பாடம் கேட்ட பின்னர் பயிலும் முறை

பாடம் கேட்ட பின்னர்ப் பயிலும் முறை என்பது ஆசிரியரிடம் பயின்ற பாடநூலை மாணவன் எவ்வாறு பயில்வது என்று விளக்கும் நன்னூல் பகுதியாகும்.

மாணவன் தான் பயின்ற நூலின் உலக வழக்கு , செய்யுள் வழக்கு ஆகியனவற்றை அறிந்துகொள்ளும் வகையில் பயிலவேண்டும். தான் படித்த பாடத்தை மறவாமல் போற்றுதல், ஆசியரிடம் கேட்ட கருத்துகளை நினைவிற்கு கொண்டுவந்து சிந்தித்து அறிதல், அவ்வாறு சிந்திக்கும்போது எழுந்த ஐயங்களை மீண்டும் ஆசிரியரைச் சந்தித்துக் கேட்டுத் தெளிதல், தன்னோடு பயிலும் மாணவருடன் சேர்ந்து பயிலுதல், அவ்வாறு பயிலும்போது எழும் சந்தேகங்களை அவர்களிடம் விவாதித்து தெளிதல், உடன் பயில்பவர்களின் ஐயங்களைப் போக்க உதவுதல் போன்ற செயல்களைக் கடமையாகக் கொண்டால் மாணவனின் அறியாமை பெரிதும் நீங்கும்.[1]

ஒரு நூலை ஒரு முறை பாடம் கேட்பதோடு நில்லாமல் மறுமுறையும் ஒரு மாண்வன் கேட்பானாகில் பெரும்பாலும் தவறில்லாமல் கற்றவனாகக் கருதப்படுவான். எனவே மாணவன் ஒரு நூலை இரண்டுமுறை பயிலவேண்டும்.[2]

ஒரு நூலை மாணவன் மூன்றுமுறை பாடம் கேட்டால், அவன் அப்பாடத்தைப் பிறருக்கு கற்பிக்கும் வல்லமையைப் பெற்றுவிடுவான்.[3].

இங்ஙனம் ஒரு மாணவன் ஆசிரியர் உரைத்த நூற்பொருளை மும்முறை கேட்டு பயின்றாலும் ஆசிரியரின் புலமைத் திறத்தில் காற்பங்கே நிரம்பப் பெறுவான். அதற்கு மேலாக முழுமையாகப் பெற வேண்டுமாயின் அவன் தன் முயற்சியால் உழைத்துப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.[4].

அடிக்குறிப்புகள்

  1. நூல்பயில் இயல்பே நுவலின் வழககறிதல்
    பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
    ஆசான் சார்ந்தவை அமைவரக் கேட்டல்
    அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல்
    வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
    கடனாக் கொளினே மடநனி இகக்கும்.- நன்னூல் 41
  2. ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பின்
    பெருக நூலில் பிழைபா டிலனே. - நன்னூல் 42
  3. முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும் - நன்னூல் 43
  4. ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும்
    காற்கூ றல்லது பற்றல னாகும். - நன்னூல் 44

வெளி இணைப்புகள்