பாவேந்தர் பாரதிதாசன் பழம்புதுப் பாடல்கள்

பாவேந்தர் பாரதிதாசனின் பழம்புதுப் பாடல்கள் என்பது ஒரு தொகுப்பு நூல் ஆகும். முனைவர் இரா. இளவரசு என்னும் தமிழ் அறிஞரால் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளிவந்த பாரதிதாசன் கவிதைத் தொகுதிகளில் இடம்பெறாத பாடல்கள் இந்நூலில் உள்ளன. இந்தத் தொகுப்பில் உள்ள பாடல்கள் அனைத்தும் பழம் பாடல்களே என்றும், தமிழ்கூறு நல்லுலகம் முதன் முறையாகக் காண்கிற பாடல்கள் இவை என்றும், புதுமைப் பொலிவு கொண்டவை என்றும் ஆசிரியர் தம் முன்னுரையில் கூறுகிறார். பாரதிதாசன் தமது பதின்மூன்றாம் அகவையில் (அதாவது 1904 ஆம் ஆண்டில்) எழுதிய பாடல் முதல் 1964 வரை எழுதிய பாடல் வரை இந்நூல் கொண்டுள்ளது.

பாரதியாரைச் சந்திப்பதற்கு முன்பே கனகசுப்புரத்தினம் என்னும் தம் இயற்பெயரில் பல பாடல்களை எழுதியுள்ளார் என்று இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளது. 500 பக்கங்களுக்கு மேல் அமைந்துள்ள இந்நூலில் இடம் பெற்ற 345 பாடல்கள் பல்வேறு இதழ்கள் மலர்களிலும் நூல்களிலும் தேடிப் பெறப்பட்டன. பாரதிதாசனின் கையெழுத்து வடிவத்தில் இருந்த பாடல்களும் இந்தத் தொகுப்பில் உள்ளன. கால வரிசைப்படி கவிதைகளை அமைத்துள்ளார் இந்நுலாசிரியர். சில பாடல்கள் எழுதப்பட்ட காலம் அறிய இயலாத நிலையில் 'காலம் தேடும் பாடல்கள்' என்னும் பகுதியில் அப்பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அரிய பாடல்களில் சில

இலாவணிப் பாட்டில்(1907) பாரதிதாசனின் பருவ உணர்வுகள் தெரிகின்றன.

அகாலியர் கையோடு கிர்பான் என்னும் ஒரு வகையான கத்தி வைத்திருப்பர். அக்கால அரசு கத்தி வைத்திருப்பதைக் குற்றம் என்று மறுத்தபோது அறவழியில் அகாலியர் போராடி வெற்றி பெற்றனர். எனவே 'அகாலி வீரரின் ஆண்மையைக் கண்டிரோ! எனப் பாராட்டி அகாலியரின ஆண்மை (10-7-1923) என்னும் கவிதையில் பாடியுள்ளார்.

  • லாலா லசபதி ராயின் பிணிக்கு இரங்கல் (10-7-1923)
  • பெரியாரை வரவேற்று படித்த கவிதை (10-02-1929)
  • பெரியாரின் (பஞ்சசீலம்) ஐந்தொழுக்கம் (21-10-1958)
  • கி.வீரமணி மோகனா இணையருக்குத் திருமண வாழ்த்து (7-12-58)
  • சிங்களத் தமிழர்கள் எங்கள் பட்டாளம் (25-11-1958)
  • திபெத்து விடுதலை (26-5-1959) - சீனர்களின் ஆட்சியிலிருந்து திபெத்து விடுதலை அடைதல் வேண்டும் என்று பாடுகிறார் .

சாகாமைக்கு ஒழுக்கம் காரணம் (6-10-1959)-இக்கவிதையில் அறிவியல் அறிஞர் விசுவேசுவரைய்யா மிகு நாள் வாழ்ந்ததற்கு அவருடைய ஒழுக்கமே காரணம் என்று பாடினார்.

பாரதிதாசன் திருக்குறள் (21-6-1960) என்னும் தலைப்பில் சில பதிவாகியுள்ளன.

கருநாடக இசை அறிஞர் தியாகராஜர் தெலுங்கு கீர்த்தனைகளைப் பாரதிதாசன் தமிழில் மொழி ஆக்கம் செய்துள்ளார் என்பது பலரும் அறிய வேண்டிய செய்தி. சிறீசுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம் என்னும் இதழில் (1935) தியாகராசரின் பதினொரு கீர்த்தனைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார் என்பதும் இந்த நூலின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

பாவேந்தர் பாரதிதாசன் திராவிடம், தூய தமிழ், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை ஏற்பதற்கு முன், சக்திப் பாட்டு, பராசக்தி திருப்புகழ், இராமாயணக் கதை நிகழ்ச்சிப் பாடல் எனப் பல பாடல்களை எழுதியுள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது. பாரதிதாசனின் தன்மான இயக்கத் தொடர்பு 1928 ஆம் ஆண்டில் ஏற்பட்டது என்னும் வரலாற்றுக் குறிப்பும் இந்நூலில் பதியப் பட்டுள்ளது.

சான்று

  • பாவேந்தர் பாரதிதாசனின் பழம்புதுப் பாடல்கள், ஆசிரியர் முனைவர் இரா.இளவரசு வெளியீடு பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு.