பல்யானைச் செல்கெழு குட்டுவன்

பல்யானைச் செல்கெழு குட்டுவன், சங்க காலச் சேர மன்னர்களில் ஒருவன். இவனது தமையனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். சங்க கால இலக்கியமான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து இவன்மீது பாடப்பட்டது.[1] இது தவிர வேறு சங்கப் பாடல்கள் எதிலும் இவனது பெயர் காணப்படவில்லை. இந்தப் பாடல்களுக்கு என்ன பரிசில் வேண்டும் என அரசன் புலவரையே கேட்டான். புலவர் “யானும் என் பார்ப்பினியும் சுவர்க்கம் புகவேண்டும்” என்றார். அரசன் பார்ப்பாரில் சிறந்தவரைக் கொண்டு 9 வேள்விகள் செய்தான். 10-வது வேள்வியின்போது பார்ப்பனப் புலவரும் பார்ப்பினியும் காணாராயினர். (மறைந்தனர்.) [2]

சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

25 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த இவன், நெடும் பாரதாயினார் என்னும் தனது குருவுடன் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இவனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டுச் சேர நாட்டின் ஆதிக்கத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. 500 சிற்றூர்களை அடக்கிய உம்பற்காடு எனப்படும் பகுதியைச் சேரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்[3], பூழி நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான், நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான் என்பது போன்ற தகவல்கள் பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றன.

பெயர்கள்

இவனது பெயரில் உள்ள 'பல்யானைச் செல்' என்பது செல் (மேகம்) போன்று தோன்றும் இவனது யானைப்படை.

  • பெரும்பல் யானைக் குட்டுவன் [4]
  • பூழியர் கோ [5]
  • பொலந்தார்க் குட்டுவன் [6]

ஆட்சி

  • உம்பற்காட்டைத் தன் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டுவந்தான்.[2]
  • அகப்பாக் கோட்டையை அழித்தான். பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம் உழிஞைப்போரில் அழித்தான்.[7]
  • முதியர் குடிமக்களைத் தன்னவராக்கித் தழுவிக்கொண்டு அவர்களுக்குத் தன் நாட்டைப் பகிர்ந்து அளித்தான்.[2]
  • செருப்பு நாட்டு மக்கள் பூழியர் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தனர்.[8]
  • தோட்டி மலைக் கோட்டையை அழித்தான் [9]
  • போர்க்களத்தில் பிணப் பெருஞ்சோறு அளத்தான்.[10]
  • வண்டியில் எருதுகளை ஓட்டுவோர் ஓசையும்,[11] பேரியாற்று வெள்ளமும் [12] அன்றி, வேறு ஓசை ஏதும் கேளாதபடி நல்லாட்சி புரிந்தான்.
கொடை
இவனது மன்றத்துக்கு வந்து பாடிய வயிரியர் எனப்படும் யாழிசைவாணர்களுக்குப் பொன்னணிகள் வழங்கினான்.[6]
விழா
யானைகளை வரிசையாகப் பூட்டி இரண்டு கடல்நீர்களைக் கொண்டுவரச்செய்து நீராடிவிட்டு அயிரை மலைத் தெய்வத்தை வழிபட்டான்.[2]
துறவு
இறுதிக் காலத்தில் நெடும்பார தாயனார் காட்டிய வழியில் காட்டுக்குச் சென்று துறவு மேற்கொண்டான்.[2]
வேள்வி
  • நெய்யைத் தீயில் ஊற்றும் ‘பெரும்பொயர் ஆவுதி’, நெய்யைச் சோற்றில் ஊற்றி வழங்கும் ‘சுடுநெய் ஆவுதி’ என்னும் இருவகையான வேள்விகளையும் செய்தான்.[5]
  • பரிவேள்வி (அஸ்வமேத யாகம்) செய்தான்.[13]

அடிக்குறிப்புகள்

  1. பல்யானைச் செல்கெழுகுட்டுவன் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்
  3. புலியூர்க் கேசிகன், 2005 பக். 65
  4. பதிற்றுப்பத்து 29
  5. 5.0 5.1 பதிற்றுப்பத்து 21
  6. 6.0 6.1 பதிற்றுப்பத்து 23
  7. பதிற்றுப்பத்து 22
  8. மிதியல் செருப்பின் பூழியர் கோவே – பதிற்றுப்பத்து 21
  9. உடன்றோர் மன் எயில் தோட்டி – பதிற்றுப்பத்து 25
  10. பதிற்றுப்பத்து 30
  11. பதிற்றுப்பத்து 27
  12. பதிற்றுப்பத்து 28
  13. பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா … முனை கெட விலங்கிய … அயிரை பொருந – பதிற்றுப்பத்து 21 (கொக்கு = குதிரை)

உசாத்துணைகள்

  • புலியூர்க் கேசிகன், பதிற்றுப்பத்து தெளிவுரை, புலியூர்க் கேசிகன், சென்னை, 2005 (மறுபதிப்பு).
  • செல்லம், வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002 (மறுபதிப்பு).