பால்பகா அஃறிணைப் பெயர்கள்

பால்பகா அஃறிணைப் பெயர்கள் என்பது ஓர் இலக்கணக் குறியீடு. தமிழில் உள்ள பெயர்ச்சொற்களை உயர்திணைப் பெயர்கள், அஃறிணைப் பெயர்கள் எனப் பகுத்துக் காண்பது மரபு. அவற்றில் அஃறிணையில் ஒன்றன்பால், பலவின்பால் என இரண்டு வகை உண்டு. ஒன்றன் பால், பலவின் பால் என்னும் இரண்டும் அஃறிணைக்கு உரிய பால்கள்.

 "பால் பகா அஃறிணைப் பெயர்கள் பால் பொதுமைய" [1]

உயர்திணைப் பெயர்களைப் போல அஃறிணைப் பெயர்களுக்குப் பெரும்பாலும் அவற்றின் பால்களைச் சுட்டும் ஈற்று எழுத்துகள் இல்லை. அதனால், அவை ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாகவே வரும். அவற்றை, பால்பகா அஃறிணைப் பெயர்கள் என்பர். சில அஃறிணைப் பெயர்களை ஒன்றன் பாலா, பலவின் பாலா என்று அறிய இயலாது. அவற்றுடன் சேர்ந்துவரும் வினைச்சொல் விகுதி கொண்டே அவை ஒன்றன் பாலா, பலவின் பாலா என்று அறிய முடியும். பறவை, மரம், பனை முதலியவை பால்பகா அஃறிணைப் பெயர்கள் ஆகும்.

பால்பகா அஃறிணைப் பெயர்களில் அமையும் பயனிலைகள்

‘கல்வி கரை இல, கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல’[2]

என்ற இச்செய்யுளில் கல்வி, நாள், பிணி என்னும் சொற்கள் ஒன்றன் பாலாக இருக்கின்றன. இவை முறையே இல, சில, பல என்னும் பன்மைப் பயனிலையைக் கொண்டு முடிந்துள்ளன. அஃறிணைப் பெயர்களில் அது, பெரியது என்பன போல இறுதி எழுத்து ஒன்றன் பாலைக் குறிக்கவும். அவை, பெரியவை என்பன போல இறுதி எழுத்துப் பலவின்பாலைக் குறிக்கவும் அமைந்தது போல, கல்வி, நாள், பிணி என்னும் சொற்களில் அமையவில்லை. ஆகவே, இவற்றைப் பால்பகா அஃறிணைப் பெயர்கள் என்று கூறுவர். மாடு, காடு, மரம், செடி, கடல், மலை, பறவை போன்றன எல்லாம் பால்பகா அஃறிணைப் பெயர்களே ஆகும்.

மாடு, காடு, மரம், செடி, கடல், மலை, பறவை போன்ற இப்பெயர்கள் ஒருமையா, பன்மையா என்பதை முடிக்கும் சொல்லே (பயனிலையே) வரையறுக்கும். வினையும் பெயரும் இவற்றுக்கு வினை முடிவாக அமையும்

எடுத்துக்காட்டு:

வினைச்சொல் முடிவாக அமைந்தவை

  • மாடு வந்தது - என்பதில் மாடு - ஒருமை
  • மாடு வந்தன - என்பதில் மாடு - பன்மை

பெயர்ச்சொல் முடிவாக அமைந்தவை

  • மாடு அது - என்பதில் மாடு - ஒருமை
  • மாடு அவை - என்பதில் மாடு - பன்மை

இவற்றில் அது, அவை என்ற சுட்டுப் பெயர்கள் பயனிலையாக வந்தன.

இங்கு முடிக்கும் வினையாலும், பெயராலும் மாடு தன் பாலை உணர்த்திற்று. பாம்பு ஊர்ந்தன, மரம் வளர்ந்தன, மாடு வந்தன, பறவை பறந்தன. ஆகியவற்றில் சேரும் வினையால்(வந்தன, பறந்தன, ஊர்ந்தன, வளர்ந்தன என்பவை வினைச் சொற்கள்) பன்மை ஆயின.

மாடு அவை, பாம்பு அவை, மரம் அவை பறவை அவை எனச் சேரும் பெயரால் பன்மை ஆயின.


இத்தகைய வினையும் பெயரும் பயனிலையாக வருவது மட்டுமல்லாமல், அஃறிணைப் பெயருக்கு முன்னும் வந்து ஒருமை பன்மையினை உணர்த்தும். எடுத்துக்காட்டு

  • வந்தன மாடு,
  • பறந்தன பறவை
  • ஊர்ந்தன பாம்பு
  • வளர்ந்தன மரம்

என, வினைச்சொல் அஃறிணைப் பெயருக்கு முன்வந்து பன்மையைக் காட்டின.

  • அவை மாடு,
  • அவை பறவை
  • அவை பாம்பு
  • அவை மரம்

இங்குப் பெயர்ச்சொல் அஃறிணைப் பெயருக்கு முன்வந்து பன்மையைக் காட்டின.


மேலே குறிப்பிடப்பட்ட பெயர்களை, ஒருமைக்கும் பன்மைக்கும் ஒன்றாகவே பயன்படுத்துகிறோம். தற்காலத்தில் பேசும்போதும் எழுதும்போதும் மேலே காணும் பெயர்களைப் பன்மையில் குறிப்பிடும்போது பன்மைக்குரிய ‘கள்’ விகுதி சேர்த்துப் பறவைகள் மரங்கள் எனப் பயன்படுத்துவதும் உண்டு

பால்பகா அஃறிணைச் சொற்கள் அமைந்து வரும் தொடர்கள்

களிறு என்னும் சொல் ஒரு களிற்றைக் குறிக்குமாயின் அஃது ஒன்றன்பால். பல களிற்றைப் குறிக்குமாயின் அது பலவின்பால். களிறு என்னும் ஒருமைச் சொல்லும் வேறு சில ஒருமைச் சொற்களும் பன்மையைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

  • வாள் மறுப் பட்டன, போன்றன
  • தாள் [3] பறைந்தன, [4] போன்றன
  • தோல் [5] துளை தோன்றுவ, இலக்கம் [6] போன்றன
  • மா போன்றன
  • களிறு போன்றன

என வருவது காணலாம். [7] [8] இவ்வாறு வருவனவற்றைப் பால்பகா அஃறிணைப் பெயர்கள் என்கின்றனர்.

அடிக்குறிப்பு

  1. நன்னூல், சொல்லதிகாரம், பெயர்ச்சொல், நூற்பா. 281.
  2. நாலடியார். பா.135
  3. வீரர்களின் காலடிகள்
  4. பிறாண்டப்பட்டுக் கிடக்கின்றன
  5. தோலால் செய்யப்பட்ட மார்புக் கவசம்
  6. விண்மீன்கள்
  7. வாள்,வலந்தர, மறுப் பட்டன
    செவ் வானத்து வனப்புப் போன்றன!
    தாள், களங்கொளக், கழல் பறைந்தன
    கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
    தோல்; துவைத்து அம்பின் துளைதோன்றுவ,
    நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
    மாவே, எறிபதத்தான் இடங் காட்டக்,
    கறுழ் பொருத செவ் வாயான்,
    எருத்து வவ்விய புலி போன்றன;
    களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய்,
    நுதி மழுங்கிய வெண் கோட்டான்,
    உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன; (புறநானூறு 4)

    • வாள்கள் வெற்றி தந்து கறைபட்டுக் கிடக்கின்றன. குருதி படிந்து செவ்வானம் போல் காட்சி தருகின்றன.
    • வீரர்களின் காலடிகள் போர்க்களத்தில் நடந்து பிறாண்டப்பட்டுக் கிடக்கின்றன.
    • தோள்கள் அம்பு பாய்ந்து துளைபட்டுக் கிடக்கின்றன.
    • மா என்னும் குதிரைகள் கறுழ் என்னும் படிவாளம் பட்டுப் பட்டு வாய் சிவந்து காளைமாட்டைக் கொன்ற புலிவாய் போன்றன
    • களிறுகள் கோட்டைக் கதவுகளைக் குத்தி கூர் மழுங்கிய கொம்புடன் உயிர் உண்ணும் எமன் பான்றன