரத்தின் இனம்
காண்க
அடிக்குறிப்பு
- ↑ ஒண்பூம் பிண்டி அவிழ்ந்த கா - மதுரைக்காஞ்சி 701
- ↑ குறிஞ்சிப்பாட்டு 88
- ↑ ஒண்பூம் பிண்டி ஒருகாது செரீஇ – திருமுருகாற்றுப்படை - 119
- ↑ திருமுருகாற்றுப்படை 31
- ↑ கடுநீர் வினைக்குழையின் ஞாலச் சிவந்த கடிமலர்ப் பிண்டி மன் காதில் செரீஇ - பரிபாடல் 12-88
- ↑ பரிபாடல் 11-85
- ↑ பரிபாடல் திரட்டு 1-8
- ↑ சிலப்பதிகாரம் 10-21
- ↑ சிலப்பதிகாரம் 11-3, 15-152
- ↑ சிலப்பதிகாரம் 3-18